தலையங்கம் – பார்ப்பனிய மனநிலை கூடாது!

பட்டியல் பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் ஜாதியினரைக் கூறுபோடலாமா என்பதுதான் அந்த விவாதத்தின் மையப்பொருளாக இருக்கிறது. இந்த வாதம் என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனியம் நீண்டகாலமாக முன்வைக்கும் வாதம்தான். இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து இந்துக்களைக் கூறுபோடலாமா என்ற பார்ப்பனிய சிந்தனைதான், பட்டியல் சமூகத்தினரை கூறுபோடலாமா என்று இப்போது மருவியிருக்கிறது. எல்லா மட்டங்களிலும் சமத்துவம் வேண்டும், பட்டியல் சமூகத்தினருக்குள்ளும் சமத்துவம் வேண்டுமென்பதுதான் உள்இடஒதுக்கீட்டின் நோக்கம்.
ஆனால் அதை ஏற்காமல், உள்இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும் கூறியிருக்கிறார். “பட்டியல் பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கக்கூடாது. பட்டியல் பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே வழங்கப்பட்டுவிட்டது. அதன் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்க வேண்டும்” என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கும் மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது. இடஒதுக்கீட்டிற்காக ஒரு நூற்றாண்டாக இயக்கம் கண்டு பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகங்களின் வாழ்வியல் நிலைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிற தமிழ்நாட்டில் இருந்து இப்படியொரு குரல் எழுவது ஆபத்து நிறைந்தது.
அதேசமயம் “உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்க முன்வந்ததைப் போல, பட்டியல் சமூகத்தில் பெரும்பான்மை சமூகமான ஆதிதிராவிடர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்தையும் அவர் கூறுகிறார். உள் இடஒதுக்கீடே கூடாது என்று ஒருபக்கம் சொல்கிறார், இன்னொருபக்கம் ஆதிதிராவிடர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும்” என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார். இது அவருடைய ஜாதித்தூய்மைவாத சிந்தனையை வெளிப்படுத்துகிற பெரும்பான்மைவாதமாகத்தான் பார்க்க முடிகிறது. இடஒதுக்கிட்டின் அடிப்படை நோக்கம் என்பதே கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மக்களை உயர்த்துவதே. அந்த நோக்கத்திற்காக எந்த மட்டத்தில் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டாலும் அதை வரவேற்கலாம். ஆனால் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு என்பது தேர்தல் ஆதாயத்திற்காக, எடப்பாடி பழனிச்சாமி அரசால் வழங்கப்பட்டது. சமூகப் பொருளாதார ஆய்வுகள் இல்லாமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாமல் அவசர கதியில் வழங்கப்பட்டது. அதனால்தான், சட்டப்படி செல்லாது என்ற நிலை ஏற்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களின் ஜாதிவாரி கணக்கெடுப்பு, கல்வி – சமூகப் பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் எடுக்கப்பட்ட பின்பே, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு தேவையா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்க இயலும். எனவே அதிமுக – பாமக கூட்டணியின் தேர்தல் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட இடஒதுக்கீட்டு நாடகத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு, அதைப்போல ஆதிதிராவிடர்களுக்கும் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ அபத்தமானது. உண்மையில் பட்டியல் சமூகத்தினரிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்றால் அது அருந்ததியர் சமூகம்தான். கலைஞரால் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பாக, அச்சமூகத்தில் இருந்து மருத்துவர்களும், பொறியாளர்களும் ஒற்றை இலக்கத்தில்தான் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் உள் இடஒதுக்கீட்டின் பலனாக இப்போது ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மருத்துவர்களும், ஆயிரக்கணக்கான பொறியாளர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். ஜாதித் தூய்மைவாதம் பட்டியல் சமூகத்தினருக்குள் எள்ளளவும் ஒற்றுமையை ஏற்படுத்தாது. சம வாய்ப்புகள், சம உரிமைகளோடு கரம் கோர்க்கும்போதே ஒற்றுமை வலுப்பெறும். அதற்கான பாலமாக உள் இடஒதுக்கீடு பயன்பட வேண்டுமென்பதே நமது நோக்கம்.
இச்சமயத்தில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் கவனத்தில்கொண்டு பாமகவுக்கு சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. மருத்துவம் – சட்டம் – பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் 10.5 விழுக்காட்டிற்கு அதிகமாகவே வன்னியர் சமூகம் பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதே ஆர்.டி.ஐ. தகவலின் சாராம்சம். ஆனால் உயர் பொறுப்புகளில் வன்னியர்கள் இல்லை என்கிறார் அன்புமணி ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிற மற்ற சமூகங்கள் எண்ணிக்கையிலும், சமூக நிலையிலும் வன்னியர்களைக் காட்டிலும் கீழானவர்களே இருக்கிறார்கள். கடைநிலைப் பொறுப்புகளிலேயே அவர்கள் இல்லை என்றால், உயர் பொறுப்புகளில் எப்படி இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
உயர் பொறுப்புகளில் வன்னியர்கள் இல்லை என்பதுதான் அன்புமணி ராமதாசுக்கு உண்மையிலேயே கவலை என்றால், உயர்நீதிமன்ற – உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை வன்னியர்கள் இருக்கிறார்கள்? பிரதமர் அலுவலகம் தொடங்கி ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளில் எத்தனை பேர் வன்னியர்கள் இருக்கிறார்கள்? பார்ப்பன மயமாக்கப்பட்ட அப்பணிகளில் தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி என்றாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா? அதற்கான போராட்டங்களை பாமக இனிவரும் காலங்களிலாவது முன்னெடுக்குமா என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. சமூகப் படிநிலையில் தங்களுக்கு கீழே இருப்பவர்களை மட்டும் எதிர்ப்பதோ அல்லது அவர்களை ஒடுக்கிக்கொண்டே நாம் மட்டும் முன்னேறினால் போதுமானது என்று சிந்திப்பதோ அப்பட்டமான பார்ப்பனிய மனநிலை. அதை ரவிக்குமாரும், அன்புமணியும் உணர வேண்டும்.

பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

You may also like...