தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?
2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை.
அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி வாரி கணக்கெடுப்பு மிகுந்த அவசியமானது. அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அதற்கான தேவையை வலியுறுத்தி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏளனப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், “யாருக்கு சுய ஜாதி தெரியாதோ, அவர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை கேட்டுக் கொண்டிருக்கிறார்” என பதில் அளித்திருக்கிறார். இது பாஜகவின் அப்பட்டமான ஜாதிய மனோபாவம். ஜாதியற்றோருக்கான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் கட்டத்தை நோக்கி தமிழ்நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஜாதி தெரியாவிட்டாலே அவமானம் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று அனுராக் தாக்கூரின் பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜகவின் இந்த மட்டமான அரசியல்போக்கைத் தாண்டி ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இப்பிரிவினரின் மக்கள்தொகை 60 விழுக்காட்டிற்கும் அதிகமான இருக்கும் என்பதுதான் கண்கூடு. அவர்களுக்கான கல்வி- வேலைவாய்ப்பு உரிமைகள் நிலைநாட்டப்பட ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியமானது. சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைய, எந்த சமூகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். நோயை அறிந்து மருத்துவம் செய்வதே பலனைக் கொடுக்கும். நோய் என்னவென்றே தெரியாமல், அதன் தீவிரம் உணராமல் மருத்துவம் பார்ப்பது பலனைத் தராது. ஜாதி என்பது சமூகத்தின் கொடிய நோய். அந்நோயைக் குணப்படுத்த அதன் தீவிரத்தன்மையை அலசி ஆராய்ந்து புள்ளி விவரங்களை எடுக்க வேண்டியது அவசியம்.
இதை அரசியல் கட்சிகளோ, சமூக இயக்கங்களோ மட்டும் வலியுறுத்தவில்லை. நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதியை உறுதிசெய்ய இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜாதி வாரியான புள்ளி விவரங்கள் இன்றியமையாதவை என்று 1992-இல் இந்திரா சஹானி வழக்கிலேயே தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் தன்னை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக மார்தட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நேரெதிரான சிந்தனையையே கொண்டிருக்கிறார். உயர்ஜாதி ஏழைகளுக்காக உச்சநீதிமன்றத்தின் 50 விழுக்காடு வரம்பைத் தாண்டி, பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கினார். ஆனால் ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒரு விழுக்காடு கூட உயர்த்த முன்வரவில்லை. இப்போது நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து எழும் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான குரலையும் மதிக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அந்த அலட்சியத்திற்குத்தான் உத்தரப் பிரதேச மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பதிலடியைக் கொடுத்தார்கள். ஒன்றிய பாஜக அரசு, இக்குரலை மேலும் அலட்சியப்படுத்துமானால், பாஜக மேலும் பலவீனப்படும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் தளத்தில் வலுவாக எழும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான குரலை முன்னகர்த்திச் செல்ல வேண்டியது நமது கடமை.
பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்