மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்
இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது.
அக்கிரசானர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!
பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும்.
மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும்.
ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும். ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.
அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப்பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியாதென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான ‘பூச்சாண்டி’ பிடித்துக் கொள்வான் என்றும், ‘பேய்’, ‘பூதம்’ பிடித்துக் கொள்ளும் என்றும், ‘துண்டித்தக்காரன்’ பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பல வகையாய் சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.
அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன்றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும்.
அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறிவுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார். பகவான் சொன்னார், முனிவர் சொன்னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப் பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வ துமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப்பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருத்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருக வும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியது மாயிற்று.
ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக் கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமு முடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமாயினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதே யாகும்.
அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும் படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும். ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும்.
(சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 25.1.1931)
மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததே யாகும். மனித வர்க்கம் விலங்குகளைப் போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசைகட்டிக் கூடிக் குலாவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகி விட்டன. எப்படி எனில், எப்படித் தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து, தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்கின்ற அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ அதே போல், மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்குக் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகிவிட்டது. அக்கொள்கைககள் தாம் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கின்றன.
ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்கொண்டு என்று பார்ப்போமானால், அது அந்தக் காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை – அதாவது, பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில், அதாவது கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்பச் செய்யப்பட்டவைகள் என்றே சொல்லவேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை, பிற்கால தேசவர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய்த் தங்கள் பிடிவாதம் காட்டி மாற்றச் சம்மதிக்காத காலத்தில், பிரிந்து போய்க் கொள்கைகள் வகுத்து, அதாவது முன்னையதைத் திருத்தியோ அல்லது சிலவற்றை மாற்றியோ அல்லது சில புதியவைகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது – அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டுவிடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள், அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள், ‘என் மதம் பெரிது’, ‘உன் மதம் சிறிது’ என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டுவிடுகின்றது.
இன்றையதினம் எந்த மதக்காரனையாவது கண்டு, உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? – என்றால் சில சடங்குகளையும் குறிகளையும் மாத்திரந்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக்கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும் ஒழுக்க ஈனங்களும் ஏற்பட்டு விட்டன. அன்றியும், சிலர் இவற்றை தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளவும் கருவியாய் விட்டது. சிறப்பாக இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றிக்கொடுமைப் படுத்திப் பணம் பறித்து, புரோகிதக் கூட்டமும அரசாங்கமும் செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு அவற்றால் எவ்விதப் பலனும் இல்லாமற்போய்விட்டது.
(குடிஅரசு – தலையங்கம் – 11-8-1929: 23-4-1949)
பெரியார் முழக்கம் 25042019 இதழ்