திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக அமைப்புகளை புதுப்பிப்பது என்றும் அந்த சந்திப்பின்போதே கழக ஏடுகளுக்கான உறுப்பினர் சேர்ப்பு கணக்குகளை தோழர்கள் முடித்து கழகத்தலைவரிடம் வழங்கிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
செயலவையில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் வழியாக கல்வி நிறுவனங்களில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், கழக மகளிர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 18102018 இதழ்