தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!
ஜவகர்லால் நேருவின் ஆட்சிக்காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரையில் இந்தியாவில் 188 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதற்கு மாறாக, பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கூறுபோட்டு விற்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்று, 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமென்று 2 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline).
தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலம் தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 2023-2024ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 19,000 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது பாரத் பெட்ரோலியம். “வணிகம் செய்வது ஆட்சியாளர்களின் வேலையல்ல, அரசை நிர்வகிப்பது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை” என்று பாஜகவினர் இதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். அதற்காக வருணாசிரம தர்மத்தையும் துணைக்கு அழைக்கிறார்கள். சத்திரியர்களின் (ஆட்சியாளர்களின்) பணி ஆள்வதுதான். சரி, நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தங்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்வார்களா என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. நாட்டின் சொத்துக்களை கூறுபோட்டும் இவர்கள் பேசும் தேசபக்தி எத்தனை போலியானது என்றும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
பொதுத்துறை சொத்துக்கள் அழிக்கப்படுகிறது என்பது மட்டுமே இதிலுள்ள சிக்கல் அல்ல. சமூக நீதியை படுகுழியில் தள்ளும் மற்றொரு ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசின் வசம் இருக்கும் வரையில்தான் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதுவே தனியார்மயமாகிவிட்டால் இடஒதுக்கீட்டின் கட்டாயம் இருக்காது. போராடிப்பெற்ற இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தனியார்மயமாக்கலை ஓர் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதனால்தான் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தற்போது கர்நாடகாவிலும் அத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்டம் ஒன்றுக்கு ஜூலை 15ஆம் தேதி கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளிலும் பிற நிறுவனங்களிலும் நிர்வாகப் பதவிகளில் 50 விழுக்காட்டையும், மற்ற வேலைகளில் 70 விழுக்காடு பணியிடங்களையும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். வரும் வாரத்தில் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், தொழில் நிறுவனங்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால், மறு பரிசீலனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.
எந்த மாநிலத்தில் இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டாலும், தொழில் நிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வர மாட்டோம், முதலீடுகளை திரும்பப் பெறுவோம் என்ற தொனியில் மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவம் குறித்தோ, சமநிலையைப் பேணுவது குறித்தோ தனியார் நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை, இலாபம் ஒன்று மட்டுமே நோக்கமாக இருக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லாததன் விளைவு எத்தகைய மோசமானதாக இருக்கிறது என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக இருக்கும் நிறுவனங்கள், வேலைக்கு விண்ணப்பம் பெறும்போதே விண்ணப்பதாரரின் ஜாதி அடையாளங்களையும் அறிந்து வைத்துக்கொள்கிறது. இதனால் முதல்கட்ட தேர்வுக்குப் பிறகு பட்டியல் சமூகத்தினருக்கு நூற்றுக்கு 33 பேருக்கு மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கான அழைப்பு வருகிறது. ஆனால் உயர்ஜாதியினருக்கு வெகு சிலருக்கு மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கான அழைப்பு கிடைப்பதில்லை. உயர்ஜாதியினருக்கு மிக எளிமையாக பதவி உயர்வு கிடைப்பதைப் போல, பட்டியல் சமூகத்தினருக்கு கிடைப்பதில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட ஜாதி மிக மோசமாக கோலோச்சுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 70 விழுக்காட்டினர் உயர் ஜாதி இந்துக்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நிர்வாக மட்டத்திலான பொறுப்புகளில் பட்டியல் அல்லது பழங்குடி சமூகத்தினரை காண்பதே இன்னும் அரிதினும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.
எனவே தனியார்துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே அனைத்து சமூகத்தினரும் உயர் பதவிகளை எட்ட இயலும். அதை கர்நாடக அரசைப் போல மொழியின் அடிப்படையிலானதாக சுருக்கி விடமால், மாநிலத்தின் இடஒதுக்கீடு அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் துறை இடஒதுக்கீட்டை இனியும் தாமதிப்பது சமூகநீதி கொள்கைக்கு எதிரானது. தமிழ்நாடு போன்ற திறன் செறிந்த ஊழியர்களை கொண்ட மாநிலத்தில், தனியார் துறை இடஒதுக்கீட்டினால் எந்த நிறுவனமும் பாதிக்கப்படப்போவதில்லை. இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப்படும் என்ற பார்ப்பன பஞ்சாங்கத்தின் தொடர்ச்சியாகவே இதுவும் இருக்கிறது. எனவே சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பங்களிப்பு செய்யும்போதே உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும். இது தனியார் துறைக்கும் பொருந்தும். எனவே தமிழ்நாடு அரசும் இதனைச் சிந்திக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 18.07.2024 இதழ்