தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது.
ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரால் நகர் அருகே உள்ள புல்ராய் முகல்கடி என்னும் கிராமத்தில், போலே பாபா என்னும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 பேர் கூட வேண்டிய இடத்தில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் கூட அனுமதித்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது.
காலால் மிதிக்கப்பட்டு, விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, மூச்சித் திணறி பெண்கள், குழந்தைகள் பாரபட்சமின்றி இறந்திருக்கிறார்கள். இத்தகைய பெரும் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூட உத்தரப் பிரதேச சாமியார் ஆதித்யநாத் அரசு தயாராக இல்லை. மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மானுடத்தன்மை அற்ற முறையில் நடந்திருக்கிற இந்த உயிரிழப்புகளைக் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்திருக்கிறது உத்தரப் பிரதேச அரசு. கள்ளச்சாராயத்திற்கு எதிராக கொதித்த எவரும் இதுவரை, “ஆன்மீகம் என்னும் போதைதான் இந்த மரணங்களுக்குக் காரணம், எனவே ஆன்மீகத்தை தடைசெய்ய வேண்டும், மத நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும், கோயில்களை மூட வேண்டும்” என்று கேட்கவில்லை.
கள்ளச்சாராய மரணங்களைப் போல இத்தகைய ஆன்மீக விழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பதும் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கிறது. 1954ஆம் ஆண்டு பிரயாக் கும்பமேளாவில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடங்கி, 2022 ஜனவரியில் ஜம்மு & காஷ்மீரில் வைஷ்ணோ தேவி கோயில் விழாவில் ஏற்பட்ட பக்தர்கள் இடையிலான மோதலில் 12 பேர் உயிரிழந்தது வரையில் எண்ணற்ற உதாரணங்கள் நம்மிடையே உள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மத வழிபாட்டு நிகழ்வுகளின்போது, ஏற்பட்ட விபத்துகளால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
கள்ளச் சாராய விவகாரத்திலாவது, சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்படும் மரணங்களுக்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட்ட முன்னுதாரணமே இந்த நாட்டில் இல்லை. இத்தகைய அவல மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும், எண்ணமும் ஒன்றிய அரசிடம் இல்லை. மாறாக, சாமியார்களை ஊக்குவிப்பதை மட்டும் மிகத் தெளிவாகச் செய்கிறது ஒன்றிய அரசு. சாமியார் போலே பாபாவைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீக நபராக மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது. இவருடைய உண்மையான பெயர் சூரஜ் பால். காவல்துறையில் காவலராகப் பணியாற்றிய இவர் 1990-களில் விருப்ப ஓய்வில் சென்று, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான காஸ்கஞ்சிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சத்சங்கங்களை நடத்தத் தொடங்கினார். உண்மையுடன் எப்போதும் ஒன்றி இருப்பதுதான் ‘சத்சங்கம்’ என்கிறார்கள். ஆனால் ஆன்மீகம் என்பது உண்மை அல்ல, அது நம்பிக்கை சார்ந்தது. ஆக அந்த வார்த்தையே போலியானது.
போலே பாபா முதலில் அரிய வகை நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் தனக்கு இருப்பதாகக் கூறியே மக்களைக் கவர்ந்தார். 2000ஆம் ஆண்டில் இறந்த சிறுமிக்கு உயிர் கொடுப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்காக அவர் கைதும் செய்யப்பட்டார். அந்த கைது சம்பவம்தான் இந்த சாமியாருக்கு பெரும் விளம்பரத்தைக் கொடுத்தது. அடிப்படையில் இந்த சாமியார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெரும்பாலான தலித் மக்கள் இவரை அப்படியே நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் தொடங்கினர். உத்தரப் பிரதேசத்தின் எட்டா, ஹத்ராஸ், புலந்த்சாகர், அலிகார் மற்றும் குர்ஜா மாவட்டங்களிலும், அருகில் இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஹத்ராஸில் கூடியவர்களிலும் பெரும்பகுதி பட்டியல் சமூகத்தினரே.
இத்தகைய சாமியார்களால் பட்டியல் சமூகத்தினர் அம்பேத்கரிய சிந்தனைகளுக்குள் ஈர்க்கப்படாமல் தடுக்கப்பட்டு, இந்து மதப் போலிப் பெருமைகளை உள்வாங்குகின்றனர் என்ற கவலை அம்பேத்கரிய செயற்பாட்டாளர்களிடமிருந்து எழத் தொடங்கியிருக்கிறது. இந்து மதப் பெருமை நாளடைவில் இந்துத்துவ அரசியலுக்குள் இழுக்கும் வேலையையும் செய்துவிடுகிறது. எனவே தனிநபரைப் பாதிக்கும் சாராய போதையை விட, சமூகத்தையே சீரழிக்கும் ஆன்மீக போதை பேராபத்தானது. அதற்கு எதிராகவும் குரல்கள் எழ வேண்டும்.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...