தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்
தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதி
என்.டி.டி.வி நிறுவனத்தை ஏற்கெனவே முழுமையாக கையகப்படுத்திவிட்ட அதானி குழுமம், இப்போது ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காடு வாங்கிவிட்டது. ஊடகத் துறையில் அதானி குழுமம் தனது ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக்கொண்டே இருப்பதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டாலே, கடும் நெருக்கடிகளை ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. குஜராத் கலவரம் தொடர்பாக முக்கிய ஆவணப் படம் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. அதற்காக, பிப்ரவரி மாதத்தில் வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டது பிபிசி நிறுவனம். அதேபோல “நியூஸ் கிளிக்” ஊடகம் சீனாவில் இருந்து நிதி பெற்றதாகக் கூறி, அதன் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. “நியூஸ் கிளிக்” நிறுவனரான பிரபீர் புர்காயஸ்தா இன்னமும் சிறையில் இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் இதுதான் நிலைமை என்று பகிரங்கமாக மிரட்டுவதாகவே இச்சம்பவங்கள் இருந்தன.
டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைக் கூட பல ஊடகங்கள் வெளிப்படையாக பேச முன்வரவில்லை என்பது மட்டுமின்றி, வண்ணப் புகை வீச்சு, புகை உமிழும் கருவி என்றெல்லாம் வார்த்தைகளில் கூட அதீத மென்மைப்போக்கை கடைபிடித்தன. மைசூருவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா தான் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்தார் என்பதுகூட விவாதமாக்கப்படவில்லை. ஊடகங்கள் மட்டுமல்ல, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புள்ளியியல் துறை, நிதிக்குழு என தன்னாட்சி அதிகாரம் கொண்ட அனைத்து அமைப்புகளும் சிதைந்து சீரழிந்து நிற்கின்றன. எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் இந்த அச்சத்தை எழுப்பவில்லை.
ரிசர்வ் வங்கியின் உயர் பதவியில் இருந்தவர்கள், புள்ளியியல் துறையின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் இந்த அச்சத்தை கடந்த காலங்களில் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வரிசையில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த ரோகிந்தன் நாரிமன் சில முக்கியக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ‘Constitution: Check And Balances’ என்ற தலைப்பில் பேசியிருக்கும் அவர், பிபிசி அலுவலகத்தில் நடந்த சோதனை, தேர்தல் ஆணைய மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், ஆளுநர்கள் நடத்தை குறித்தெல்லாம் கவலை தெரிவித்திருக்கிறார். “ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் தருணங்களில் நீதிமன்றங்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 161-வது இடத்தில் இருந்து 180-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. சில செய்திகளுக்காக வருமான வரிச்சோதனை நடத்தப்படுகிறது என்றால், அந்த சோதனையை சட்ட விரோதமானது என்று நீதிபதிகள் துணிச்சலோடு சொல்ல வேண்டும். ஊடகங்கள் கொல்லப்பட்டால் அதற்குப் பிறகு வேறெதுவும் இல்லை”என்று நாரிமன் கூறியிருக்கிறார்.
அதேபோல தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, ஒன்றிய அமைச்சரை இணைத்திருக்கும் பாஜக அரசின் புதிய மசோதா குறித்தும் நாரிமன் கவலை தெரிவித்திருக்கிறார். பிரதமர், ஒன்றிய அமைச்சரை தவிர எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் மட்டுமே அக்குழுவில் இருப்பதால், இனி பிரதமர் விரும்பும் நபரே தேர்தல் ஆணையராக வர முடியும் என்ற சூழலை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால் இனி தேர்தல்கள் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடைபெறும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி 2019ஆம் ஆண்டில் பாஜக அரசு செய்த சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கான உரிமைகளையும் பறிக்கிற துணிச்சல் பாஜக அரசுக்கு கிடைத்திருக்கிறது. மாநில சட்டமன்ற முடிவுகளை மதிக்காமல், செயல்படும் ஆளுநர்களே அதற்கு சாட்சியமாகி இருக்கிறார்கள். இதையும் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிற நரிமன், “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது கூட்டாட்சியை சிதைக்கும் செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார். சர்வாதிகாரப் பாதையை நோக்கி பாஜக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் எச்சரிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி நாரிமனின் இப்பேச்சு.
அனைத்து மட்டங்களில் இருந்தும் பாஜக அரசின் இத்தகைய மோசடிகளை அம்பலப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டுமென்பது நமக்குப் பிடித்தவர்களை, அந்த இடத்தில் அமர வைக்க வேண்டுமென்பதற்காக அல்ல. இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களில் இல்லாத வகையில் அரசியலமைப்பின் அடித்தளம் கூட இல்லாத அளவுக்கு, அடியோடு பெயர்த்தெடுத்துவிட்டு மனுநீதி ஆட்சியை நிலைநிறுத்த துணிந்திருக்கிற பார்ப்பனிய ஜனதா அரசை அகற்ற வேண்டுமென்பதற்காகவே. அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்