சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை

‘மனிதனை நெருங்கு பவன் கடவுளை நெருங்கு கிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்குத் தந்த மறைமொழி ‘மனிதனை நினை!’ என்பதேயாகும். ஆம்! தமிழகத்தின் கடந்த பலநூற்றாண்டு வரலாற்றை உற்றுநோக்கின் மனிதன் மதிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. மனிதரிலும் மகளிர் ஒரு பொருளாக எண்ணப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள், மதம், மொழி, பணம்,  சொத்து, பதவி இவைகள் மதிக்கப் பெற்ற அளவுக்கு ‘மனிதன்’ மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இருந்ததாகத் தெரிந்தாலும் அது அபூர்வ வாழ்க்கை. அது, இயற்கை நியதியன்று. அதனால் தானே வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பல கோடி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொறி புலன்கள் பயனற்றப் போயின. கல்வியறிவே இல்லாத மக்களாகப் பல கோடிப் பேரை வைத்திருந்து பல்லக்குச் சவாரி செய்த பெருமை உயர்சாதியினர்க்கு உண்டு.

ஏன் இந்த அவலம்? மனிதனை மதிக்கும் பண்பு நம்முடைய பண்பாட்டில் இல்லை! எல்லாரும் கடவுளை மட்டுமே நாடுகிறார்கள்! நெருங்குகிறார்கள்! ‘மனிதனை நெருங்குபவன் கடவுளை நெருங்குகிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. இன்னும் நமது நாட்டில் மனித மதிப்பீட்டுச் சமுதாயம் தோன்ற வில்லை. கடவுளும் பணமும்தான் மதிக்கப்படு கின்றன. கடவுளுக்குப் பணம் துணை பணத் துக்குக் கடவுள் துணை. இது இன்றைய சமுதாயப் போக்கு இந்தப் போக்கு மாற வேண்டும்.

பெரியாரின் இலட்சியம்!

மனிதன், மனிதத்துக்காக மதிக்கப் பெறதல் வேண்டும். மனிதம் மொழி, இனம், சாதி, மதம் இவைகளின் காரணமாக ஒதுக்கப் படுதல் கூடாது. மனிதம் அது ஆணாயினும் பெண்ணா யினும் மதிக்கப்படுதல் வேண்டும். போற்றப் படுதல் வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கை. “சாதி வேற்றுமைகள் இயற்கை, தீண்டாமை, சுகாதார அடிப்படை யில் தோன்றியது” என்ற நச்சுத் தன்மை வாய்ந்த கருத்துகளைப் பெரியார் கடுமை யாகச் சாடினார். சாதிகள்இல்லாத சமுதாய  அமைப்பே பெரியாரின் இலட்சியம்! மனிதமே, உயர்வில் உயர்வானது மனிதம் போற்றப்படு கின்ற, மனிதம் மதிக்கப்படுகின்ற நாடுகள் முன்னேறுகின்றன. இதற்கு ஜப்பான் ஒரு எடுத்துக்காட்டு! நமது நாட்டில் மனிதம் மதிக்கப்படுவதில்லை. நமது நாட்டில் மனிதனை மதிக்காமல், மனிதனின் உள்ளீடுகளைத் தூண்டி வளர்க்காமல் அழிக்கத் தொடங்கியதன் விளைவே அடிமைத்தனம். சுதந்திரம் என்பது பல துறைகளிலும் வளர்ந்த மனித உலகம் சுவாசிக்கும் காற்றாகும். நமது நாட்டு மக்கள் இந்தக் காற்றைச் சுவாசித்ததில்லை; இதுவரையில் சுவாசிக்கவில்லை; சுவாசிக்கும் முயற்சி இல்லை. “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பார் திருவள்ளுவர். இன்று எங்கும் அச்சம் – பயம் ஏன்? மக்கள் கருத்து, சம்பிரதாயங்கள், மரபுகள் இவையெல்லாம் மனிதனை அச்சுறுத்தி அடிமைப்படுத்துகின்றன.

கருத்துக்குப் பயப்படும் கொடுமை!

மக்கள் யார்? அவர்கள் கருத்து என்ன? நூற்றுக்கு எழுபத்து ஏழு விழுக்காட்டினர் எழுத்தறிவு  இல்லாதவர்கள். இவர்களுக்கு ஏது கருத்து? இவர்கள் கருத்தில் மேலாதிக்கம் செய்பவை, சூது செய்யும் படித்தவர்களின் கருத்துகள் அல்லது சம்பிரதாயங்கள், பழக்கங்கள், வழக்கங்கள் ஆகியவை தாமே! மக்கள் எந்தக் காலத்தில் நல்ல கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்? மக்கள் கருத்துக்குப் பயந்து கொண்டு சிந்தனையை, பகுத்தறிவை இழப்பது கொடுமை! கொடுமை!

அடுத்து, மனிதன் நடைமுறைப்படுத்தும் மரபுகள், சம்பிரதாயங்கள் இன்றைய மனித வாழ்வுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. அவை எங்ஙனம் ஒத்ததாகும்? பேரனுக்கு, தாத்தா, சட்டை தைத்து வைக்க இயலுமா?

