தலையங்கம் – மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் வருமா?

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை’ தினக் கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றுள்ளது. எழுத்தாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதிய ‘நரேந்திர தபோல்கர் – மூடநம்பிக்கை ஒழிப்புபோராளி’, ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘அறிவியலின் குழந்தைகள்’ ஆகிய 2 நூல்களை வெளியிட்டுப் பேசிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, “பள்ளி பாடப் புத்தகங்களில் இருக்கும் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க எதுவுமே செய்வதில்லை. ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பதே இதற்குக் காரணம். மேம்பட்ட சமுதாயம் அமைய வேண்டுமானால், முதலில் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய மோதல்களைத் தடுக்க சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை அரசிடம் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதுடன், ஆசிரியர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான, ஜாதிய பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான மனப்பான்மை வளர்க்கப்படுவது அவசியமே. இதே கருத்தரங்கில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நரேந்திர நாயக் கலந்துகொண்டு அவசியமான கோரிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளார். மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் மூடநம்பிக்கைகளை அகற்றவும் பாடுபட்டதற்காக நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அவரது இயக்கம் அழிந்துவிடவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மூடநடம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதைப்போல தமிழ்நாடு, கேரளாவிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய காலச்சூழலில் இது அவசியமான கோரிக்கை. மூடநம்பிக்கைகள்தான் பக்தியை நிறுவிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பக்தியைத்தான் அரசியலுக்கான மூலதனமாகப் பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படியொரு சூழல் உருவாகிவிடவில்லை என்றாலும், நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்ல, அறிவியல் வளர வளர அறிவியல் சாதனங்களின் ஊடாக மூடநம்பிக்கைகளும் அதிகம் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சாமியார்களை அற்புதங்களாகப் பரப்பும் முன்னணித் தொலைக்காட்சிகள் தொடங்கி, அகோரி அடையாளத்தோடு இன்ஸ்டாகிராமில் வலம் வரும் ஆசாமிகள் வரை நவீன சாதனங்களின் ஊடாக மூடநம்பிக்கைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஊடகச் செய்திகளைப் பார்த்துவிட்டு இத்தகைய போலிச் சாமியார்களை நம்பி, பலர் சென்று வாழ்வைத் தொலைக்கும் அவலம் நடக்கிறது.
சகல பிரச்னைகளுக்கும் ஒரே நிவாரணி ‘கருங்காலி மாலை’ எனப் புதுப்புது விதமான மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 500 ரூபாயில் இருந்து தொடங்கி ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் வரை ஆன்லைனிலேயே கருங்காலி மாலை விற்கப்படும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது.
கருங்காலி மாலை அணிவதன் நன்மை, அவசியம் என்ன? எந்த நேரத்தில் அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டும் என்றெல்லாம் காட்சி ஊடகங்கள் முதல் யூடியூப் சேனல்கள் வரை வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம் வள்ளி கும்மியின் பெயரால், பெண்களுக்கு ஜாதி போதனைகளைத் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு ஜாதியில் யாரையும் காதலிக்கக்கூடாது, வேறு ஜாதியில் யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று வள்ளி கும்மி நிகழ்விடங்களிலேயே இளம்பெண்களிடம் வாக்குறுதி வாங்கும் வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
இது தமிழ்நாட்டிற்கு ஆபத்தான போக்கு என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். இத்தகைய மூடத்தனங்களில் இருந்து எதிர்காலத் தலைமுறையைக் காக்க, மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டியது அவசியம். அதற்காகப் பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்துவிட்டு பள்ளிகளில் கந்தகஷ்டி கவசத்தைப் பரப்புவதற்கு அறநிலையத்துறையும், அதன் அமைச்சர் சேகர்பாபுவும் முயற்சிகள் எடுப்பது அதிர்ச்சியைத் தருகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே முரணானது இது. மூடநம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவித்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டியெழுப்புவதே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- கலைஞரின் கனவு. ஆனால் நவீன தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கைகளைத் தீவிரமாக வளர்க்கப்படுவது திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...