தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?
நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலைவாய்ப்பின்மையும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பக்கோடா விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமரே அறிவுறுத்தியதுதான் மிச்சம். ஒருவாரத்திற்கு முன்பு கூட ஒன்றிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இதுகுறித்து மிக மோசமான கருத்துக்களை உதிர்த்தார். “வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளையும் அரசே தீர்க்க முடியாது. முதலீடுகள் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.
வேலைவாய்ப்பின்மையின் தீவிரமே ஒன்றிய பாஜக அரசுக்கு புரியவில்லை அல்லது புரிய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதைத்தான் இக்கருத்துகள் உணர்த்துகின்றன. மதத்தின் பெயரால் மக்களைத் திரட்டி வாக்குகளை அறுவடை செய்துவிடலாம், அதற்கு ராமர் கோயில் ஒன்றே போதுமானது என பாஜகவினர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போல. India Employment Report 2024 வேலைவாய்ப்பின்மை பிரச்னையின் தீவிரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. 2022-ஆம் ஆண்டு கணக்குப்படி நாட்டில் வேலைவாய்ப்பு அற்றவர்களில் இளைஞர்கள் மட்டுமே 82.9 விழுக்காடு.
அதேபோல தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இளைஞர்களின் பங்கு 2000ஆம் ஆண்டில் 54%-ஆக இருந்தது. அதை 2022-ஆம் ஆண்டில் 42%-ஆகக் குறைத்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை. அதிலும் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 2022-ஆம் ஆண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இளம் வயது பெண்கள் 21.7% மட்டுமே. ஒட்டுமொத்தமாகவே 32.8% மட்டுமே பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
இளைஞர்கள், பெண்களுக்கு மட்டுமே வேலையில்லா திண்டாட்டம் பெரும் சுமையாக இருக்கிறது என்று சுருக்கிவிட முடியாது. பொதுத்துறை நிறுவனங்களே இல்லாத நிலையை நோக்கி நாட்டைத் தள்ளிக்கொண்டிருக்கிற பாஜக ஆட்சியில் ரயில்வே வரை தனியார்மயமாகிவிட்டது. இந்தியாவின் ஜாதிய, மதவாத சூழலுக்குள் இருந்து முளைக்கும் இத்தகைய தனியார் நிறுவனங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு உரிய வேலைகள் சரியான ஊதியத்தில் கிடைப்பதில்லை.
குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணிகளும் அமைப்புசாரா பணிகளும் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு கிட்டுகிறது என்பதும் India Employment Report 2024 சொல்லும் முக்கியமான செய்தி.
வளர்ச்சி அடையாத வட இந்திய மாநிலங்களில் இளைஞர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய வேலையும் இல்லை. இருக்கும் வேலைகளுக்கும் மிகச் சொற்பமான ஊதியமே வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு நகர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும் அமைப்புசாரா வேலைகளுக்கே அதிகம் செல்கின்றனர்.
ஒன்று, மாணவர்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரிக்க வேண்டும், இரண்டாவதாக அதற்கேற்ற வேலைகளை உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தத் திட்டமும் மோடி ஆட்சியிடம் இல்லை என்பதுதான் உண்மை. அதற்கெதிரான திட்டங்கள் வேண்டுமானால் அவர்களிடத்தில் கைவசம் ஏராளமாக இருக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கவே கூடாது என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை திணிக்கிறார்கள். பாஜக ஆட்சியின் மதவாத சிக்கல்களால் ஏற்படும் பதற்றங்கள், கலவரங்கள் நிச்சயம் முதலீடுகளை ஈர்க்க அனுமதிக்கப் போவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் சகிப்பத்தன்மையும், சமூக பாதுகாப்பும் குறைந்துகொண்டே வருவதை சர்வதேச ஆய்வுகளே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. பிறகு எப்படி முதலீடுகள் அதிகரிக்கும்? வேலைவாய்ப்புகள் பெருகும்?
ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்டோருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தனியார் துறையைப் பொருத்தவரையில் 8.65 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. 27 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. உலகை ஆளும் மின்னணுத் துறையில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தமிழ்நாடு மட்டுமே தனித்து 30 விழுக்காடு பங்கைக் கொண்டிருக்கும் அளவுக்கு 2 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
அதற்குக் காரணம் தமிழ்நாட்டின் பலமான உட்கட்டமைப்பு வசதிகளும், தரமான உயர்கல்வியும்தான். இரண்டையும் சாத்தியப்படுத்தியதுதான் ‘திராவிட மாடல்’. இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய ஆரிய மாடல் பாஜகவுக்கு நமது வாக்கா? அல்லது திறமையான இளைஞர்களை உருவாக்கி, பல லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கிய திராவிட மாடல் திமுகவுக்கு நமது வாக்கா? என்ற விவாதத்தை அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்போம். ஆரிய சனாதன மாடலை வீழ்த்துவோம்.
பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்