சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை
‘மனிதனை நெருங்கு பவன் கடவுளை நெருங்கு கிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்குத் தந்த மறைமொழி ‘மனிதனை நினை!’ என்பதேயாகும். ஆம்! தமிழகத்தின் கடந்த பலநூற்றாண்டு வரலாற்றை உற்றுநோக்கின் மனிதன் மதிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. மனிதரிலும் மகளிர் ஒரு பொருளாக எண்ணப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள், மதம், மொழி, பணம், சொத்து, பதவி இவைகள் மதிக்கப் பெற்ற அளவுக்கு ‘மனிதன்’ மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இருந்ததாகத் தெரிந்தாலும் அது அபூர்வ வாழ்க்கை. அது, இயற்கை நியதியன்று. அதனால் தானே வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பல கோடி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொறி புலன்கள் பயனற்றப் போயின. கல்வியறிவே இல்லாத மக்களாகப் பல கோடிப் பேரை வைத்திருந்து பல்லக்குச் சவாரி செய்த பெருமை உயர்சாதியினர்க்கு உண்டு. ஏன் இந்த...