அடுத்து, படித்தவர்கள், இவர்களில் பலர் சிந்திப்பதில்லை. இல்லை, சிந்திக்க மறுக் கிறார்கள். இவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி! எரிகிற மெழுகுவர்த்தி யால்தான் பிறி தொன்றை எரிக்கச் செய்ய முடியும். ஆதலினால் மனிதன் சிந்திக்க மறுத்த நாளிலிருந்து மனிதனை மதிக்கத் தவறி விட்டான். மனிதமே கெட்டது. அதனால் தலைவர் பெரியார், ‘மனிதனை நினை!’ என்றார். மனிதனை நினைப்போம்! சாதிகளை, மதங்களைக் கடந்து மனிதனை நினைப்போம்!

நன்றி : 1991ஆம் ஆண்டு வெளி வந்த ‘விடுதலை’ பெரியார் 113ஆவது ஆண்டு பிறந்த நாள் மலர்

 

 

பெரியார்அடிகளார் ஒரே மேடையில் விவாதம்

1961ஆம் ஆண்டு தி.மு.க.வி லிருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து, தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அதன் தொடக்க விழா மாநாடு சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் (தற்போது புறநகர்  தொடர் மின்வண்டி நிலையம் இருக்கும் இடம்) நடந்தது. மாநாட்டின் சிறப்பு  அழைப்பாளராக பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு அரசியல் கட்சியின் தொடக்க விழா மாநாடு என்றாலும் அது பெரியாரும் குன்றக்குடி  அடிகளாரும் கடவுள் – மதம் குறித்து விவாதித்த மாநாடாகவே மாறிவிட்டது. கருத்து மாறுபாடுகளை எவ்வளவு நாகரிகத்துடன் உரையாடல்களாக பெரியார் நடத்தினார் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது. இந்த நிகழ்வை மறைந்த சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு, ‘தந்தை பெரியார் வாழ்வில்’ என்ற தொகுப்பில் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து…

“அடிகளார் தமது பேச்சை மிகப் பக்குவமாகத் துவக்கி அய்யா அவர்களையும் தோழர் சம்பத் அவர்களையும் பிரிந்து வந்த தோழர்களையும் பாராட்டிவிட்டு தனது பக்தி மார்க்கப் பிரச்சாரத்தில்   முழு வீச்சில் ஈடுபட்டு விட்டார்! கட்சியோ புதியதாகப் பிறந்த அரசியல் கட்சி அருகிலோ முழு முதல் கடவுள் மறுப்பாளராகிய தந்தை பெரியார் அவர்களும் அவரது தோழர்களும் அடிகளார் இந்தச் சூழ்நிலையைச் சிறிதும் பொருட்படுத்தாது தமது கருத்தை வலியுறுத்தி கடவுள் நம்பிக்கை ஒன்றுதான் மனிதனை முன்னேற்றும் என்றும், மதம் இன்றி மனிதன் வாழ்தல் இயலாது என்றும் அப்பரைப் போன்று பொதுத் தொண்டு, இறைத் தொண்டு செய்பவர்களை இப்போது காண்பது அரிதாகிவிட்டது என்றும், பகுத்தறிவு வாதம் என்பது அல்லது கடவுள் மறுப்பு என்பது ஒரு விவாதக் கருத்தாகக் கொண்டு வாதம் செய்ய உபயோகப்படுமே தவிர வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சிறிதும் உதவாது என்றக் கருத்துப்பட பேசி கடவுள் நம்பிக்கையை அவரளவில் மிகமிக ஆணித்தரமாகப் பேசி முடித்தார்.

