தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்
மோடி ஆட்சியில் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருப்பதாக, சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் மோடி ஆட்சியின் முக்கியத்துவம் எதற்கு என்பதை “அயோத்தி” வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை திறப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜனவரி 22-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு நிறுவப் போகிறார். அதைவைத்தே நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறது பாஜக. ஆனால் “சூத்திரர்கள் மசூதியை இடித்ததோடும், அந்த இடத்தில் இப்போது கோயிலைக் கட்ட கோடி கோடியாய் பணத்தையும் பொருளையும் கொட்டியதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் சனாதன தர்மம். அதைவிடுத்து ராமர் சிலையை சூத்திரரான மோடி தொட்டு நிறுவ ஆசைப்படலாமா? சமூக ஒழுங்கு என்ன ஆவது?” என்ற தொனியில் குரல்கள் எழுந்திருக்கின்றன.
“பிரதமர் மோடி ராமர் சிலையை தொட்டு, நிறுவும்போது சங்கராச்சாரியான நான் அங்கே நின்று கைதட்ட வேண்டுமா? ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்ல மாட்டேன். என்னுடன் 100 பேரை அனுமதித்தாலும் நான் செல்லப்போவதில்லை” என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார் ஒடிசாவில் உள்ள பூரி மடத்தின் நிச்சலானந்தா சரஸ்வதி. பூரி சங்கராச்சாரியாரின் பார்வையில் மோடி ஒரு சூத்திரர், எனவே அவர் ராமர் சிலையை தொடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையே வேறு மொழியில் சொல்லியிருக்கிறார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜனவரி 3-ஆம் தேதி இவர் அளித்திருக்கும் பேட்டியில், “சதுர்வர்ண அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். வருணாசிரம அடிப்படையில் சமூகங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வகுப்பும் திறமை, செயல்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜாதி அமைப்பு இயற்கையோடு நெருங்கியத் தொடர்புடையது.” என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இன்றைய நவீன சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற காவல்துறை முதல் பிரதமர் பதவி வரை எல்லாமே வருணாசிரம சமூகக் கட்டமைப்போடு தொடர்புடையதுதானாம். அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவரவர் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் பணியில் குறுக்கிடக் கூடாது என்கிறார் பூரி சங்கராச்சாரியார். அதாவது சிலையை நிறுவுவது, குடமுழுக்கு செய்வது பார்ப்பனர்களின் வேலை, அதில் சூத்திரரான மோடிக்கு என்ன வேலை என்று மறைமுகமாகக் கேட்கிறார் அவர். வருணாசிரமக் கோட்பாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிற மோடியாய் இருந்தாலும், அவரை சூத்திரராகத்தான் பார்க்கிறது பார்ப்பனியம். ஆக, “இந்துக்களே ஒன்று கூடுங்கள்” என்று பார்ப்பனர்கள் பேசுவது, இங்கிருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாயிலாக தங்களுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளத்தான் என்பதை தனது பேச்சின் மூலம் விளக்கியிருக்கிறார் பூரி சங்கராச்சாரியார்.
அதைப்பற்றியெல்லாம் பாஜகவில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக, ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் இருந்து அதிக வருவாயைப் பெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. ஆனால் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில், உள்கட்டமைப்பு வளர்ச்சி, வாழ்வாதாரம், வறுமை ஒழிப்பு என எந்த புள்ளி விவரங்களை எடுத்தாலும் பின்வரிசையில்தான் இருக்கிறது உத்தரப் பிரதேசம். இன்னும் மின்சார இணைப்புகள் இல்லாத கிராமங்கள், சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள், 3 வேளை உணவுக்கு வழியில்லாத மக்கள் உத்தரப் பிரதேசத்தில் ஏராளம். ஆனால் அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டாத பாஜக அரசு, ராமர் கோயில் கட்டப்படுகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக அயோத்திக்கு மட்டும் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 10,000 கோடி ரூபாய்க்கு அயோத்தியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை தொடங்கியிருக்கிறது. 7,500 கோடி ரூபாயில் மாநில அரசும் சில பணிகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. அயோத்தியை அழகுபடுத்துதல், தூய்மைப்படுத்துதல், அணுகலுக்கு எளிமையாக்குதல், நவீனமாக்குதல், சுகாதாரக் கட்டமைப்புகளை பலப்படுத்துதல் என சகல வசதிகளும் கொண்ட நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என்ற வாதத்தை முறியடிக்க, இதோ அயோத்தி வளர்ந்திருக்கிறதே என்று காட்டுவதற்கான பணிகள் இவை என்றும் கொள்ளலாம். அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளைப் பற்றி சாமியார் ஆதித்யநாத்துக்கோ, பிரதமர் மோடிக்கோ என்ன கவலை?
அயோத்தியில் இத்தகைய கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில்தான் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. எல்லா மாவட்டங்களிலும் சரிசமமான வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் நோக்கையும் கருத்தில்கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சேர்த்து 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு உறுதி அளித்திருக்கிறது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக, கட்டமைப்பு வளர்ச்சிகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று முதலீட்டாளர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இதுதான் ராமர் மண்ணுக்கும் ராமசாமி (பெரியார்) மண்ணுக்குமான வித்தியாசம்.
பெரியார் முழக்கம் 11012024 இதழ்