தலையங்கம் – அதானிக்கு கடிவாளம் எப்போது?

அதானிக் குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தது. தொட்டதற்கெல்லாம் எதிர்க்கட்சிகள் மீதும், பல்வேறு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி விசாரணை நடத்தும் ஒன்றிய அரசு, அதானியிடம் விசாரணை நடத்த மறுத்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்தது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தின் மகுவா மொய்த்ராவை தகுதிநீக்கம் செய்து பழி தீர்த்தது. அதையும்தாண்டி உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் சென்றபோது, பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இன்றுவரை முறையான விசாரணை நடைபெறவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. அதானிக் குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். செபி தலைவராக மாதபி நியமிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மொரீசியஸைச் சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்டுக்கு, ‘குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்’இல் தானும் தனது மனைவியும் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக தவல் புச் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதனடிப்படையில்தான் இந்தக் குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு மாதபி புச் செபி தலைவரான உடனேயே, அவரைக் கவுதம் அதானி சந்தித்ததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் சந்திப்பு நடைபெற்ற வேளையில்தான் அதானிக் குழுமத்தின் மோசடிகள் குறித்து செபி விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இப்போதாவது அதானி – செபியின் கூட்டு மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, வரும் 22-ஆம் தேதி அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதானியின் மோசடிகள் குறித்து எழுப்பப்படும் குரல்கள், இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறது எனச் சப்பைக்கட்டு கட்டுகிறது பாரதிய ஜனதா கட்சி. அதானிக்கு எதாவது பிரச்னை என்றால்தான் பாஜகவுக்கு இந்தியப் பொருளாதாரமே நினைவுக்கு வருகிறது போலும். 2014-இல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதானியின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலர். ஆனால் 2022-இல் 150 பில்லியன் டாலர். அதானியின் சொத்து கொழுப்பது மட்டும்தான் இந்தியம் பொருளாதாரமா? அதானியின் சொத்துக்கள் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதை விட, ஷெல் கம்பனிகளில்தான் (மோசடி அல்லது வரி ஏய்ப்பு செய்து பணம் திரட்டும் நிறுவனங்கள்) சென்று குவிகிறது என்பதற்கான ஆதாரங்கள் கடந்த ஆண்டு வெளியான பண்டோரா பேப்பர்ஸ் அறிக்கையில் உறுதியானதையும் இங்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி என பெரிய குண்டுகளை இந்தியப் பொருளாதாரத்தின் மீது வீசி, ஒட்டுமொத்தத் தொழில்துறையையும் சீர்குலைத்தது பாஜகதான் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். தனி நபர் சேமிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டதாக, ஜூலை மாதத்தில் ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை கூறியது. நாட்டில் இன்னமும் 44 விழுக்காட்டினர் 3 வேளை உணவு கிடைக்காமல் தவிப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் சமீபத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது. 16 விழுக்காடு இளைஞர்களுக்கு வேலை இல்லை. 125 நாடுகளுக்கான சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் 111. ஆனால் இந்தப் புள்ளி விவரங்களை அடியோடு மறுத்து, “ஆய்வுகள் நடத்தப்பட்ட விதம் தவறு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகள் தவறு” என்று பதில் சொல்வதுதான் ஒன்றிய பாஜக அரசின் வாடிக்கை.

இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து, கல்வி – தொழில் வளம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமே பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும். அதானியின் மோசடிகளுக்கு துணைபுரிவது ஒருபோதும் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குப் பயன்படாது. அதானி துறைமுகம், அதானி விமான நிலையம், அதானி ரயில், அதானி மின்சாரம் என நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒவ்வொன்றாக அதானியிடம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. அதானி தனது மோசடிகளால் உலக அரங்கில் வீழ்ந்து கொண்டிருக்கிறார். எல்.ஐ.சி-யின் 38,471 கோடி ரூபாய் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அதனால் அதானியின் மோசடிகளுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என மக்கள் ஒதுங்கியிருக்க முடியாது. அதானியை விசாரணைக்குட்படுத்த மோடி அரசுக்கு நெருக்கடி தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியார் முழக்கம் 15.08.2024 இதழ்

You may also like...