அடுத்து தந்தை பெரியார் பேச அழைக்கப்பட்டார். அய்யா அவர்கள் வழக்கம்போல சம்பத் மற்றும் கண்ணதாசன் அவர்களையும் பலபடப் பாராட்டி பேசிவிட்டு புதிதாக தோன்றியிருக்கும் தமிழ் தேசியக் கட்சி தமிழ் மக்களின் திராவிட மக்களின் மேம்பாட்டுக்காக அரசியல் பொருளாதார சமுதாய மேம்பாட் டுக்காக நல்லவண்ணம் பாடுபடும் என்று நம்புகிறேன் என்று கூறி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் அடிகளார் கூறிய கடவுள் பற்றிய தத்துவக் கருத்துக்கு பதில் கூறும் வகையில் “இங்கே நமது பெரும் மதிப்புக்குரிய சன்னிதானம் (அடிகளாரை அய்யா அவர்கள்  அப்படித்தான் முன்னிலைப்படுத்துவார்) அவர்கள் பேசும்போது கடவுள் நம்பிக்கைப் பற்றி கொஞ்சம் அளவுக்கதிகமாகவே விளக்கம் கொடுத்து கடவுளை நம்புவதும் வழிபடுவதும் தான் மனித வாழ்க்கையின் முக்கியத் தேவை என்பதாகக் குறிப் பிட்டார்கள். மகா சன்னிதானம் அவர்களை மிகப் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மனித சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக உள்ளபடியே பயன்படக் கூடிய கடவுள் பெயரைச் சொல்லி அதற்கு ஆதாரமான சாஸ்திரங்களைக் கூறி சன்னிதானம் அவர்களது திருக்கையாலே இப்பொழுது இந்த மேடையிலேயே விபூதியோ, குங்குமமோ கொடுத்தால் அந்த வழியிலேயே பாடுபடக் காத்துக் கொண்டிருக்கிறேன். மகாசன்னிதானம் அருள்கூர்ந்து எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறேன், பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி அடிகளார் பக்கம் திரும்பி (உம் சொல்லுங்கள்) என்பது போல தனது பார்வையைச் செலுத்தினார். குன்றக்குடி அடிகளார் அவர்கள் வாயைப் பிளந்து சிரித்த படியே மேலேயும், கீழேயும் அய்யா அவர்களையும் பார்த்தபடியே சில நொடிகளைப் போக்கிவிட்டு மௌனம் சாதித்துவிட்டார்! அய்யா அவர்கள் ஒரு சில மணித்துளிகள் பொறுமையாக இருந்துவிட்டு பிறகு தொடர்ந்து பேசலானார்கள். இப்படித் தானுங்க! கடவுளை பத்தி அதோட சக்தியைப் பற்றி லீலைகளைப் பற்றி ரொம்ப விளக்கமாகப் பேசுவாங்க. பக்தி இல்லா விட்டால் மனித சமுதாயமே அழிந்து போய்விடும், பக்தி இல்லாதவனுக்கு மோட்சம் கிடைக்காது, நரகம் தான் கெடைக்கும் என்றெல்லாம் சாபம் கொடுப்பாங்க. நெருங்கிக் கேட்டால் பேசாமல் வாயை மூடிக்குவாங்க! நம்ப மகாசன்னிதானமே இப்படியிருந்தா மத்தவங்களப் பத்தி நான் என்ன சொல்ல இருக்குது! ஒன்றை மட்டும் மனசுலே தெளிவா புரிஞ்சுக்குங்க, கடவுள் பக்தி இல்லைன்னாலோ நம்பிக்கையில் லேனாலோ மோட்சம் கிடைக்காது, நரகம் தான் கிடைக்கும்னு சொல்றாங்க! எனக்கு பக்தி கிடையாது. போனால் போகட்டும் எனக்கு நரகம் கெடைக்குமுனா அது என் ஒருத்தனோட போயிடும். ஆனால் எனக்கு ஒழுக்கம் இல்லைன்னாலோ அது நமது சமுதாயத்தையே பாதிக்குமே அதைப் பத்தி சன்னிதானம் போன்றவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்! பக்தியைவிட ஒழுக்கம் – ஒழுக்கம்தான் மனித வாழ்க்கைக்கு அவசியமானது, தேவையானது என்பது வெளிச்சமா நல்லாவே புரியுமே! மனித வாழ்க்கைக்கு கடவுளைவிட கடவுள் பக்தியைவிட நல்ல ஒழுக்கம், உழைப்பு இது இரண்டுதான் முக்கியம். அவசியம், அதைவிட்டு விட்டு கடவுள் பக்தி வெங்காயம் அது, இது இதையெல்லாம் நம்பாவிட்டால் நரகம் கெடைக்கும். நாசமா போயிடுவோமுன்னு பயங் காட்டுறாங்களே! ஏன் இந்த வீண் வேலை? சாயபுகளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டுன்னாலும் அதற்கு உருவம் இல்லைன்னு சொல்லிப் போட்டாங்க. கிறிஸ்தவனும் ஏசநாதரை தேவகுமாரன்னு சொல்லி அவர் பேர வைச்சுப் பொழப்பு நடத்துறாங்க – நம்ம கடவுள்களை எடுத்துக்கிட்டா எந்தக் கடவுளுக்காவது ஒழுக்கம் இருக்கா! கொலை பண்ணாத அடுத்தவன் பெண்டாட்டியை கெடுக்காத யோக்கியமான கடவுள் ஏதாவது ஒன்றையாவது காண்பிச்சு வச்சுருக்கானா? எல்லாமே காட்டுமிராண்டி காலத்திலே கற்பிக்கப்பட்ட யோக்கியமோ ஒழுக்கமோ இல்லாத கடவுள்கள்! இதுங்களை நம்பாமல் போனா என்னா குடியா முழுகிப் போகும் என்று தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக மிகத் தெளிவவாக விளக்க உரையாற்றினார்கள்.

அடிகளார் வாயைத் திறக்காமல் மிகவும் ரசித்துக் கேட்டபடியே கடைசி வரை இருந்தார். சம்பத் அவர்களுக்கோ அரசியல் மேடையை அய்யா இப்படி முற்றாக மூட நம்பிக்கை ஒழிப்பு மேடையாக மாற்றி விட்டாரே என்று சிறிது வருத்தம் இருந்தாலும் சிறிதும் கூட்டம் கலையாமல் ஆரவாரமாக ரசித்துக் கேட்டதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.

நிமிர்வோம் செப் 2018 இதழ்

You may also like...