பாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்
சீரிய பெரியாரியலாளரும் கவிஞருமான தமிழேந்தி (69) அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் மே 5ஆம் தேதி காலை 7 மணியளவில் முடிவெய்தினார். தோழர் ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி அமைப்பான புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகப் பணி யாற்றி வந்த தோழர் தமிழேந்தி பெரியார் இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டு கழக நிகழ்வுகள் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் பேசியும் வந்தவர். சிந்தனையாளன் இதழ் தயாரிப்புப் பணியிலும் அதன் பொங்கல் ஆண்டு மலர் தயாரிப்பிலும் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமகால அரசியலை மரபுக் கவிதை வடிவத்தில் கவிப் புனையும் ஆற்றல் அவரது தனித்துவமான சிறப்பு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறை வளாகம் முன்பு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண் டிருந்தபோது உணர்ச்சி மேலிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக புழலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது மூளை நரம்பு பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பேச்சுத் திறன் இழந்து, போரூர் இராமச் சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சைப் பெற்று ஓளரவு நலன் பெற்றார். ஆனாலும், பெரியார் இயக்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லையே என்ற வருத்தமும் கவலையும் அவருக்கு இருந்தது.
பாவேந்தன் என்ற மகனும், அருவி, கனிமொழி என்ற மகளும் இருக் கிறார்கள். மூவருக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தையே நடத்தினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் தலித் இயக்கங்களோடு இணைந்து ஜாதி ஒழிப்புக் கள மாடியவர். பல்வேறு தலித் அமைப்பு களின் நம்பிக்கையைப் பெற்றவர்.
அவரது உடல் அவரது விருப்பப் படி வேலூர் மருத்துவமனைக்கு மே 5 அன்று மாலை எவ்வித சடங்குகளும் இன்றி ஒப்படைக்கப்பட்டது. அரக்கோணம் சுவால்பேட்டை இராஜாஜி வீதியில் உள்ள அவரது இல்லத்தின் வாயிலில் நடந்த இரங்கல் கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் செயல் தோழர்கள் வாலாஜா வல்லவன், முகிலன் மற்றும் சுப. வீரபாண்டியன், வே. மதிமாறன், வன்னியரசு (விடுதலை சிறுத்தைகள்), பெ. மணியரசன் (தமிழ்த் தேச பேரியக்கம்), பொதட்டூர் புவியரசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் உரையாற்றினர். கழக சார்பில் செயலவை உறுப்பினர் நெமிலி திலீபன், மலர் வளையம் வைத்து இரங்கல் உரையாற்றினார். கழகத்தின் சார்பாக ஆசிரியர் பார்த்திபன், பிரியா, அன்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இயக்கங்கள், குறிப்பாக தலித் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுதமன் பேசும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் அமைப்புக் கூட்டமே தோழர் தமிழேந்தியின் இல்ல மாடியில் நிகழ்ந்ததையும் தலித் அமைப்புகளின் கூட்டங்களுக்கு அவரது இல்லத்தின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.
கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தீவிர வாசகர் தோழர் தமிழேந்தி. கழகச் செயல்பாடுக ளையும், கழக ஏட்டில் வெளிவரும் கட்டுரைகளையும் அவ்வப்போது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் உரையாடுவார். உடல்நலிவுற்ற காலத்திலும்கூட தொடர்ந்து அலைபேசி வழியாகப் பாராட்டி உற்சாகப்படுத்துவார். இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு கூட பொதுச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு ‘நிமிர்வோம்’ வெளியிட்ட தேர்தல் சிறப்பிதழை பேச முடியாத நிலையிலும் பெரிதும் சிரமப்பட்டுப் பேசிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இறப்பு மனிதருக்கு இயற்கை யானது என்றாலும் சொல்லையும் செயலையும் இணைத்து வாழ்ந்து காட்டிய பெரியாரியவாதியின் இழப்பு சமூகத்துக்கு பேரிழப்பே ஆகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது உறுதியான வாசகர் ஒருவரை இழந்து தவிக்கிறது. திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தோழர் தமிழேந்திக்கு வீர வணக்கம்.
(குறிப்பு: தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலிலிருந்து அவர் எழுதிய ‘பெரியாரும் தமிழும்’ கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இந்த இதழில் 3ஆம் பக்கத்தில் தோழர் தமிழேந்தி நினைவாக பதிவு செய்திருக்கிறது.)
பெரியார் முழக்கம் 09052019 இதழ்