ஜவஹர்லாலும் சமதர்மமும்
பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
அதாவது தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமூகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்ல வென்றும், ஆனால் நாளாவட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்.
மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-5-36 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 கலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும்.
இதை அறியாமல் அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள்தனமே யாகும்.
குடி அரசு துணைத் தலையங்கம் 31.05.1936