தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?
கழக செயல் வீரர்களே கிராமங்களில் நிலவும் தீண்டாமை சக மனிதர்களின் சுயமரியாதையை பறித்து இழிவுபடுத்தும் அவலங்களை கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டீர்களா?
சேலம் மாநாட்டில் நாம் உருவாக்கிய செயல்திட்டத்தை நாம் விரைவு படுத்த வேண்டும் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முன்வராத இந்த எதிர்நீச்சல் போடும் சமுதாயக் கடமையை நாம் சுமந்து களம் இறங்கி உள்ளோம்.
கிராமங்களில் அரசியல் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, மாறாக உள்ளூர் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சாதிவெறியை பழக்கவழக்கம், பண்பாடு என்ற பெயரில் விளிம்பு நிலை மக்கள் மீது திணிக்கிறார்கள். பார்ப்பனியத்தின் அடிமைகளாகி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கோரத் தாண்டவம் ஆடுகிறார்கள்.
கோயிலுக்குள் தீண்டாமை, பொது வீதிகளில் நடப்பதற்கு தடை, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடி வெட்டும் கடைகளில் தீண்டாமை, திருவிழாக்களில் பங்கேற்பதற்கு தடை, சுடுகாட்டில் சடலங்களை புதைக்கவும் தடை, மரணத்திற்குப் பிறகும் தீண்டாமை துரத்திக் கொண்டே இருக்கிறது. காதல் திருமணம் புரிந்தால் சாதி, சமூகம், ஊர் புறக்கணிப்பு செய்கிறது. அதிகார வர்க்கம் காவல்துறை சாதிய மனப்பான்மையோடு சாதி வெறியர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. நேர்மையான அதிகாரிகள் ஒரு சிலரை தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
தோழர்களே! சட்டங்களால் சாதி தீண்டாமையை ஒருபோதும் ஒழித்து விட முடியாது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பெரியார் சமூக களத்தில் தனது போராட்டங்களை நடத்தினார். அதிர்ச்சி தரும் போராட்ட வடிவங்களை கையில் எடுத்தார்.
நவீன அறிவியல் சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி பெற்றும் சாதி வெறியர்கள் சக மனிதர்களாக ஏற்க மறுக்கிறார்கள். சாதி ஒழிப்பு போராட்டங்கள் அண்மைக்காலமாக தொய்வடைந்த நிலையில் சாதிவெறியாட்டம் மீண்டும் தீவிரமாகிவிட்டது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். சாதி ஒழிப்பு இயக்கங்கள் முனைப்போடு களமிறங்கும் வரலாற்றுத் தேவை நம் முன் நிற்கிறது.
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து பிரிவிலிருந்தும் ஜாதி எதிர்ப்பாளர்கள் கரம் கோர்த்து போராடும் போது தான் இந்த சாதிய சமூகத்தை ஓரளவு அசைத்துக் காட்ட முடியும். சாதி மறுப்பு அடையாளங்களோடு களமாடும் வாய்ப்பு நம்மைப் போன்ற பெரியார் இயக்கங்களிடம் தான் தங்கி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
நூறாண்டு கண்ட வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா நடத்தி பெரியாரின் பங்களிப்பையும் தியாகத்தையும் நம்மால் பேசிக் கொண்டிருக்க முடியும். அத்தகைய வரலாற்று பெருமை கொண்டது. ஆனாலும் நாம் கொண்ட்டாட்ட மகிழ்வில் மூழ்கிவிடாமல் பெரியாருக்கு நாம் செலுத்தும் உண்மையான பெருமையும் புகழும் காலம் முழுவதும் பேசிய ஜாதி தீண்டாமை ஒழிப்பை முன்னெடுப்பது தான் என்று களமிறங்கி இருக்கிறோம். இந்த இயக்கத்திற்கு நாம் சூட்டியுள்ள பெயர் வைக்கம் போர் முடியவில்லை. இப்படி ஒரு துணிவான முடிவை எடுக்கும் வல்லமை நம்முடைய திராவிடர் விடுதலைக் கழகத்திற்குத் தான் உண்டு. இந்த இயக்கத்தில் நமது பங்களிப்பு என்றென்றும் வரலாறாக பதிந்து நிற்கும், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்.
தோழர்களே! விரைந்து களமிறங்குங்கள். இம்மாத இறுதிக்குள் பட்டியல் தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்து கழகத் தலைமைக்கு அனுப்பி வையுங்கள். சுயமரியாதை இயக்க வழி வந்தவர்கள் நாம். சக மனிதர்களின் சுயமரியாதைக்கு களம் அமைப்போம். இறுகிப் போய் கிடக்கும் சாதித் தீண்டாமை சமூகத்தை அசைக்க வைப்போம். தோழர்களே தயாராவீர்!
பெரியார் முழக்கம் 15062023 இதழ்