கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்
03.10.2018 அன்று மாலை 4.30 மணியளவில் செங்குன்றம் மார்கெட், முசாபர் பங்களா பகுதியில் பெரியார் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சுந்தரவள்ளி, பெரியார் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னுரை வழங்கிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி, “பெரியார் அவர்களோடு இசுலாமிய சமுதாய தலைவர்களும் மக்களும் முன்பு மிகவும் இணக்கமாக பயணித்ததை குறிப்பிட்டு தற்போது இசுலாமிய சமுதாயம் பெரியாரிடம் இருந்து சற்று விலகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடவுள் மறுப்பை மட்டுமே காரணம் காட்டி பெரியாரிடம் இருந்து இசுலாமிய சமுதாயம் தள்ளி இருக்கவேண்டியதில்லை பெரியாரிடம் கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் தங்கள் சமுதாயத்திற்கு நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “இன்றைய காலகட்டத்திற்கு பெரியாரின் மிக அவசியத் தேவையை தங்கள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும்” தோழர் அலீம் அல்புகாரி குறிப்பிட்டார்.
பெரியார் முழக்கம் 25102018 இதழ்