தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாடுகளின் கல்வி வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றை நேரில் ஆய்வுசெய்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக நார்வே நாட்டில், பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக (The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். நார்வே நாட்டு ஆசிரியப் பெருமக்களை நமது தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
ஒன்றிய பாஜக ஆட்சியில் வரலாற்றைத் திரித்து, புராண இதிகாச குப்பைகளைப் பாடத்திட்டங்களில் சேர்க்கும் மோசடியான செயல்கள் சில வடமாநிலங்களில் அரங்கேறும் சூழலில், கல்வி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நார்வே நாட்டுடன் தமிழ்நாடு அரசு அறிவுசார் பரிமாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் பாராட்டுதலுக்குரியது. உலகின் மிகச்சிறந்த கல்வி கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று நார்வே. அந்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 100%.
இதற்கு அந்நாட்டின் கல்வி கட்டமைப்புகளே காரணமாக உள்ளன. நார்வேயில் 6 வயது 16 வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது. அதற்குமேல் பட்டப் படிப்புகளும் அங்கு இலவசமே. குழந்தை பிறந்தவுடன் பெண்கள் வேலைக்கு செல்ல இயலாது என்ற சமூகத்தடையும் அங்கு இல்லை. ஒரு வயதில் இருந்தே குழந்தைகளை பராமரிக்க மழலையர் பள்ளிகள் அங்கு சிறப்பாகச் செயல்படுகின்றன. இத்தகைய சிறப்பான கல்விக் கட்டமைப்பைக் கொண்டுள்ள நார்வேயில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள வசதிகளை அறிந்து வருவது நிச்சயம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
கடந்த 3 ஆண்டுகளில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பள்ளிக்கல்வித்துறை பல முக்கியமான முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. கொரோனா காலத்தில் கணிசமாக அதிகரித்திருந்த இடைநிற்றலை சரிசெய்ய ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் உதவி புரிந்தது. அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறனை வெளிக்காட்டும் வகையிலும், பள்ளிச்சூழலை இனிமையானதாக மாற்றும் வகையிலும் கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் குழந்தைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், ‘மாணவர் மனசு’ என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி மற்றும் மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி என ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது.
அம்முயற்சிகளுக்கான பலன் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.56 விழுக்காடாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 91.55 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 397 அரசுப் பள்ளிகளும், பத்தாம் வகுப்புத் தேர்வில் 1,364 அரசுப் பள்ளிகளும் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் சீரிய முன்னெடுப்புகளால் கற்றல் திறன் மேம்பட்டிருக்கிறது என்பதை இதன்மூலம் உறுதி செய்ய முடிகிறது.
இந்த பின்னணியில்தான் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நார்வே பயணமும் தமிழ்நாட்டின் கல்வித்துறையை மேலும் வளப்படுத்த உதவும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நார்வே நாட்டின் பாடத்திட்டங்கள் நமது மனப்பாடக் கல்வி முறையைப் போலல்லாமல், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமான பாடத்திட்டங்களாக உள்ளன. நமது பாடமுறையிலும் அத்தகைய மாற்றங்கள் காலத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் கேரளாவும், தமிழ்நாடுமே முதல் 2 இடங்களில் உள்ளன. அதிலும் உயர்கல்வி சேருவோர் விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பாணியை நமது பள்ளிகளிலும் பின்பற்றுவது இடைநிற்றலை ஒழித்து, மனப்பாடக் கல்வி முறையை சீரமைக்க உதவும். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது.

கல்வி வளர்ச்சியில் நாம் ஒவ்வொரு அடியாக முன்னோக்கி வைத்தால், இருக்கிற பாடமுறையையும் சீரழிக்கும் விதமாக ஒன்றிய அரசு நீட், புதிய கல்விக்கொள்கை என ஆரிய சனாதனக் கொள்கையைத் திணிக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றும்போது, இத்தகைய தொல்லைகள் தனாகவே ஒழிந்துவிடும். காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் அந்த வாக்குறுதியை அளித்திருப்பதும் நினைவுகூறத்தக்கது.

பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

You may also like...