தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!
சேலம் மாவட்டம் காடையம்பட்டிக்கு அருகில் இருக்கிறது தீவட்டிப்பட்டி கிராமம். இப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களும், அருகே இருக்கிற நாச்சினம்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களும் வசிக்கின்றன. இரு கிராமங்களுக்கும் நடுவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை ஒட்டி, மே 1-ஆம் தேதி இரவு உள்ளே சென்று வழிபடச் சென்ற பட்டியல் சமூகத்தினரை ஆதிக்க ஜாதியினர் தடுத்திருக்கிறார்கள்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மே 2-ஆம் தேதி வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த பட்டியல் சமூகத்தினர் மீது சிலர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அருகில் இருந்த கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இருதரப்பிலும் காவல்துறை சிலரைக் கைது செய்திருக்கிறது.
தீவட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் இந்த மாரியம்மன் கோயிலானது 1972-ஆம் ஆண்டில் இருந்தே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானவை. கருவறைத் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்ட இந்த காலகட்டத்தில், கோயிலுக்குள் குறிப்பிட்ட ஜாதியினர் நுழையக்கூடாது என்றெல்லாம் கட்டளையிட எவருக்கும் உரிமையில்லை. மாரியம்மன், அய்யனார், கருப்பசாமி, முனியசாமி என சிறுதெய்வ கோயில்களில் மட்டும் இன்னமும் எல்லா சமூகத்தினரும் வழிபட அனுமதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
“பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்கு வெளியே நின்று வழிபடுவதுதான் பழக்கவழக்கம். இப்போது என்ன திடீரென கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்கிறார்கள்?” என்று ஆதிக்க ஜாதியினர் கேட்கிறார்கள். சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது என்பதுகூட பழக்க வழக்கமாகத்தான் இருந்தது. பார்ப்பனர்களுக்கு அடிமை வேலை செய்வது மட்டுமே சூத்திரர்களின் பழக்க வழக்கமாக இருந்தது. இப்போதும் அதையே செய்ய இடைநிலை ஜாதிகள் தயாராக இருக்கின்றனவா? பழக்க வழக்கம் எதுவுமே நிரந்தரமானது அல்ல, காலப்போக்கில் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும்.
கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் முன்னேற்றம் கண்டு நவீனமாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஜாதியப் படிநிலைகள் கரைந்து எல்லோரும் சமம் என்ற உணர்வு மேலோங்கவே செய்யும். கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்ற பின்பு, ஜாதியின் பெயரால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குரல் கொடுக்கவே செய்வார்கள். பழக்க வழக்கத்திற்கு எதிரானது என்று அந்தக் குரலை நசுக்கிவிட முடியாது. படித்த இன்றைய இளம் தலைமுறை உரிமை மறுப்புக்கு எதிராக இத்தகையக் குரல்களை எழுப்புவதே திராவிட இயக்கத்தின் சமத்துவச் சிந்தனைகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி. கடந்த ஆண்டு மேல்பாதியிலும் அதுதான் நடந்தது. இப்போது தீவட்டிப்பட்டியிலும் அதுதான் நடக்கிறது.
கருவறைத் தீண்டாமையை ஒழித்திருக்கிற இந்த ஆட்சியில், போராடினால் கோயில் நுழைவு உரிமையைப் பெற்றுவிடலாம் என்கிற பட்டியல் சமூகத்தினரின் நம்பிக்கையும் இத்தகையப் போராட்டங்கள் சமீப காலங்களில் அதிகம் நடப்பதற்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே நாட்டார் கோயில்களின் நடைமுறைகளில் மிக அப்பட்டமாக வெளிப்படும் இத்தகைய ஜாதிய அத்துமீறல்கள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆரியப் பண்பாட்டுக்கு எதிரானது நாட்டார் வழிபாடு என்கிற தமிழ்தேசியர்களின் பொய், புரட்டுகளுக்கு மறுப்பாக, நாட்டார் வழிபாடு என்பது இந்துத்துவத்தின் உட்கூறான ஜாதியத்தை உள்ளடக்கியதே என்பதற்கான மற்றுமொரு ஆதாரமாகவே தீவட்டிப்பட்டி சம்பவம் அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுக்க அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற அனைத்து நாட்டார் கோயில்களிலும் அனைத்து சமூகத்தினருக்கும் வழிபாட்டு உரிமையை உறுதிசெய்ய உறுதியான நடவடிக்கை எடுப்பது ஒன்றே இப்பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். இதற்கு மாறாக பட்டியல் சமூகத்தினரை தொடர்ந்து புறக்கணிப்பது தொடருமானால் போராட்டங்களும் தொடரவே செய்யும். தீவட்டிப்பட்டி சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத பட்டியல் சமூகத்தினர் சிலர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என நாச்சினம்பட்டி பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். பட்டியல் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து காவல்துறையினர் சிலரைக் கடுமையாகத் தாக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்பாவி மக்களை விடுவிப்பதுடன், வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்