பார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’
வேதகால பார்ப்பன ஒடுக்குமுறை கலாச் சாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பார்ப் பனர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக் கிறார்கள். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் தாமிரபரணி மகா புஷ்கரம். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி, பிறகு விடுதலையான இறந்துபோன காஞ்சிபுரம் ஜெயேந்திரன், காவிரி புஷ்கரத்தை நடத்தினார். இப்போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே கடலில் கலக்கும் ஒரே நதியான தமிழர் பண்பாட்டோடு இணைந்து நிற்கும் தாமிர பரணிக்கு வேத முலாம் பூசி புஷ்கரம் நடத்துகிறார்கள்.
அது என்ன புஷ்கரம்? குருபகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசியான விருச்சிக இராசிக்கு ‘வீடு’ மாற்றுகிறானாம். முன்பணம் வாடகை இல்லாமல் வீடுகளை மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த இராசி பகவான்களுக்கு மட்டுமே உண்டு. தாமிரபரணி விருச்சிகராசிக்கான நதியாம். 144 ஆண்டு களுக்குப் பிறது இந்த விழா கொண்டாடப் படுவதால் இது மகாபுஷ்கரமாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது புஷ்கரமாம்.இந்த ‘மகா புஷ்கரத்’துக்கு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஏற்பு வழங்கவில்லை. ‘கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் பகவானை’ ஆற்றங்கரைக்கு அழைக்க வேதசடங்குகள் நடத்துவது ‘ஆகமவிதி’களுக்கு எதிரானது என்று அறநிலையத் துறை கூறுகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை ஆகம விதிகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று அலறி உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடும் பார்ப்பனர்கள், தாமிரபரணி மகாபுஷ்கரம் ஆகமத்துக்கு எதிரானது என்றால் அதைக் கொண்டாடியே தீரவேண்டும் என்கிறார்கள்.
‘இராசிபலன்’ குரு பெயர்ச்சிகளின் அடிப்படையில் மனிதர்களின் ‘எதிர்காலத்தை ‘, ‘கடந்தகால பாவங்களை’த் தீர்ப்பதற்கான ‘பரிகாரங்கள், தோஷக் கழிப்பு’களைக் கூறிவந்த கூட்டம் இப்போது நதியையும் விட்டு வைக்கவில்லை. தாமிரபரணிக்கு ‘விருச்சிக இராசி’ என்று எந்த சோதிடன் குறித்து வைத்துள்ளான்? நதிகளுக்கான ‘இராசி’, விலங்குகளுக்கும் உண்டா? தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் நதிக்கு எப்படி வடமொழிப் பெயர் சூட்டி, ‘புஷ்கரம்’ கொண்டாடுகிறார்கள்?
நதியின் தூய்மையைக் கெடுப்பதே இந்த சடங்குகள்தான் என்பதை மறுக்க முடியுமா? நதியில் மூழ்கி உடுத்திய ஆடையை அப்படியே நதிக்குள் போடும் சடங்குகளால் தாமிரபரணி நதி நீர் எவ்வளவு பாழாகியது என்பதை இவர்கள் யோசித்தார்களா? கடலுக்குள் விநாயகன் சிலைகளைக் கரைப்பதும் செத்த பிணங்களை பாதி எரியூட்டப்பட்ட நிலையிலேயே கங்கை யில் தள்ளி விட்டால் ‘மோட்சம்’ என்பதும் மதத்தின் அடிப்படையில் நதிநீரின் தூய்மையை யும் சுற்றுச் சூழலையும் பாழாக்குவது அல்லவா?
இந்த மகாபுஷ்கரம் இப்போது அரசியலாக்கப் படுகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். பாரதிய ஜனதாவும் விசுவ இந்து பரிஷத்தும் இதற்கு விழிப்புணர்வு யாத்திரைப் பயணம் நடத்துகிறது. பா.ஜ.க.வின் இல. கணேசனும் தமிழிசையும், காஞ்சிபுரம் மடத்தின் புதிய பார்ப்பன சங்கராச்சாரி விஜயேந்திரன் ஆசியுடன் தொடங்கி வைக்கிறார்கள். புஷ்கரத்துக்கு எதற்கு விழிப்புணர்வுப் பயணம்? அதுவும் விசுவஇந்து பரிஷத் கொடிகளை மோட்டர் சைக்கிளில் கட்டிக் கொண்டு ரத ஊர்வலம் நடத்துகிறார்களாம். மதத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். ‘புஷ்கரம்’ இரதயாத்திரைத் தொடக்க விழாவுக்கு வந்த இல கணேசன், தமிழ்நாட்டு அரசியல் இடைத்தேர்தல் தள்ளி வைப்புக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அறநிலையத் துறை பங்கேற்காத இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. ‘புஷ்கரங்களை’க் கையில் எடுத்து, அதன் உண்மையான பார்ப்பன முகத்தை வெளிகாட்டியிருக்கிறது.
பெரியார் முழக்கம் 18102018 இதழ்