பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

புனித நூல்களாகக் கருதும் சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப், இஸ்லாமியர்களின் குரான், இந்து பார்ப்பனர்களின் ‘பகவத்கீதை’ ஆகியவற்றை சேதப்படுத்துவோர், களங்கப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த தண்டனைச் சட்டப்படி உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது ஆயுள் தண்டனையாக மாற்றி திருத்தம் செய்திருக்கிறது பஞ்சாப் மாநில அரசு.

‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற சட்டம் ஏற்கனவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத நூல்களை பகுத்தறிவு அடிப்படையில் கேள்விக்குட்படுத்தினாலே மத உணர்வைப் புண்படுத்துவதாக மதவாதிகள் கூச்சல் போட்டு பகுத்தறிவு சிந்தனைகளை முடக்கத் துடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

“நான்கு வர்ணத்தை நான் தான் படைத்தேன் என்று பகவான் கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையை நியாயமாக தடை செய்திருக்க வேண்டும். அதை முட்டாள்களின் உளறல்” என்றார், புரட்சியாளர் அம்பேத்ககர். இப்போது அம்பேத்கர் இருந்திருந்தால் பஞ்சாப் சட்டப்படி ஆயுள் தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதே மதத்தையும், கடவுளையும் அவமதிப்பதாகும். இந்தப் புனித நூல்களை எதிர்ப்போரை கடவுள் தண்டிக்க மாட்டாரா? சட்டம் போட்டுத்தான் தண்டிக்க வேண்டும் என்றால், அதுவே ‘கடவுள் மத நிந்தனை’ அல்லவா?

நிமிர்வோம் ஆகஸ்ட் 2018 இதழ்

You may also like...