ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு இணையரின் மகன் சி.இரா. கதிர்முகிலன் – அ. நஜ்முன்னிசா ஆகியோரின் காதல், மத மறுப்பு மணவிழா 24.4.2019 காலை 11 மணியளவில் சிறப்புடன் நிகழ்ந்தது. அதே நாளில் சிவகாமி-முகில்ராசு இணையரின் புதிய இல்லத் திறப்பு விழாவும் சிறப்புடன் நடந்தது.

நிமிர்வு கலையகத்தின் பறை இசையோடு தொடங்கியது இல்லத் திறப்பு. இல்லத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். மணமக்களுக்கு பேராசிரியர் சரசுவதி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்வுக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் ஆசிரியர் சிவசாமியும் தோழர் முகில்ராசுவும் கழகத்துக்கு முழு நேரக் களப்பணியாளர்களாக தொண்டாற்றுவதையும் கழகத் தோழர்களுக்கு நெருக்கடி வந்தால், ஓடோடிச் சென்று உதவி வருவதையும் திருப்பூர் மாவட்டத்தில் கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து களப்பணியாற்றுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டி செயல்படுவதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். கழகத் தலைவர், பொதுச் செயலாளர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்டச் செயலாளர் நீதிராசன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில், பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் படங்களைத் தோழர்கள் மணிமொழி, முத்துலட்சுமி, கோமதி, பேராசிரியர் சரசுவதி திறந்து வைத்தனர்.  தமிழகம் முழுதும் கழகத் தோழர்கள் ஏராளமாக நிகழ்ச்சிக்கு திரண்டு வந்திருந்தனர். அனைவருக்கும் புலால் விருந்து வழங்கப்பட்டது.

கழகத்தில் இணைந்தனர்

ஆசிரியர் சிவகாமி – முகில்ராசு இல்லத் திறப்பு – இல்ல மணவிழா நிகழ்வுகளின் போது காரத் தொழுவு சிவானந்தம், கடத்தூர் கணக்கன், ருத்ராபாளையம் இராசேந்திரன் ஆகியோர் கழகத் தலைவர் பொதுச் செயலாளர் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். கழக சார்பில் அவர்களுக்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் ஆடை போர்த்தினர். தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் உடனிருந்தார்.

பெரியார் முழக்கம் 09052019 இதழ்

You may also like...