தலையங்கம் தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’
ஒடிசா இரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. மிகக் கொடூரமான இரயில் விபத்தாக இது அமைந்துவிட்டது. 300க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர்வண்டி சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூகத்தினுடைய மக்களின் அசைவியக்கங்களை அது துரிதப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, வர்ணாசிரம பேதம் இல்லாமல் அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சுமந்து செல்கின்ற ஒரு வாகனமாக அது மாறியது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தொடர் வண்டி மற்றும் நவீன தொழிற்சாலைகள் காரணமாக இந்தியாவில் தேக்கமுற்றுக் கிடந்த சமுதாயம் உடையத் தொடங்கியது என்றார் காரல் மார்க்ஸ். தேக்கமுற்ற சமுதாயம் என்பதை விளக்க வேண்டுமானால் பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயம் உடையத் தொடங்கியது என்பதே ஆகும். இந்த பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயத்தினால் உலகில் ஏனைய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல இங்கே நில உடமை முதலாளித்துவ சமூகங்கள் உருவாகவில்லை. மார்க்சிய மொழியில் கூற வேண்டுமானால்...