தலையங்கம் – இப்படியும் ஒரு இந்துயிசம்!
பண்பாடு, கலாசாரம் போன்றவை மாறாது, நிலையானது என்பது உலகம் முழுவதும் இருக்கிற பழமைவாதிகளின் கருத்து. ஆனால் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு அனைத்து மத கலாச்சாரங்களும் வளைந்து நெளிந்துதான் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்து மதம் சிறு மாற்றங்களுக்குக் கூட இடம்தர முடியாது என இன்னமும் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தத் துடிக்கிறது. நமக்கு மிக அருகாமையில் இருக்கிற இந்தோனேசியாவில் கூட இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை என்ற செய்திகள் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்திருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் கொள்கைத் துறை பேராசிரியர் நீரஜ் கவுசால் சமீபத்தில் இந்தோனேசியாவுக்கு பயணம் செய்து, அங்கு இந்துயிசம் எப்படி இருக்கிறது என்ற ஆச்சரியம் தரக்கூடிய தகவல்களை கொடுத்திருக்கிறார்.
இந்தோனேசியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு. இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் அங்கு வாழ்கின்றனர். அவர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த வணிகர்கள். இந்தியாவைப் போல அங்கும் இந்துக்களி்டம் ஜாதி இருக்கிறது. ஆனால் ஜாதியின் பெயரால் இங்கிருப்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வுகள் அங்கு இல்லை. எல்லோரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகம் என ஒன்று அங்கு இல்லை. தீண்டாமைக் கொடுமைகள் முந்தையக் காலங்களில் நடந்தன என்பதற்கான சான்றுகளும் எதுவும் இல்லை. அங்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் இருக்கின்றன. இந்தியாவில் இன்னமும் பட்டியல் சமூகத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிற கோயில்கள் இருக்கின்றன. ஆனால் இந்தோனேசியாவில் கோயிலுக்குள் நுழைவதற்கு ஜாதி ஒரு பொருட்டே இல்லை.
இந்தோனேசியாவின் பாலியில் பெசாகி கோயில் வளாகம் உள்ளது. அகுங் மலைச்சரிவில் உள்ள இந்தக் கோயில் வளாகத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இந்து கோயில்களில் இதுவும் ஒன்று. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களே அந்த கோயில்களில் அர்ச்சனை செய்கிறார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்று இங்கிருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆகமம் கெட்டுவிடும் என்றும் பேச்சும் அங்கு இல்லை. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக முடியும், இறைப்பணி செய்ய முடியும். சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் இந்தோனேசியாவில் எந்தக் கோயிலிலும் இல்லை. எல்லா கோயில்களுக்கும் சென்று ஜாதி, பாலின பேதமின்றி யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.
பெண்கள் முகங்களை மறைக்க வேண்டிய கட்டாயமும் அங்கு இல்லை. சட்டையும் பாவாடையும்தான் அவர்களின் வழக்கமான உடையாக இருக்கிறது. துப்பட்டா தொல்லையும் இல்லை. அதேபோல ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும், குலப்பெருமை கெட்டுவிடும் என்ற வரட்டுக் கவுரவமும் இந்தோனேசியாவில் இல்லை. வேறு ஜாதியினரை பெண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடுகளுக்கு இந்தோனேசிய இந்துயிசத்தில் கொஞ்சமும் இடம் இல்லை. எந்த ஜாதியில் எவர் வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இந்தோனேசிய இந்துக்களிடம் 25 விழுக்காட்டிற்கும் குறைவுதான். 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்துகொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னமும் 95% திருமணங்கள் குடும்பத்தினரால் ஜாதிகளுக்குள் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமணங்களே.
இந்தியாவில் ஜாதிக் கட்டமைப்பை மீறி வேறு ஜாதியில் திருமணம் செய்தாலும், அந்தப் பெண்ணை ஆணின் ஜாதியில் அடைப்பதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தோனேசியாவில் திருமணத்திற்குப் பிறகு ஆண் தனது மனைவியின் ஜாதியை எடுத்துக்கொள்கிறார். மனைவியின் சமூகத்துக்கான கடவுளை ஏற்றுக்கொண்டு வணங்குகிறார். இதனால் ஜாதிப் புனிதத்தைக் காக்க வேண்டிய கடமையோ அல்லது அதைப் பெருமை என்றோ கருதுகிற இந்திய இந்துக்களின் மனநிலை, இந்தோனேசிய இந்துக்களிடம் இல்லை என்பது இதிலிருந்தே புரிகிறது.
உலக வங்கி தரவுகளின்படி வேலைவாய்ப்புகளில் பங்கேற்கும் பெண்களின் விகிதம் இந்தியாவில் 24 விழுக்காடாக இருக்கிறது. ஆனால் இந்தோனேசிய வாழ் இந்துப் பெண்கள் வேலைவாய்ப்புகளில் பங்கேற்கும் விகிதம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்லும் போக்கு, இந்தோனேசிய இந்துப் பெண்களிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. இப்படி இந்துயிசத்தின் பெயரால் இந்தியாவில் இழைக்கப்படும் அநீதிகளையும், இந்தோனேசியாவில் தழைத்தோங்கும் மானுடப் பற்றையும் ஒப்பிட்டு அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார் நீரஜ் கவுசால்.
ஒரே மதம்தான்… ஒரே கடவுள்கள்தான்… இந்தோனேசியாவில் இல்லாத ஏற்றத்தாழ்வுகள் இங்கு மட்டும் எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரில், பண்பாடு- பழக்க வழக்கம் என்ற பெயரால் எவ்விதமான சமூகக் தடைகளும் இந்தோனேசிய இந்துயிசத்தில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அங்கு “பார்ப்பனிய மேலாதிக்கம்” இல்லை. இங்கும் அந்த பார்ப்பனிய மேலாதிக்கத்தை தகர்ப்பதை நமது தலையாய கடமையாய் கொள்வோம்.
பெரியார் முழக்கம் 18012024 இதழ்