144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?
144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான்.
இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர். 144 வருடங்களுக்கு முன்னால் தண்ணீரே ஓடாத தாமிரபரணியில் புஷ்கர விழா எப்படி நடத்தப்பட்டது?
மேலும் இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் தமிழகத்தில் பெரும் ஆலய நுழைவுப் போராட்டங்களை நாடார்கள் நடத்திய வருடங்களும் கூட. 1872 ல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள்ளும், 1874 ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், 1876 ல் திருத்தங்கல் கோவிலிலும், 1897 ல் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், 1899 ல் சிவகாசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் ஆலயப் பிரவேசப் பெரும் போராட்டங்களை நாடார்கள் நடத்தினர்.
நாடார்கள் ஆலயம் நுழைவதால்தான் பெரும் பஞ்சங்கள் ஏற்படுகிறது என சனாதனவாதிகள் பிரச்சாரம் செய்த காலமும் இதுதான். இதையொட்டியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள 1899 சிவகாசி கலவரம் நடந்தது. இந்தக் கலவரத்தையொட்டி அங்கிருந்து வெளியேறிய நாடார்கள் தாங்கள் புதிதாகச் சென்று குடியேறிய ஊர்களில் சிவகாசி நாடார் உறவின்முறை என்று பெயர் வைத்திருப்பார்கள். பார்ப்பனிய அடக்குதலுக்கு எதிராகப் போராடியது சமூகம் நாடார் சமூகம்.
‘தாமிரபரணியை காவிகளிடமிருந்து காப்போம்!’
பெரியார் முழக்கம் 18102018 இதழ்