தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டோம், காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறித்து விட்டோம் என்ற மிதப்போடு பொது சிவில் சட்டத்தை திணிக்க துணிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு முன்னோட்டமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவகாரத்து சார்ந்த நடைமுறைகளில் இனி ஒரே சட்டம்தான் இருக்கப் போகிறது. அந்தந்த மத வழக்கப்படி திருமணம் செய்யலாம், ஆனால் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்கு பொது சிவில் சட்டம் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்கூட பொது சிவில் சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இசுலாமியர்களின் திருமண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக நினைத்து பாஜக அரசு உருவாக்கிய இந்த சட்டத்தால் இந்துக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. யார் யாரை திருமணம் செய்ய வேண்டுமென்று பாஜக அரசு முடிவு செய்யக்கூடாது, இந்த சட்டத்தின் கூறுகள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது என பெண்கள் அமைப்புகளிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. பாஜகவைச் சேர்ந்த இளைஞர்களே இச்சட்டத்தின் கூறுகள் ஏற்கும்படியாக இல்லை எனக்கூறுவதாக தி ஸ்கிரால் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஒரே நாடு ஒரே வரி என ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது பெட்ரோல், டீசலுக்கு மட்டும் விலக்களித்தது போல, இந்த பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மட்டும் விலக்கு அளித்திருக்கிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்க்கை, திருமண முறைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதனால் அவர்களின் வாழ்வியல் முறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களை உருவாக்கினால் வீணாக எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தற்போதைக்கு அவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்திருக்கிறார்கள். ‘ஒரே குடும்பத்தில் இருவருக்கு வெவ்வேறு விதிகள் இருக்க முடியாது. இப்படி இரட்டை அமைப்புடன் வீடு எப்படி இயங்க முடியும்?’ என்று பொதுசிவில் சட்டத்திற்கு நியாயம் கூறினாரே பிரதமர் மோடி, அப்படியானால் அந்த குடும்பத்தினர் இல்லையா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
பாஜகவைப் பொறுத்தவரை பொதுசிவில் சட்டம் என்பது நெடுநாள் கனவு. 1967 தேர்தலில் ஜனசங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டமும் ஒன்று. அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சியாக மருவிய பிறகும் தொடர்ச்சியாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இது இருக்கிறது. ஆனாலும் பாஜக ஆட்சிக்காலங்களில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த எம்முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இப்போது பரிசோதனையாக உத்தரகாண்டில் நடைமுறைப்படுத்துவதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
உத்தரகாண்ட் மாநிலம் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய மாநிலம். இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். இசுலாமியர்கள் 13 விழுக்காடு மட்டுமே இருக்கின்றனர். எனவே எதிர்ப்புகளை எளிமையாகக் கையாளலாம். இந்து- இசுலாமியர்கள் இடையிலான பிளவை அதிகரித்து, இந்துக்களை பாஜகவின் பின்னால் அணிதிரட்டலாம், இந்த முயற்சி வெற்றி பெற்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த துணியலாம், பிறகு நாடு முழுவதும் அமல்படுத்தலாம் என்பது பாஜகவின் கணிப்பு.
ஏனெனில் அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கான சிறப்புரிமையை பறித்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த துணிவது என பாஜகவின் ஒவ்வொரு அசைவுமே இந்துக்கள் அல்லாதவர்களை நீக்கம் செய்வது என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழ உரிமையில்லை என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்லவில்லை. யார் இந்துக்கள் என்பதையே இந்து அல்லாத கிறித்தவர்தான் வரையறை செய்தார். அந்த இந்து அடையாளத்தை மூலதனமாக்கி, இந்து- இந்தி- இந்தியா என கட்டமைக்கத் துடிக்கிறது பாஜக.
2 மதங்களுக்கு இடையில் பொதுச் சட்டம் வேண்டுமென்று கேட்கும் பாஜக இரண்டு ஜாதிகளுக்கு இடையிலும் பொதுச் சட்டம் வேண்டுமென்று கேட்க துணியுமா? ஒவ்வொரு ஜாதியும் இனி தனித்தனி நடைமுறையின்படி திருமணம் செய்யக்கூடாது! எல்லா ஜாதிகளும் ஒரே நடைமுறையின்படிதான் திருமணம் செய்ய வேண்டுமென்று பேச பாஜகவிற்கு துணிச்சல் இருக்கிறதா? தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு இந்து, உயர் ஜாதி இந்துவை திருமணம் செய்ய சமூக ரீதியான தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்று பொது சிவில் சட்டம் கொண்டு வர துணிச்சல் இருக்கிறதா? ஆணவக் கொலைகளை தடுக்க பொது சிவில் சட்டத்தில் இடம் இருக்கிறதா? அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராவதற்கு பொது சிவில் சட்டத்தில் வழி இருக்கிறதா? இதெல்லாம் இல்லாத ஒரு சட்டம் எப்படி பொது சிவில் சட்டமாகும்?
எனவே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மதச் சிறுபான்மையினரை நசுக்க ஒரு முயற்சியை இதன்மூலம் பாஜக செய்கிறது. அதற்காக ஆட்சியதிகாரத்தில் அமரவைத்த உத்தரகாண்ட் மக்களை, சோதனைக் கூட எலிகள் போல பயன்படுத்த துணிந்துவிட்டது பாஜக!
பெரியார் முழக்கம் 15.02.2024