13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய சவப் பரிசோதனை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் ‘பிரண்ட் லைன்’ இதழ் அதை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையை அலசி மருத்துவர் புகழேந்தி ‘ஜூனியர் விகடன்’இதழில் எழுதிய கட்டுரை இது.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந் துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற் கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளார் தடயவியல்துறை மருத்து வரான புகழேந்தி.

அவரிடம் பேசுகையில், “சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந் திருந்த உடை, குண்டு பாய்ந்த இடத் தின் அருகிலிருந்து எடுக்கப்பட்ட தோல் மாதிரிகள் போன்றவை பாது காக்கப்பட வேண்டும். மேலே குறிப் பிடப்பட்ட நான்கு பேரின் உடற் கூராய்வின்போது இவை கடைப் பிடிக்கப்படவில்லை என்பதை உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது. ஜூன் 6, 2018 அன்று உடற் கூராய்வு செய்யப்பட்ட போது, இவை அனைத்தும் பாதுகாக்கப் பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூன் 6ஆம் தேதி நடந்த இரண்டாவது ஆய்வின்போது கூடுதலாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் வினோத் அசோக் சவுத்திரியும் இணைந்துள்ளார். முதல் முறை உடற்கூராய்வின்போது இந்த நடைமுறையைப் பின்பற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அருகிலிருந்து சுடும்போது அப்ரேசன் காலர் (abrasion collar), கிரீஸ் காலர் (Grease collar)  ஆகிய தடயங்கள் குண்டு நுழைந்த இடத்தில் இருக்கும். ஆடை அணிந்திருந்தால் கிரீஸ் காலர் இல்லாமல் போகலாம் என்பது தடயவியல் உண்மை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அருகிலிருந்தே நடத்தப்பட் டுள்ளது என்பதை இறந்தவர்களின் உடலில் இருக்கும் அப்ரேசன் காலர், கிரீஸ் காலர் உறுதி செய்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில், 12 பேருக்குத் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில்தான் குண்டு பாய்ந்துள்ளது. எட்டு பேர் பின்புறம் சுடப்பட் டுள்ளனர். அதாவது உயிரைத் தற்காத்துக்கொள்ள தப்பி ஓடும்போது சுடப்பட்டு இறந்துள்ளனர்.

சட்ட விதிகளின்படி குற்றம் நடந்த இடம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அதனோடு ஒப்பிட்டு உண்மையைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே, கந்தையா என்பவர் இறந்துகிடந்துள்ளார். அவரது முதுகுப் புறத்தின் வழியாகப் பாய்ந்த குண்டு, இடதுபக்க மார்பு வழியாகத் துளைத்துக்கொண்டு வெளிவந்துள்ளது என்று அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் குண்டு அடிபட்டுக் கீழே விழுந்திருந்த கோணம் மற்றும் அவரது தலை – கால்கள் இருந்த திசை கோணங் களைப் பார்க்கும்போது அவரது முன்பக்க மார்பில் குண்டு துளைத்துச் சென்றதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவரது வலது கை மணிக் கட்டின் பின்புறம் பாய்ந்த குண்டு எலும்பு முறிவை ஏற்படுத்தி, மறுபுறம் துளைத்து வெளி வந்துள்ள தாகத் தகவல் உள்ளது. ஆனால், அறிக்கையில் ரத்தம் வந்ததற்கான பதிவுகள் இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ‘கலவரப் பகுதியில் அடி பட்டவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிப் பதே காவலர்களின் முதல் கடமை என்று கூறப்பட் டுள்ளது. ஆனால், அதிலெல்லாம் காவலர்கள் அக்கறை காட்டியதற்கான ஆதாரங்களே இல்லை. இன்னும் சொல்லப் போனால், செல்வசேகர் என்பவர் குண்டு பாயாமல், காவல்துறையின ரால் அடிக்கப்பட்டே இறந்துள்ளார். அவருடைய வலது காலில் 12 செ.மீ. நீளத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது அறிக்கையில் பதிவாகி இருக்கிறது. எனவே, அந்த வலது கால், இடது காலைவிட நிச்சயம் அதிகமாக வீங்கியிருந்திருக்கும். மேலும் அந்த இடத்தில், ரத்தக்கசிவும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அது குறித்து உடற்கூராய்வு அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை. மேலும் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அவரது இருதயத்தைச் சுற்றி ரத்தம் உறைந்திருந்ததாக அறிக்கையில் உள்ளது. அவரது உடலில், இடதுபக்க முதல் விலா எலும்பிலும் காவல்துறை அடித்ததால் எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது. இவ்வளவு காரணங்கள் இருந்தும், ‘இடது மார்புப் பகுதி தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக் கசிவு மட்டுமே இறப்புக்குக் காரணம்’ எனப் பதிவு செய்யப்பட்டு இருப்பது மீதி காரணங்களை மறைப்பதற்காகத் தானோ?’’ என்று மருத்துவர் புகழேந்தி கேட்கிறார்.

இதுகுறித்துப் பேசுவதற்காக தூத்துக்குடியில் உடற்கூராய்வு செய்த மருத்துவர் குழுவில் உள்ள மருத்துவர் களைத் தொடர்புகொண்டபோது அவர்கள் பேச மறுத்துவிட்டனர். துப்பாக்கிச்சூட்டை விசாரித்துவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் கமிஷனிடம் பேசியபோது, “இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை இதுவரை விசாரித்துள்ளோம். மருத்துவர்கள், நீதிபதிகள் மற்றும் காவல்துறையினரை இன்னும் விசாரிக்கவில்லை. அந்த விசாரணைகள் நடைபெற்றால்தான் இந்தச் சந்தேகங்களுக்குத் தெளிவான பதிலைச் சொல்ல முடியும்” என்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் மண்ணில் சிந்திய இரத்தத்துக்கான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், இறந்தவர்களின் உடற்கூராய்விலேயே இவ்வளவு கேள்விகளும் தீர்க்க வேண்டிய சந்தேகங்களும் இருக் கின்றன!

பெரியார் முழக்கம் 25042019 இதழ்

You may also like...