தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

உலக வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்கள் ஏராளம் உண்டு. நாட்டை மீட்க, எல்லையை மீட்க அல்லது நாட்டை பிரிக்க என மண் சார்ந்த போராட்டங்களே அவற்றில் பெரிதினும் பெரிதாக உள்ளன. அமெரிக்காவில் கருப்பர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் அல்லாதவர்களை அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தில் இருந்து விலக்கி வைத்த நிறவெறிக்கொள்கைக்கு எதிரான போராட்டம் போன்ற நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களும் உலக வரலாற்றில் உண்டு.
ஆனால் இவை பேசப்பட்ட அளவுக்கு, உலக வரலாற்றில் பேசப்படாத மற்றொரு போராட்டம் உண்டென்றால் அது பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டமே. பிறப்பின் அடிப்படையிலான இன இழிவை நீக்க பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் கண்டதன் நூற்றாண்டு இவ்வாண்டு நவம்பரில் தொடங்கவிருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரியார் சுயமரியாதை மீட்புக்கான போராட்டத்தை தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் 1920 நெல்லை மாநாடு, 1921 தஞ்சை மண்டல மாநாடு, திருப்பூர் மாகாண மாநாடு, 1923-இல் நடந்த சேலம் மாகாண மாநாடு, 1924-இல் திருவண்ணாமலை மாகாண மாநாடு, 1925-இல் காஞ்சி மாகாண மாநாடு என தொடர்ச்சியாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சி இத்தீர்மானங்களை ஏற்க மறுத்ததன் விளைவே, 22.11.1925 அன்று நடைபெற்ற காஞ்சி மாநாட்டின் பாதியிலேயே வெளியேறினார் பெரியார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பெரியார் தொடர்ச்சியாக வலியுறுத்தக் காரணம் ஏன் என்ற கேள்வியே, சுயமரியாதை இயக்கத்தை ஏன் அவர் தொடங்கினார் என்ற கேள்விக்கும் பதிலாக இருக்கும். எண்ணிக்கையில் நூற்றுக்கு மூவராக இருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் நூற்றுக்கு 97 பேராக இருந்தனர். 1912-இல் துணை ஆட்சியர்களில் 55 பேர் பார்ப்பனர்கள். மாவட்ட முன்சீப்களில் 72 பேர் பார்ப்பனர்கள். துணை நீதிபதிகளில் 83 பேர் பார்ப்பனர்கள். ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மற்ற அனைத்து சமூகத்தினரும் இருந்தனர். கல்வி நிலையங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.
இந்த நிலைமையை மாற்றி எல்லோரும் கல்வி- வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார் பெரியார். சமத்துவத்திற்கு தடையாக இருந்த ஜாதி, மதம், புராணம், சாஸ்திரங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் எதிர்ப்பதையே கொள்கையாகக் கொண்டார். இந்த கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்ற பெரியார் ஏந்திய முதல் ஆயுதம் ‘குடி அரசு’. 1922ஆம் ஆண்டிலேயே இதழ் தொடங்க பெரியார் முடிவெடுத்தபோதிலும், 1925ஆம் ஆண்டு மே 2ஆம் தேதிதான் முதல் இதழ் வெளியானது. திருப்பாதிரிப்புலியூர் திருமடத்தின் தலைவராக இருந்த ’சிவசண்முக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் முதல் படியை வெளியிட்டு குடிஅரசு ஏட்டை தொடங்கிவைத்தார்.
அன்று தொடங்கி 1949 நவம்பர் வரை குடிஅரசு ஏடு வெளியானது. பெரியாரின் பண்பாட்டுப் புரட்சியே ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் போக்கைப் புரட்டிப்போட்டது என்பதற்கான ஆகச்சிறந்த வாக்குமூலமாக ‘குடிஅரசு’ திகழ்கிறது. “மக்களுள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்” என்று குடிஅரசின் நோக்கத்தை முதல் இதழிலேயே விளக்கியுள்ளார் பெரியார். தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்திலேயே வாரம் 10,000 இதழ்கள் விற்பனையானது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு குடிஅரசின் வீச்சு பல்லாயிரம் மடங்கு பெருகியது. தமிழ்நாட்டின் அறிவுப் புரட்சிக்கான கலகக்குரலை குடிஅரசு போல அதற்கு முன்பு வேறெந்த இதழும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் சமதர்ம அறிக்கை, புரட்சியாளர் அம்பேத்கரின் லாகூர் ஜாட் பட் தோடக் மண்டலத்தார் மாநாட்டு தலைமையுரையை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டது குடிஅரசு ஏடு. வடமொழிச் சொற்களை தவிர்த்து எழுத்துச் சீர்திருத்தத்தை குடிஅரசில் நடைமுறைப்படுத்தினார் பெரியார். பெரியார் மட்டுமின்றி கைவல்ய சாமியார், சிங்காரவேலர், சாமி சிதம்பரனார், மயிலை சீனி.வெங்கடாசாமி, கோவை அய்யாமுத்து, பாரதிதாசன், ச.குருசாமி, ப.ஜீவானந்தம், ஜனக சங்கர கண்ணப்பர், ஈழத்து சிவானந்த அடிகள், பண்டிதர் முத்துசாமி, ஆர்.நீலாவதி, அன்னபூரணி, அ.இராகவன் என எண்ணிலடங்காத சிந்தனையாளர்களின் கருத்துக்கள், கட்டுரைகளை குடிஅரசு ஏடு தாங்கி வெளியாகியுள்ளது.
பெரியார் ஜாதிப் பட்டத்தை துறந்தபோது குடிஅரசில் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டம் தானாக ஒழிந்தது. பெண்கள் பத்திரிகைகளில் எழுதுவதே அரிதினும் அரிதாக இருந்த அக்காலகட்டத்தில் நாகம்மையாரையும், கண்ணம்மாளையும் குடிஅரசு பதிப்பாளராக நியமித்தவர் பெரியார். தமிழ் இதழியல் வரலாற்றில் பெரும் சிந்தனைப் புரட்சியையும், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வியலில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய ஏடுகளில் குடிஅரசுக்கு நிகர் வேறு இல்லை. நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட சுயமரியாதைப் புரட்சியின் முதல் சுடராக ஒளிபாய்ச்சிய ‘குடிஅரசு’ இதழை மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, மாபெரும் உழைப்புக்குப் பிறகு மக்கள் கரங்களில் தொகுப்பாகத் தவழச் செய்தது ‘பெரியார் திராவிடர் கழகம்’.
1925 முதல் 1938 வரையிலான குடிஅரசு இதழை “பெரியாரின் எழுத்தும் பேச்சும்” என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட பிறகே, இன்றைய இளம் தலைமுறையும் அடிக்கட்டுமானத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தை அறியும் நிலை ஏற்பட்டது. பெரியார் குறித்த ஆய்வாளர்களுக்கும் அருமருந்தாக அமைந்தது. அதற்காக கழகம் எதிர்கொண்ட சட்டப் போராட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. எனினும் கழகத்தின் இடைவிடா முயற்சிகளாலேயே குடிஅரசு இதழை இன்றைக்கு எல்லோரும் படிக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரியாரின் எழுத்துக்களை மற்றவர்களும் வெளியிட வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சுயமரியாதை சிந்தனைகளை பரப்ப வேண்டிய அவசியம் இப்போது முன்பை விட அதிகமாக இருக்கிறது. இக்காலச்சூழலில் பெரியாரின் எழுத்துக்களையும், சிந்தனைகளையும் இன்னும் வீரியமாக மக்களிடத்தில் எடுத்துச்செல்வோம்.

பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

You may also like...