தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?
உலகெங்கிலும் எல்லா மதங்களும் விழாக்களை கொண்டாட்டமாக மட்டுமே வைத்திருக்கின்றன. ஆனால் இங்கோ இந்து மதம் கலவரத்திற்காகவே ஒரு விழாவை வைத்துக்கொண்டிருக்கிறது, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கடப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு ஆழிப் பேரலையை கடப்பது போன்ற பேரச்சத்தை தந்து கொண்டிருக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்வோம் என்று இந்து முன்னணி முரண்டு பிடிப்பதும், காவல்துறை தடுத்து அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது சிறுபான்மை சமூகத்தினரின் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மகோபா மாவட்டத்தில் இசுலாமியர்கள் அதிகமாக வாழும் கோத்வாலி பகுதி வழியாக இந்துத்துவா கும்பல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கலவரத்தை தூண்டி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியில் உள்ள வஞ்சர்பட்டி நாகா என்ற இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றபோதும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
தனிநபர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகரால் பொதுச் சமூகத்துக்கு எந்த சிக்கலும் எழுவதில்லை. ஆனால் இந்துத்துவா கும்பல்கள் வைத்து, ஊர்வலம் நடத்தும் விநாயகர்களால்தான் சிக்கல்கள் எழுகின்றன. எனவே அமைப்புகளின் பெயரால் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்க வேண்டுமென்று நீண்டகாலமாக முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இனி தனி நபர்கள் சிலை வைத்தாலும் யார் வைக்கிறார்கள், அந்த வழிபாட்டில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை ஆராய வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. குறிப்பாக வீடுகளில் வைக்கப்படும் சிலைகளுக்கு பின்னாலும் மிகப்பெரிய அரசியல் சதிகள் இருக்குமோ என்று அஞ்சும் அளவுக்கு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி நேரடியாக கலந்துகொண்டுள்ளார். நீதித்துறையை ஒன்றிய பாஜக அரசு கையாளும் போக்கின் மீதான எச்சரிக்கையை அதிகரிக்கச் செய்வதாக இருக்கிறது இந்நிகழ்வு. இதற்கு முன்பு அயோத்தி உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளில் பாஜகவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓய்வுக்குப் பிறகு ஒன்றிய அரசின் சலுகைகள் பலவற்றைப் பெற்றனர். அயோத்தி வழக்கு விசாரணை அமர்வில் சந்திரசூட்டும் ஒருவர். எனினும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியது சந்திரசூட் தலைமையிலான அமர்வுதான். ஆனால் நவம்பர் 10ஆம் தேதியுடன் சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்தான், விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற மோடி – சந்திரசூட் சந்திப்பை எச்சரிக்கையாகக் கருத வேண்டியுள்ளது.
2014-இல் மோடி பிரதமரானதில் இருந்தே நீதிபதிகள் இதுபோல பாஜகவுடன் நெருக்கம்காட்டும் பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுதீப் ரஞ்சன் சென் தனது தீர்ப்பில், “மோடி அரசாங்கம் மட்டுமே இந்தியா மற்றொரு இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தடுக்கும்” என்று கூறினார். அதே ஆண்டில், அப்போதைய பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார்) எம்.ஆர்.ஷா, மோடியை ஒரு “ஹீரோ” என்று பாராட்டினார். பிப்ரவரி 2020-இல், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, சர்வதேச நீதித்துறை மாநாட்டின் தொடக்க விழாவில் மோடியை “உலக அளவில் சிந்திக்கும் மற்றும் உள்நாட்டில் செயல்படும் பல்துறை மேதை” என்று புகழ்ந்தார். அவர் பதவிக்காலம் முடிந்தவுடன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவராக நியமிக்கப்பட்டார். அரசுக்கு ஆதரவான பல தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஓய்வு பெற்ற பிறகு மாநிலங்களவையின் நியமன உறுப்பினரானார். அந்த வரிசையில் தனது பெயரும் இணைந்துவிடும் என்ற தயக்கமே இல்லாமல், மோடியை அழைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியிருக்கிறார் சந்திரசூட்.
ஒன்றிய அரசின் அதிகாரம் மிக்க உயர்பதவிகள், தன்னாட்சி அமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் பெருகிவிட்டது என்று ராகுல் காந்தி நேரடியாகக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார். அது நீதித்துறைக்குள்ளும் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் இவை காட்டுகின்றன. சமீபத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் சட்ட அணி டெல்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. அதில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் மேக்வால் கலந்துகொண்டுள்ளார். அவருடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுமார் 30 பேர் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் இருவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள். வாரணாசி கோயில், மதுரா கோயில், வக்பு வாரிய மசோதா உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வழக்குகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் கடந்த காலங்களில் பாஜகவுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கியவர்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.
காவிகளின் பிடியில் இருந்து நீதித்துறை காக்கப்பட வேண்டும்.
பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்