திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார்.

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

சென்ற இதழ் தொடர்ச்சி

இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த

ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று சொன்னார்கள். 1970ஆம் ஆண்டு வரையில் வறுமையில் இருந்த தமிழ்நாட்டை ஒரு மிகச் சிறந்த அரசியல் மாநிலமாக மாற்றியிருக்கிற பெருமை திராவிட அரசியல் கட்சிகளுக்கு உண்டு என்றும் சொல்கிறார்கள்.

இங்கு ஒரு கூட்டம் திராவிட அரசியல் பற்றி இழிவாகப் பேசுகிறது. ஆனால் அவர்களே திராவிட அரசியலில் மேற் கொண்ட ஒவ்வொரு திட்டங்களையும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் எப்படி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று மிக மகிழ்ச்சியோடு அவர்கள் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். ஜெயலலிதா மீதிருக்கிற ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும் கூட, அவருடைய மக்கள் நலத் திட்டங்கள் திராவிட அரசியலின் தொடர்ச்சி, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என்று அவர்கள் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் செயல்பட்ட சுயமரியாதை இயக்கம் – அது விளைவித்த சிந்தனைப்போக்கு – அதன் தொடர்ச்சியாய் அமைந்த திராவிட இயக்க அரசியல் இவற்றையெல்லாம் பற்றி எங்கோ இருக்கிற வங்காளத்துக்காரர் பேசுகிறார், பெல்ஜியம் நாட்டுக்காரர் பேசுகிறார். ஆனால் நாம்தான் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பதையெல்லாம் இந்த வேளையில் நாம் எண்ணிப்பார்க்கிறோம்.

வரலாற்றுக் காலத்திருந்து ஆரியர்களுக்கு மட்டுமே கல்வி, நமக்கெல்லாம் இல்லையே என்ற நிலையை மாற்றியிருக்கிறார்கள். நீதிக் கட்சி இருந்த கொஞ்ச காலத்தில் பள்ளிகளை தொடங்கினார்கள். கல்வித் துறையை தொடங்கினார்கள். பல்கலைக்கழகங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் அடித்தட்டு மக்களுக்கான கல்வி அவர்களை முழுமையாக அப்போது சென்றடையவில்லை. தொடக்கக் கல்வி பயில காமராஜர் ஆட்சி பெரிதும் உதவியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நீதிக்கட்சி காலத்துக்கு முன்பு எல்லா இடங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றி வைத்திருந் தார்கள். அவர்கள் கற்றிருந்த கல்வியின் காரணமாக வேலைவாய்ப்புகளையும், ஆட்சிப் பொறுப்பில் அதிகாரிகளாகவும் பார்ப்பனர்களே அமர்ந்திருந்த போக்கு நிலவியது. அதில் தப்பித்தவறி ஒரு தமிழன் அல்லது பார்ப்பனர் அல்லாதவர் நுழைந்து விட்டாலும் அவனை வெளியேற்ற செய்கிற வஞ்சனை என இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்டது.

பின்னர் அது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றானது. அதற்குப்பிறகு அந்த இயக்கம் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையால் நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. அந்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் கல்வி உரிமைகள் பற்றி பேசினார்கள். அவர்கள் தான் பெண்களின் உரிமை குறித்தும் பேசினார்கள். 1920ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பெண் களுக்கு வாக்குரிமை கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான அப்போது இங்கிலாந்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேய நாட்டில் பெண்களுக்கு இல்லாத உரிமையை, திராவிட இயக்கத்தின் தொடக்கக் கட்சியான நீதிக் கட்சிதான் வழங்கியது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் கலைஞர் கொண்டு வந்த பெண்கள் நலத் திட்டங்கள் எல்லாம் அதன் தொடர்ச்சிதான்.

திராவிட அரசியலின் தொடர்ச்சியாக அதனுடைய உச்ச நிலைக்குப் போய் கலைஞர் பணியாற்றியதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  கலைஞர் ஆட்சியின் சாதனைகள் என்று சொல்லுகிற போது ஒரு அரசியல்வாதியாக இருந்து செய்த சாதனைகள் ஒருபக்கம், எப்போதும் அவர் பார்க்கிற பார்வை ஒருபக்கம் என இரண்டையும் கவனிக்க வேண்டியுள்ளது. சாலையில் தார் ஊற்றுகிற ஒரு தொழிலாளி சாக்கைக் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறான் என்பது ஒரு முதலமைச்சர் கண்ணில் படுவதென்பது அதிசயம். அது கலைஞர் கண்ணில் பட்டது. உடனே அவர்கள் எல்லோருக்கும் ஜேக்பூட் (கால்களுக்கான உறை) கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார். ‘கைகளுக்கு அணிய கையுறை கொடுங்கள்’ என்றார். அவன் வெய்யிலில் வீதியில் நின்று கொண்டிருப்பதுவே அவலம். அப்படிப்பட்ட நிலையில் வெறுங்காலில் நிற்பதையும்,  வெறுங் கையில் வேலை செய்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று சிந்திக்கிற பார்வை கொண்டவர்களாகத்தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் இருந்திருக் கிறார்கள்.

