61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ‘இராவணனை’ எரிக்கும் தசரா விழா கொண்டாட்டத்தின்போது இரயில் தண்டவாளத்தில் நின்று விழாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் மீது இரயில் மோதி 61 பேர் பலியாகி விட்டார்கள். விழாவில் பட்டாசு வெடிப்பு சத்தத்தில் இரயில் வந்த சத்தம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது ‘தசரா விழா’ கொண்டாட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் ஆவேசமாகப் போராடி வருகிறார்கள். தொடர்வண்டி ஓட்டுனரையும் கைது செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் படை வந்தபோது போலீசார் மீது மக்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினர். 61 பேரை சாகடித்த இந்த கொண்டாட்டத்தில் தொடர்வண்டி காவல்துறை எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள். மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் விஜய் மதன் அவரது மகன் சவுராப் மதன் மித்து ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக, பங்கேற்றவர் அமைச்சராக இருக்கும் நவ்ஜோத் சிங்கின் மனைவி டாக்டர் நவ்ஜோத் கவுர். அவர் விழாவுக்கு தாமதமாக வந்தது விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக விரைவு இரயில் வரும் நேரத்தில் விழா தொடங்கப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.
தொடர்வண்டி நிலையம் அருகே விழா நடத்த அனுமதி இல்லாத பகுதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இராவணன் எரிப்பு’க் காட்சிகள், ‘எல்.சி.டி./எல்.ஈ.டி.’ திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. அந்தத் திரைகள் தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்தது ஏன்? என்று பொது மக்கள் கேள்வி கேட்கிறார்கள். “தொடர்வண்டி ஓட்டி வந்தவர் நினைத்திருந்தால் வேகத்தைக் குறைத்துக் காப்பாற்றியிருக்க முடியும். பார்வையாளர்கள் தொடர் வண்டி மீது கல் வீசியதால் நிறத்த முடியவில்லை என்று ஓட்டுனர்கள் கூறுவது உண்மையல்ல” என்று பொது மக்கள் கூறுகிறார்கள். இந்த விபத்தில் இராமாயண தசரா கூத்தில் ‘இராவணன்’ வேடம் போட்டவரும் பலியாகிவிட்டார்.
மதவெறியை ஊட்ட நடத்தப்படும் விழாக்களில் சட்டங்கள், விதிகள் ஏதும் மதிக்கப்படுவதில்லை, தங்குதடையற்ற கட்டுப்பாடற்ற முறையில் ‘பக்தி’, ‘மத சுதந்திரம்’ என்று கூறிக்கொண்டு பண்டிகைகள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. மதவெறியூட்டப்பட்ட மக்கள் உயிர்ப் பாதுகாப்புப் பற்றியும் கவலை கொள்வதுஇல்லை என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
பெரியார் முழக்கம் 25102018 இதழ்