‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு உ.பி. பீகாரில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு
உ.பி. பீகாரில் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று ‘பிரண்ட் லைன்’ இதழ் (ஏப். 26, 2019) – அதன் செய்தியாளர்கள் தந்துள்ள தகவல் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் உ.பி.யில் பா.ஜ.க. 71 இடங்களைப் பிடித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் 2013இல் நடந்த முசாஃபர் நகர் கலவரம். மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் உடைமைகள் அழிக்கப் பட்டன. 60 பேர் உயிர்ப் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்து – இஸ்லாமியர் என்ற அடிப்படையில் வெறுப்பு அரசியலை பாஜ.க.வும் – ஆர்.எஸ்.எஸ்.சும் திட்டமிட்டு உருவாக்கியது. எனவே இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களை தேர்தலில் பாஜ.க. ஜாதி மற்றும் கட்சிகளைக் கடந்த அறுவடை செய்ய முடிந்தது. இப்போது அந்த நிலை மாறி விட்டது. 2014இல் 16 இடங்களை வென்ற பாஜ.க. மேற்கு உ.பி. பகுதியில் ஏப்.11, 17 தேதிகளில் இப்போது முதல் கட்ட வாக்குப் பதிவைச் சந்திக்க இருக்கிறது. (ஏப். 11இல் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. நிலைமை பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன) இப்போது வழக்கம்போல தலித், ஜாட், யாதவர்கள் மீண்டும் தங்கள் ஜாதி அடையாளத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளான இராஷ்டிரிய லோக்தள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாடி கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பது கள ஆய்வில் தெரிகிறது. இந்தக் கட்சிகள் இப்போது கூட்டணி அமைத்து பாஜ.க.வை சந்திப்பதால் பாஜ.க. பின்னடைவை சந்திக்கும் வாய்ப்புகளே அதிகம்.
2018இல் நடந்த உ.பி. இடைத் தேர்தல் முடிவுகளும் இதையே உறுதி செய்திருக்கின்றன. அரசியல் ஆய்வாளர் மேக்சிங் இது பற்றி தெரிவித்துள்ள கருத்து:
‘கரும்பு உற்பத்தியாளர் மற்றும் ஜாதி-மதம்’ என்ற அடிப்படையே உ.பி.யில் தேர்தல் முடிவுகள் வழக்கமாக தீர்மானிக்கப்படும். இப்போது ஜாதியும், கரும்பு உற்பத்தியாளர்களும் பாஜ.க.வுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். ‘இந்து – முஸ்லிம்’ அணி திரட்சி பெரிய அளவில் இல்லை. பாஜ.க. முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று சித்தரித்து இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி நடத்தும் பிரச்சாரத்தை ஜாட், யாதவர், தலித் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்கிறார், அந்த ஆய்வாளர்.
5 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து இராணுவத்துக்கு செல்வோர் எண்ணிக்கை மிக அதிகம். அநேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இராணுவத்தில் இருப்பார்கள். கடந்த முறை 5 தொகுதிகளையும் பாஜ.க. கைப்பற்றியது. இப்போது நிலைமை மாறிப் போயிருக்கிறது என்பதை பாஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.காரர்களே ஒப்புக் கொள்கிறார்கள். டேராடூன், அரித்வார், தெஹ்ரி பகுதிகளில் மக்களிடம் நடத்திய கள ஆய்வில் பாஜ.க. மீது மக்கள் அதிருப்தியிலே இருப்பது தெரிகிறது என்று கூறுகிறது ‘பிரண்ட் லைன்’ கட்டுரை.
பீகாரில் பாஜ.க. முன் வைக்கும் ‘இந்து தேசியம்’ என்பதைவிட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளே முன்னிலையில் நிற்கின்றன என்றும் ‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு கூறுகிறது.
பெரியார் முழக்கம் 18042019 இதழ்