பா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி
தேர்தல் நடத்தி விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வருகிறது மோடி ஆட்சி.
‘தூர்தர்ஷன்’ என்ற அரசு தொலைக்காட்சி சேவையும் அகில இந்திய வானொலியும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த பிறகு விதிகளுக்கு மாறாக ‘நமோ டிவி’ என்ற தொலைக்காட்சி சேவையை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது.
ஒரு தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட வேண்டுமானால் அதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதல் ஏதும் பெறாமலே இந்த ‘நமோ டிவி’ தொடங்கப்பட்டு விட்டது. மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் தம்பட்டமடிக்கப்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ‘டி.வி.’, ‘டிடிஎச்’ (Direct to Home) அலைவரிசையைப் பயன்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
‘இது தனியார் விளம்பர சேவை; தொலைக்காட்சியல்ல’ என்று விளக்கம் கூறுகிறது பா.ஜ.க. இந்தத் தொலைக்காட்சி உரிமையாளர் யார்? எந்த அமைப்பின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அனைத்தும் மோடியால் இரகசியமாக செய்யப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி சேவை திருத்த சட்டத்துக்கு இது முரணானது.
‘டி.டி.எச்.’ சேவையைப் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். அதையும் ‘நமோ டிவி’ கட்டவில்லை.
‘நமோ டி.வி.’ பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார சேவை, அது ‘டிவி’ என்ற வரம்புக்குள் வராது என்று பா.ஜ.க. வாதாடுவது உண்மை என்றால் இந்தப் பிரச்சார சேவையை பா.ஜ.க.வின் தேர்தல் செலவு கணக்குக்குள் கொண்டு வரப்படுமா என்று எதிர்க்கட்சிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றன.
பெரியார் முழக்கம் 11042019 இதழ்