திருச்சி கூட்டம் – I
திருச்சியில் பாண்டியன் ராமசாமி அறிக்கைப்படி ஏற்படுத்தப்பட்ட கூட்டம் 3536ந் தேதி நடந்து விட்டது. கூட்டத்துக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள் என்றால் அவர்களது அறிக்கைக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது என்பது யாவருக்கும் விளங்கும். அக் கூட்டத்தில் பிரசாரத்தைப்பற்றி முக்கியமாய்ப் பேசி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஏற்பாடுகள் காரியத்தில் நடக்கவேண்டும். அதன் பிறகு தான் கூட்டத்தின் வெற்றியைப் பற்றி பேச யோக்கியதை உண்டு.
“ஆண்டிகள் மடம் கட்டுவது போல்” என்று ஒரு பழமொழி சொல்லு வார்கள். அதாவது வாயில் பேசிவிட்டு காரியத்தில் அலட்சியமாய் இருப்பது என்பதற்கு இப்பழமொழி சொல்லப்படுவது. அப்படிப்போல் இக்கூட்ட நடவடிக்கையும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படாமல் இருக்க முடியவில்லை.
ஐஸ்டிஸ் கட்சியார் பிரசாரத்துக்கு பல கூட்டம் போட்டார்கள். சட்டசபை எலக்ஷன் தோல்வியும், ஜில்லா போர்டு எலக்ஷன் தோல்வியும் ஏற்பட்டும் கூட அவர்களது பிரசார முயற்சி எருமை மாட்டின் மீது மழை பெய்வது போலவே இருந்து வருகிறது. நெல்லூர் கூட்டம், குண்டூர் கூட்டம், விருதுநகர் கூட்டம், பிரண்ட் சன் பார்க்குக் கூட்டம் என பல கூட்டம் கூடி விட்டது. ஒரு காரியமும் நடக்கவில்லை. எனவே வருஷா வருஷம் லட்சக் கணக்கான ரூபாய் வரும்படி உள்ள மந்திரிகளும், ஆயிரக்கணக்கான வரும்படி உள்ள காரியதரிசிகளும் அவர்கள் பெரியவர்கள் வீட்டு வரும்படி போல் அனுபவிப்பவர்களாலேயே ஆகாத காரியம், இயக்கத்தால் யாதொரு பலனும் அடையாமல் நஷ்டமும், கஷ்டமும், கெட்ட பேரும் சம்பாதித்தவர்களால் என்ன செய்ய முடியும் என்று ஒருவர் யோசித்தால் அது தப்பாகிவிடாது.
என்றாலும் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் இதில் தைரியமாய் முன் வந்து பிரமுகர்கள் என்பவர்களை நெருக்க வேண்டும். ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத அபிமானிகள் தங்கள் தங்களால் கூடிய கவலை எடுத்து ஏதாவது ஒரு தொண்டு செய்ய முன் வரவேண்டும். பார்ப்பனரல்லாதார் இயக்க வேலை ஒரு எதிர் நீச்சல் வேலையைப் போல இருந்து வருகிறது.
பார்ப்பன ஆதிக்கம் அரசியலில் வலுத்து இருப்பதால் மந்திரிகள் தங்கள் காரியத்தைத் தவிர வேறு காரியம் பார்க்க முடியாமல் பார்ப்பனர்களால் செய்யப்பட்டு விட்டதால் உழைப்பவர்களுக்கு உதவி இல்லா விட்டாலும் கேடில்லாமலாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய் விட்டது.
என்றாலும் திருச்சி கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டித் தோழர்கள் தயவு செய்து சிறிதாவது திருச்சி தோழர்கள் முயற்சியை லட்சியம் செய்து தங்களால் கூடிய உதவி செய்து பிரசாரத்தை நடத்திக் கொடுக்க வேண்டுகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 10.05.1936