நீதிக் கட்சியில் இருந்த தலைவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாக, ஜமீன் தார்களாக, அரசர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கும் இந்த பார்வைதான் இருந்தது. நீதிக்கட்சி ஒருகட்டத்தில் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதைப்பற்றி விளக்க வேண்டியத் தேவை இப்போது இல்லை.

நாம் ஏற்கெனவே இந்தித் திணிப்பைப் பற்றி பார்த்தோம். இந்தித் திணிப்பை எதிர்த்து 1930களில் இருந்து போராடுகிறோம். இந்தித் திணிப்பு ஆணை வந்தது 1937ஆம் ஆண்டில் தான். ஆனால் காங்கிரசிலிருந்து வெளியே வந்த பெரியார் 1926ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே ‘இந்தியின் இரகசியமும், தமிழர்க்கு துரோகமும்’ என்ற தலைப்பில்  ‘இந்தித் திணிப்புக்கு எதிராகக் குடிஅரசில் கட்டுரை எழுதினார். தொடக்கத்தில் இருந்தே இதைக் கவனித்து வந்த பெரியார் மிகக் கவனமாக அப்போதிருந்தே எழுதினார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து மாணவர் போராட்டமாகி, மக்கள் போராட்டமாக வெடித்தது.

1967ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னால் இவர்களை எப்படியாவது ஒழிக்க வேண்டு மென்று கருதிய இந்திரா காந்தி 1976ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆட்சியைக் கலைக்கிறார். 1963ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழி சட்டத்தை எழுதிவிட்டார்கள். அதில் இந்திதான் ஆட்சி மொழி என்று கூறப்பட்டது. ஆனால் அதிலும் சில விலக்குகள் வைத்தார்கள். இதன்படி மாநிலங்களை ஏ, பி, சி என்று பிரித்தார்கள். சி பிரிவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் வங்காளம் இருந்தது. சி பிரிவு மாநிலங்களுக்கு வருகிற அரசு ஆணைகள் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். தேவைப்பட்டால் இந்தி மொழி பெயர்ப்பு இருக்கும்.

ஆனால் இந்த சட்டத்துக்கான விதிகள் நீண்டகாலம் எழுதப்படாமல்தான் இருந்தது. 1976ஆம் ஆண்டில்தான் அதற்கான விதிகளை எழுதினார்கள். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பொறுப் பாளர்கள் பலரும் சிறையில் இருந்தார்கள். ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. திராவிடர் கழகத்தின் தலைவர்களும் சிறையில் இருந்தார்கள். மத்திய ஆட்சிக்கு எதிராக இருந்த அனைவரும் சிறையில் இருந்தார்கள். ஆனால் விதி எழுதப்பட்ட போது விதி எண் ஒன்றில் உட்பிரிவு 1 சட்டத் தின் பெயரைக் குறிப்பிட்டது. உட்பிரிவு 2இல் இந்த சட்டம் இந்தியா முழுவதும், தமிழ் நாட்டைத் தவிர மற்ற எங்கும் செல்லுபடி யாகும் என்று குறிப்பிட்டது. ஆட்சி கலைக்கப் பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தபோது கூட தமிழகத்தைப் பற்றிய அச்சம் மத்திய அரசின் மனதில் இருந்தது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் மட்டும்தான் வெளியில் இருந்தார். திராவிடர் கழகத்தில் மணியம்மையார் மட்டும்தான் வெளியில் இருந்தார்.

அப்படியானால் இந்தி எதிர்ப்புக்கு எதிராக எவ்வளவு பெரிய தாக்கத்தை தமிழ்நாடு ஏற்படுத்தியிருக்கும் என்பதை சிந்திப்பதற்காக இதைச் சொல்லுகிறேன். நாம் அறியாத பல பெருமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால் அன்றாட நிகழ்வுகளின் பின்னால் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். இவற்றை அறிந்துகொள்ள நாமாக வாய்ப்பை ஏற்படுத்தித்தான் பேச வேண்டியுள்ளது.

