தலையங்கம் – மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட அனுமதியோம்!

அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லுக்கு வேக வேகமாக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “இந்த நாடு இந்துக்களின் நாடு! இந்துக்களின் இராஷ்டிரமாக இருக்க வேண்டும்” என்ற சிந்தனையை சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிகளில் ஒன்றிய அரசு பணியாளர்கள் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. காந்தியடிகள் படுகொலையை ஒட்டி விதிக்கப்பட்ட தடையை சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியிருக்கிறது ஒன்றிய அரசு.
சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சூப்பர் மேன் ஆசையோடு சிலர் நிற்பதில்லை. தேவர்கள், கடவுள்கள் ஆகவும் விரும்புகிறார்கள்” என்று மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கியிருக்கிறார். இந்தத் தடையை நீக்கியதன் பின்னணியில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இந்த நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, பாலியல் சமத்துவம் என மானுட விடுதலையைப் பேசுகிற பல நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இருக்கின்றன. அரசு ஊழியர்கள் அவற்றில்கூட நேரடியாகப் பங்கெடுக்க இயலாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் நேரெதிரான ஜாதியவாதத்தை, மதவாதத்தை, மானுட பிளவுவாதத்தை சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மட்டும் தடை நீக்கப்படுகிறது என்றால், இது உண்மையில் மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்குமா?

அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ். எத்தகைய பேராபத்தான இயக்கம் என்பதற்கு வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் சாட்சியங்களாக உள்ளன. காந்தியடிகள் கொலையை ஒட்டித்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அப்போது முதல் இதுவரை 4 முறை தடை செய்யப்பட்டிருக்கிறது. காமராசரை டெல்லியில் வீட்டோடு எரித்த கொல்ல முயற்சித்ததும் இந்த அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பல்வேறு இயக்கங்கள், நாட்டின் பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புடையவையாக உள்ளன. குண்டுவைக்க, ஆயுதங்கள் பயன்படுத்த இந்துத்துவா இயக்கங்கள் பயிற்சி அளிப்பதாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்த யஸ்வந்த் ஷிண்டே என்பவர் வாக்குமூலமே அளித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணிகளில் கூட ஆயுதம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர் மீது இந்துத்துவவாதிகள் நிகழ்த்தும் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக இதுவரை ஆர்.எஸ்.எஸ். ஒருமுறை கூட வாயைத் திறந்ததே இல்லை.
பொது அமைதிக்கும், சமூக ஒழுங்கும் பேரபத்தான ஆர்.எஸ்.எஸ்.ஸின் கூட்டங்களில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பங்கெடுக்கலாம் என்பது, அத்தகைய செயல்களை அரசு ஊழியர்களும் செய்யலாம் என ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. சட்டமே ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அனுமதித்தால், ஏற்கெனவே இந்துத்துவ சிந்தனை கொண்டிருக்கும் அதிகாரிகளின் மனநிலை இனி என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அத்தகைய நபர்கள் பணியாற்றும் எல்லைக்குள் ஜாதிய, மதவாத சிக்கல்கள் எழுமானால் நியாயமாக நடந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். கொள்கையைக் கொண்ட உயரதிகாரியின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அத்தகைய சிக்கல்கள் எழும்போது நியாயமாக நடந்துகொள்ள அனுமதிப்பார்களா? ஏற்கெனவே ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் கொத்துக்கொத்தாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் வலிந்துத் திணிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறன.
“நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மோடி ஆட்சியை நோக்கி கடும் விமர்சனத்தை வைத்தவர் குமாராசமி. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான இவர், இப்போது ஒன்றிய பாஜக அரசின் கூட்டணியில் அமைச்சராக இருக்கிறார்.

அதேபோல உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தில் 83 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, பின்னர் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த இடங்களுக்கு சத்தமே இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட நபர்கள் நிரப்பப்பட்டனர். இதே பாணியில் உத்தராகண்டில் வனத்துறை வேலைகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ள ஒன்றிய அரசின் சைனிக் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு 62% அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசு நிறுவனங்களைக் கைப்பற்றும் பணியை, நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ். சத்தமே இல்லாமல் செய்துகொண்டிருக்கிறது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் அரசுத் துறையில் இருந்து சுதந்திரமாக செயல்படுவதற்கான வழிவகையாகத்தான் ஒன்றிய அரசின் தடைநீக்கம் இருக்கிறது. சிறுபான்மை சமூகத்தினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியலமைப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இது! இதை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...