தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...
