”போலி சுவரொட்டிகளுக்கு மறுப்பு !” – மயிலாடுதுறை 19102018

 

இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலை தளங்களில் சமூக விரோதிகளால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில் பரப்பப்டுவதாக அறிகிறோம்.

எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும் வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று 19.10.2018 அன்று காலை கழக வழக்கறிஞரும் நாகை மாவட்ட பொறுப்பாளருமான தோழர் இளையராஜா,கழக பொறுப்பாளர்கள் தோழர் மகேஸ்,செந்தில் குமார், நடராஜ்,தில்லை நாதன்,விஜயராகவன்,நாஞ்சில் சங்கர் ஆகியோர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.இன்று மாவட்ட காவல்துறை காண்காளிப்பாளரிடமும் புகார் அளிக்க உள்ளனர்.

இந்த போலி சுவரொட்டிகளை பரப்புபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கழக வழக்கறிஞர்கள் ஆவண செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே இது போலவே ராமரதயாத்திரை என்று இந்துத்துவவாதிகள் பயணம் மேற்கொண்டபோது அவர்களை அம்பலப்படுத்தி மயிலாடுதுறையில் கழகத்தோழர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கழகதோழர் நாஞ்சில் சங்கர் (நேற்றைய புகார் அளிக்கும் படத்தில் வேட்டி அணிந்திருக்கும் தோழர்)அவர்கள் இரண்டாம் நாளே இறந்துவிட்டதாக போலியாக படம் தயாரித்து மிக இழிவான பொய் பிரச்சாரத்தை அப்போதும் செய்தனர் காவிகள்.(படம் இணைப்பு)

தன் வீட்டில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை எதோ ஒரு சுயநல காரணங்களுக்காக வீசிவிட்டு வேறொருவர் வீசியதாக நாடகமாடி கலவரத்தை உண்டாக்க முயல்வது,முகநூலில் பதிவிட்டுவிட்டு அட்மின் பதிவு செய்தார் என கோழைத்தனமாக பொய்பேசி தப்பித்துக் கொள்வது, நீதி மன்றத்தை இழிவாக பேசிவிட்டு அது எடிட் செய்யப்பட்டது என பொய் சொல்லுவது என்று எந்த விதமான நேர்மையும் உண்மையும் துளியும் இன்றி பேச்சிலும்,செயலிலும் மிக மிக மோசடித்தனமாக நடந்து கொள்வதுதான் இந்த இந்துத்துவவாதிகளின் தொடர்ந்த செயலாக இருக்கிறது.இப்போது கழகத்தின் பெயரில் போலி சுவரொட்டி வடிவமைப்புகளையும் பரப்புவதும் இவர்களின் நேர்மையற்ற கீழ்த்தரமான பொய் பிரச்சாரங்களில் ஒன்று.

பண்டிகைகள் என்ற பெயரால், இன இழிவை நம் மீது சுமத்துவதையும், பார்ப்பனர்கள் கற்பனைகளாக சொல்லும் இந்து மத புராண இதிகாசங்களில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையும்,ஆபாச செய்திகளையும் பற்றி, இவ்வுண்மைகளை அறியாமல் பின்பற்றும் நம் மக்களிடம் அவர்கள் சொல்லும் சொற்களிலேயே பரப்புரை செய்யும் பெரியாரின் பாதையில்தான் திராவிடர் விடுதலைக் கழகம் திராவிடர்களை இழிவுபடுத்தும் ஆரியர்களின் புரட்டுக்களை மக்கள் மன்றத்தின் முன்னால் பரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறதேயன்றி போலிகள் தயாரித்துள்ள சுவரொட்டிகளில் உள்ளவையொத்த அநாகரிக வார்த்தைகளால் அல்ல.

தீபாவளி ஆரிய – திராவிட முரணைச் சொல்லும் ஒரு பார்ப்பன இந்து மத கற்பனைக் கதை என்பதும், அவற்றின்வழியே திராவிடர்களை இழிவு படுத்தும் ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்தவே நரகாசுர வதம் எனும் கதையின் உண்மை உள் நோக்கத்தை பரப்புரை செய்கிறோம்.

பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துவதும், பட்டாசு சத்தம் ஒலிமாசு (sound pollution) ஏற்படுத்தி வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கும் பெரும் பாதிப்பை உருவாக்குவதும்,பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளால் ஏற்படும் நில, நீர் மாசு,- குழந்தை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடூரங்கள், விபத்துக்கள் ஆகியவை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிலாளர், குழந்தைத் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராடுவோரும், அரசும் கொடுக்கும் ஆய்வறிக்கைகளின் அடிப்படையிலேயே பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும்படி நாமும் கூறுகிறோம்.

இந்து மத பண்டிகைகளுக்கு மட்டுமல்ல எந்த நிகழ்விற்கும் பட்டாசு வெடிப்பது தவிர்க்க வேண்டிய செயல் என்பதே நமது பரப்புரை .

– திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...