தலையங்கம் – தூய்மைப் பணியாளர்களின் அவலம்
2015ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு சென்னை மீண்டும் ஒரு வெள்ள அபாயத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறது. 2015ம் ஆண்டில் வந்தது செயற்கை வெள்ளம், இப்போது வந்திருப்பது இயற்கை வெள்ளம் என்று தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் உண்டு. 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இப்போது இயற்கயின் சீற்றம், 2015ல் பெய்த மழையின் அளவை விட இரு மடங்கு அதிகமாக மழையை சென்னை சந்தித்துள்ளது.
அப்போது சராசரியாக 25செ.மீ அளவு, இப்போது 47 செ.மீ அளவு. நான்காண்டு காலம் முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தி பேரிடரிலும் அரசியல் நடத்த விரும்புவது தான் வேதனைக்குரியது. சென்னையில் ரூ.3000 கோடி செலவில் மழைநீர் தேங்காமல் வடிகால் பணிகளை திமுக ஆட்சி மேற்கொண்டும் ஏன் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது என்று கேட்கிறார். அந்தப் பணிகள் நடைபெற்ற காரணத்தால் தான் சென்னை பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறது என்று முதல்வர் சரியாக பதில் கூறியுள்ளார்.
வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மின்சாரக் கம்பிகள் அறுந்துவிழுந்து உயிர்ப் பலிகள் நடப்பது கடந்தகால கசப்பான வரலாறு. அத்தகைய உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால் தான். மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு, வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் இணைப்பை தந்துவருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கூறும் காரணம் தான் விசித்திரமாக உள்ளது. வெள்ளம் சூழ்ந்து நிற்பதை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதால் தான் மின் இணைப்பைத் திட்டமிட்டு துண்டித்திருக்கிறார்கள் என்கிறார். வெள்ளம் சூழ்ந்து இருப்பதை மின்சார விளக்குகள் இல்லாமல் பகலிலேயே மக்கள் பார்க்க முடியாதா? கடந்தகால ஆட்சிகளில் இப்படி வெள்ளம் வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இல்லையா?
2015ல் ஜெயலலிதா ஆட்சியில் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்ட ஒரு இலட்சம் கன அடி தண்ணீரால் சென்னையில் 193 பேர் பலியானார்கள். ஒரு மாத அளவுக்கு சென்னை மாநகரம் மின் இணைப்பின்றி இருளில் தவித்ததை மக்கள் மறந்துவிடவில்லை.
புயல் எச்சரிக்கை வந்தவுடனேயே தமிழக முதல்வர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கும் மக்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அய்.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். 36 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டும் போது நீர் உடனே வடிந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. தேங்கிய நீரை எந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணிகள் தீவிரமாக நடப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முழு ஆற்றலையும் அரசு பயன்படுத்தி மக்களை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை.
இது தொடர்பாக மற்றொரு கருத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும், பேரிடர், வெள்ளம், புயல் சூழ்ந்த காலங்களில் களத்தில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மக்களை காப்பாற்றுவது யார்? பேரிடர் மேலாண்மை பாதுகாப்புக் குழுவினரும் துப்புரவுப் பணியாளர்களும் தான். இப்போது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து 5000 துப்பரவுப் பணியாளர்கள் கூடுதலாக வரவழைப்பட்டுள்ளனர். இவர்கள் தான் தங்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் சூழலைத் தாங்கிக் கொண்டு உடல் உபாதைகளை ஏற்று இந்தப் பணிகளை செய்தாக வேண்டும். இவர்கள் எல்லாம் ‘பிரம்மாவின்’ நெற்றியில் பிறந்தவர்கள் அல்ல, சாதி இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் சுமந்து நிற்பவர்கள்.
மழை இல்லவிட்டால் யாகம் நடத்த வேண்டும் என்று கூறும் வேத புரோகிதர்கள் கூட்டம் பெருமழை வெள்ளம், புயல்களை நிறுத்துவதற்கு யாகங்கள் எதையும் நடத்துவதில்லை. யாக மோசடிகள் அம்பலமாகிவிடுமே! இவர்கள்தான் ஜாதியையும், வர்ணாசிரமத்தையும் காப்பாற்றும் இந்துதர்மத்தின் பெருமைகளை பேசுகிறார்கள். சனாதன தர்மமே உயர்வானது என்கிறார்கள். இவர்கள் பேசும் சனாதன தர்மத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றவும், ஊரை தூய்மைப்படுத்தவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் தான் இப்போதும் தேவைப்படுகிறார்கள்.
2015 வெள்ளத்தில் இப்படி வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை நகரத்தை சுத்தப்படுத்த அழைக்கப்பப்பட்ட பணியாளர்களுக்கு கையுறை போன்ற பாதுகாப்பு சாதனங்களைக் கூட அன்றைய அட்சி வழங்க முன்வரவில்லை. இப்போதும் அத்தகைய துயரங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது ஆட்சியாளர்கள் இவர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊதியங்களை தாரளமாக வழங்க வேண்டும்.
துப்புரவுப் பணிகளில் அனைத்து வர்ணத்தவர்களுக்கும் பங்கு உண்டு என்ற நிலையை நோக்கி அரசின் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கோவில் கர்ப்பகிரக உரிமை தங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடுகிறது ஒரு கூட்டம், ஆனால் துப்புரவு பணி உங்கள் சமூகத்துக்கு மட்டுமே என்று திணிக்கிறது இந்த சமூகம், இரண்டுமே சனாதனம் தான். வெள்ள நிவாரணம் பற்றி பேசும் போது அதில் அடங்கியுள்ள சமுதாய அவலங்களையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 07122023 இதழ்