தலையங்கம் – பெரியார் மானுடத்தின் திறவுகோல்
பெரியார் தொடங்கிய குடி அரசுக்கு வயது 100; 1925இல் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிக்கை பார்ப்பனரல்லாத சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு வித்திட்டது என்பதை மறுத்துவிட முடியாது. பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டை 1929இல் நடத்தினார். அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே குடிஅரசு தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இது மானத்திற்கான மீட்புக்களம்.
பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற போராட்டக் களத்தை முன்னெடுத்து அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை சுயமரியாதை இயக்கத்திற்கும் குடிஅரசு ஏட்டிற்கும் உண்டு. பார்ப்பன ஆதிக்கம் முழு வீச்சில் இருந்த காலகட்டம் அது. அப்போது பார்ப்பனரல்லாத மக்களின் மானத்தையும், அறிவையும் மீட்பதற்காகப் பெரியார் களம் இறங்கினார். மானம் பெறுவதற்கு சூத்திர இழிவிலிருந்து விடுதலைக் கோரினார். அந்த இழிவைக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், பழக்கவழக்கம் என்ற நம்பிக்கைகளின் வழியாகத் திணிக்கப்பட்டதை உறுதியோடும் அச்சமின்றியும் எதிர்த்து நின்றார்.
அறிவுக்கான மீட்புக் களத்தில் அவர் முன்வைத்த முழக்கம் வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு. நீதிக்கட்சி ஆட்சி பின்பற்றிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்ப்பன சுதந்திர இந்தியாவில் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இருந்து போர்க்குரல் எழுந்தது. அந்தக் குரலை எழுப்பியவர் பெரியார். திமுக அதை வழி மொழிந்தது. அரசியல் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்துக்குள்ளே செல்லாத பெரியார் வெளியே நின்று இதை மக்கள் இயக்கத்தின் வலிமையால் சாதித்துக் காட்டினார்.
பார்ப்பனரல்லாத சமுதாயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அதிகாரக் கட்டமைப்பை உடைத்தெறிந்தது இந்த இட ஒதுக்கீடு எனும் வகுப்புவாரி உரிமை. அன்று பார்ப்பனர்களின் பிடியில் இருந்த காங்கிரஸ் இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தது. இன்று அதே காங்கிரஸ் பண்பு மாற்றத்திற்கு உள்ளாகி இட ஒதுக்கீட்டை உரத்து முழங்குகிறது.
இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற வர்க்கப் பார்வையை முன்வைத்த பொதுவுடமைக் கட்சிகள் இன்று பெரியாரின் சமூகநீதிப் பார்வையை ஏற்றுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
கடந்த வாரம் கேரள மாநிலம் பாலக்காட்டில் மூன்றுநாள் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அதில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நிபந்தனையுடன் ஆதரவளித்தது ஆர்.எஸ்.எஸ். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆனால் இந்தக் கணக்கெடுப்பை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார். ஆக ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆர்.எஸ்.எஸ். பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. ஒன்றிய ஆட்சி இதற்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முன்வருமா? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
வர்ணாசிரமம் வழியாகப் பார்ப்பனிய மனுதர்மம் திணித்த கொடூரமான சமூக அமைப்பை உடைத்து அனைவருக்கும் சமூகநீதியைப் பகிர்ந்தளிப்பது தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு. சமூக சமத்துவத்திற்குத் தடைக்கற்களாகப் பெரியார் அடையாளம் காட்டியக் கொள்கைகளே இன்று அரசியலில் மையப் பொருளாக வலிமையுடன் நிலைபெற்று நிற்கிறது. இந்து தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், ஓர் உண்மையை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்து சமூகம் ஜாதிகளால் சிதறுண்ட சமூகம், இதைச் சமப்படுத்த பெரியார் பேசிய வகுப்புரிமை தான் மாமருந்து என்பதே இப்போது ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட கருத்தின் உள்ளடக்கம். இது பெரியாரியலுக்கு கிடைத்த வெற்றி.
இப்போது தான் கடவுள், மத நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றன என்று பெரியாரிய எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் வாதம் அர்த்தமற்றது என்பதே நமது கருத்து. “தனக்கு விதிக்கப்பட்ட தலைவிதி இதுதான்” என்று பார்ப்பனிய அடிமைகளாகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த மக்கள் இன்றைக்கு இல்லை. மக்கள் அந்த நம்பிக்கைகளை ஓரம்கட்டிவிட்டு வாழ்வுரிமை – கல்வி உரிமை – தன்மானத்திற்காகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். கடவுளிடமும் மதச் சடங்குகளிடமும் இந்த உரிமைகளை அடகு வைப்பதற்கு மக்கள் தயாராக இல்லை. இதுவே இன்றைய வாழ்க்கையின் எதார்த்தம். “பெண்களுக்கு கல்வித் தரக்கூடாது; கடல் கடந்து செல்வது பாவம்; விதவைகள் மறுமணம் புரியக் கூடாது” என்று சனாதனம் கடைப்பிடித்தக் கொள்கைகள் இன்று காற்றில் பறந்துவிட்டன. இது சனாதனம் சரியத் தொடங்கியிருக்கிறது என்பதன் வெளிப்பாடு.
பெரியார் பேசிய பெண்ணுரிமை இன்று கல்வி கற்ற பெண்களின் அடையாளமாகி வருகிறது. “நாங்கள் ஏன் அடிமைகள்?” என்ற கேள்விகளோடு பெண்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களுக்காகவே உரிமைத் திட்டங்களை அரசுகள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. இது மனுதர்மத்திற்குக் கிடைத்த மரண அடி.
பெரியார் காண விரும்பிய அறிவியல் இன்று உலகத்தையே புரட்டிப் போடுகிறது. மருத்துவம், உற்பத்தி, பண்பாடுகளில் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். மரபணுக்களை எடிட் செய்து மாற்றிவருகிறது இந்தத் தொழில்நுட்பம். அமெரிக்கப் பயணத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் இனி வரும் உலகம் நூலின் கருத்துகளை இணைத்துத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சமூகத்தின் பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தி மீண்டும் பழமைக்கே இழுத்துச் செல்லும் முயற்சிகள் மற்றொரு பக்கம் தீவிரமடைந்து வருகின்றன. அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டே மக்களைக் குழப்பும் இந்த முயற்சிகள் திட்டமிட்டு அரங்கேறி வருகின்றன. கிராமங்களில் ஜாதியப் பாகுபாடுகள் தொடர்கின்றன. இதற்கு அரசியல் துணைப் போகிறது. இந்தத் தடைகளைத் தகர்த்து பெரியாரியலை வேகமாக முன்னெடுக்கும் செயல்திட்டங்களோடு மக்களைச் சந்திக்க உறுதியேற்பது, சமூக மாற்றத்திற்காகச் செயல்படும் ஒவ்வொருவரின் கடமையாகும். பெரியாரின் பிறந்தநாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி இதுவாகவே இருக்கும். ஆம்! பெரியார் மானுடத்தின் திறவுகோல்.
பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்