கலைஞருடைய இறுதி ஊர்வலத்தில் ஒன்றைப் பார்த்தோம். வடக்கே இருந்து பார்த்தவர்களும், உளவுத் துறையும் அதிர்ச்சி யடையும் வண்ணம் அந்த இறுதி ஊர்வலத் தில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலா னோர்கள் இளைஞர்களாக இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்களின் கண்ணுக்கு அச்சத்தை ஊட்டியிருக்கிறது. அதற்குப் பின்னால் சமூக வலைதளங்களில் நடந்த விவாதங்கள் இன்னும் திராவிட இயக்க சிந்தனை அடிமட்டத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது என்பதைத்தான் காட்டியது.

அதற்கு அடுத்ததாக இப்போது நடக்கிற கூட்டங்களும் ஒரு உதாரணமாகும். எந்த அமைப்பையும் சாராத இளைஞர்கள், திராவிட வேர்கள் என்கிறார்கள், திராவிட விழுதுகள் என்கிறார்கள். புதியப் புதிய பெயர்களில் தங்களை இணைத்துக்கொண்டு ஆங்காங்கே கலைஞரின் நினைவுநாளை, நினைவேந்தலை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். திராவிட அரசியலின் தேவை என்பதைத்தான் இந்த நிகழ்ச்சிகளில் பேசுகிறார்கள்.

திராவிடம் என்று பெயர் வைத்துக் கொள்வது அரசியல் அல்ல. உண்மையான திராவிடத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அந்த அரசியலின் ஒரு பங்காகத்தான் நாம் இன்று கூடியிருக்கின்றோம். இதில் நம்முடைய பழைய திராவிட அரசியல் என்பதைப் பார்ப்பனர்களை திட்டுவார்கள் என்ற அளவில் மிகச் சாதாரணமாக, மிக எளிமையாகப் புறந்தள்ளுகிறார்கள். நம்மை உதாசீனப்படுத்தி தள்ளுவதற்காக எதிரிகள் இவ்வாறு பேசிக்கொண்டே வந்தார்கள். பார்ப்பனர் என்ற தனிமனிதர் மீது நமக்கு எந்தக் கோபமும் இல்லை. பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்று விருப்பமா என்று பெரியாரிடம் கூட கேட்டார்கள். “அப்படியெல்லாம் இல்லை. பார்ப்பான் மனிதனாக வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார் பெரியார். அவர்கள் மனிதர்களாக இல்லாமல் ஆதிக்கக்காரர்களாக இருக்கிறார்கள். அதுதான் கோபமே தவிர, தனிமனிதன் மீது எங்களுக்கு என்ன கோபம். ஏதேனும் சொல்லி இனத்தூய்மை பார்த்து மக்களைப் பிரிக்கிற பாசிசக் கொள்கை அல்ல எங்கள் கொள்கை. எல்லா மக்களும் ஒன்றுசேர விரும்புகிற நாங்கள், ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறவர்கள் மீது குறிவைக்கிறோம். ஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருதாமல் தங்களுடைய மேலாண்மையை நிறுவிக்கொள்ளத்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.

சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொள் என்கிறான். இந்தி கட்டாயம் என்கிறான். சுற்றறிக்கையை இந்தியில் எழுத வேண்டும் என்கிறான். இந்தியில் கையெழுத்திட வேண்டுமென்கிறான். எதற்கு அது தேவை? இந்த நாட்டு மக்களோடு செயல்படுகிற எனக்கு என் நாட்டு மொழி தெரிந்தால் போதும். நாம் கருதிக் கொண்டிருப்பதைப் போல உலகம் முழுக்க யாரும் ஆங்கிலம் பேசுவது இல்லை. அவர் மொழியில் பேசினால் மொழிபெயர்ப்பு வருகிறது, கேட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏன் இந்தியிலேயே பேச வேண்டும்? நாங்கள் தமிழில் பேசுகிறோம். வேண்டுமானால் மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளட்டும். ஆனால் அதற்குக் கூட தடையாய் இருந்ததை உடைப்பதற்கு எழுந்ததுதான் திராவிடர் இயக்கம்.

(தொடரும்)

தொகுப்பு: ர.பிரகாசு

பெரியார் முழக்கம் 18102018 இதழ்

You may also like...