பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?”

• சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.

• முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

• அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது “பக்தி விசுவாசத்தை”க் காட்டியதும் இதே எடப்பாடி ஆட்சிதான்.

• பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்தத் தோழர்கள் சென்னை இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழக அலுவலக வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்காக வழக்கு போட்டதும் இதே எடப்பாடி ஆட்சி தான். மாலை போடும் நிகழ்வில் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மீதும் வழக்கு பாய்ந்தது.

• கருநாடகத்தில் இந்துத்துவ எதிர்ப்பாளரான கவுரி லங்கேஷ் , மதவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானதைத் தொடர்ந்து காந்தி மீது பாய்ந்த அதே குண்டுதான் கவுரி லங்கேஷ் மீதும் பாயந்தது என்ற முழக்கத்துடன் அக்.2ஆம் தேதி தேசத் தந்தை காந்தி பிறந்த நாளில் மெரினாவில் காந்தி சிலைக்கு மாலை போட வந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது எடப்பாடி ஆட்சி. பெரியாரும் காந்தியும் ‘சங்கிகளுக்கு’ எதிரிகள் என்றால், எங்களுக்கும் எதிரிகள்தான் என்று அடையாளம் காட்டிய வெட்கக்கேடு அல்லவா, இது?

• திரிபுராவில் லெனின் சிலையை காவிக் கும்பல் உடைத்தபோது தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளையும் உடைக்க வேண்டும் என்று திமிருடன் தனது முகநூலில் பதிவிட்டவர் பார்ப்பனர் எச். ராஜா. தமிழகமே கொந்தளித்ததது. ஆனால் பார்ப்பன ராஜாவை பாதுகாத்தது எடப்பாடி ஆட்சி. சட்டம் அவரிடம் நெருங்கவே இல்லை. ராஜாவுக்கு எதிராக ஒரு கண்டனத்தைக் கூட தமிழக அரசு சார்பில் தெரிவிக்கவில்லை. பா.ஜ.க. தலைவரான தமிழிசையும் பொன். இராதாகிருஷ்ணனும் கூட ராஜாவின் கருத்து கட்சிக் கருத்து அல்ல என்று கூறிய நிலையிலும் எடப்பாடி ஆட்சி வாய்மூடி மவுனமே சாதித்தது.

• பெண் ஊடகவியலாளர்கள் அனைவருமே ஒழுக்கக் கேடானவர்கள் என்று முகநூலில் பதிவிட்ட பா.ஜ.க. பார்ப்பனர் எஸ்.வி. சேகருக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராடினார்கள். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்பிணை கேட்ட மனுவைத் தள்ளுபடி செடீநுதது. அதற்குப் பிறகும் தமிழக காவல்துறை அவருக்குப் பாதுகாப்பு வழங்கியதே தவிர கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

• துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சசராக இருந்த நிர்மலா சீத்தாராமனை சந்திக்க அவரது அலுவலக வாயிலில் காத்துக் கிடந்த போதும் சந்திக்க மறுத்து அவமானப்படுத்தியவர் நிர்மலா சீத்தாராமன்.

• தமிழக அமைச்சர்கள் அடுத்தவர் காலில் விழுந்து வணங்கும் ஆண்மையற்றவர்கள்; அதைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்கு தெரியாது என்று தமிழக ஆர்.எஸ்.எஸ். பெரும்புள்ளி பார்ப்பனர் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசினார். அத்தனை அவமானங்களையும் அப்படியே துண்டைப் போட்டு துடைத்து எறிந்துவிட்டு மோடியே தேசத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரே பிரதமர் என்று மேடைதோறும் முழங்குகிறார்கள்.

தன்மானத் தமிழர்கள் இதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தேர்தலில் பாடம் புகட்டத் தயாராகவே காத்திருக்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 04042019 இதழ்

You may also like...