தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்

“விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். அதில் நான், கட்சி, தமிழினம், நாடு, உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழ்வதைக் கண்டேன்.

காலத்தின் மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்தே தொடங்கட்டும்.

இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க. ஸ்டாலின் ஆகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்.

தி.மு.க.வின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் தி.மு.க.வினர் என்பவர் யாராக இருப்பர் என்றால், தன் ஜாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன்பிறப்பாக நினைப்போரும், எளியோருக்குக் கரம் கொடுப்போரும் தான்.

நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. நாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிப்போர். யார் தவறு செய்தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர் தான் தி.மு.க.வினர்.

அந்த அழகான எதிர்காலத்தில் தி.மு.க. கொள்கைகள் என்ன?

பகுத்தறிவின் மூலம் உலகைக் கண்டு, அதை உரக்கச் சொல்லுதல், ஆணுக்கு பெண் இங்கு சமம் என மதித்தல்; திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சம உரிமை பெற்றுத் தருதல்; தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல்; கருத்துச் சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்தல்; பிறமொழிகளை அழித்து இந்தியா முழுவதுக்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல்; இவை எல்லாம் என் நீண்ட கனவின் சில துகள்கள்.

இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இதோ இந்த  நொடியிலிருந்து மெய்ப்படப் போகிறது.

இது என் கனவு மட்டுமல்ல, தி.மு.க.வின் கனவும். இந்தக் கனவு மெய்ப்பட வா! என்று தொண்டர்களை அழைக்கிறேன்.

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா!

முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசைத் தூக்கி எறிய வா!

நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னே வாருங்கள் என்று அழைக்கவில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம்.”

– தி.மு.க. பொதுக் குழுவில் தலைவர் பதவி ஏற்றவுடன் நிகழ்த்திய உரையிலிருந்து

நிமிர்வோம் ஆகஸ்ட் 2018 இதழ்

You may also like...