தலையங்கம் – எது ஆன்மீகம்?
“பூர்வ ஜென்மப் பாவம்தான் இப்போது ஊனமாகப் பிறப்பதற்குக் காரணம். பாவங்களுக்கு நரகமும் புண்ணியங்களுக்கு மோட்சமும் தான் கிடைக்கும்” என்று பேசுவது தான் ஆன்மீகமா? பள்ளி மாணவர்களிடையே இந்தக் கருத்தை விதைக்கலாமா? சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலோடு மகா விஷ்ணு என்ற ஆன்மீகவாதி இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. செய்தி வெளிவந்தவுடனேயே தமிழ்நாட்டில் கட்சிகளைக் கடந்து வந்த எதிர்ப்புகளை வரவேற்க வேண்டும். இதனால் தான் தமிழ்நாட்டை “பெரியார் மண்” என்று கூறுகிறோம். இந்தப் பேட்டி ஆன்மீகம் தான் என்ற குரல் தமிழ்நாடு பாஜகவினரிடமிருந்து மட்டுமே கேட்கிறது. உடல் ஊனம் பூர்வ ஜென்மப் பாவமே என்ற வாதத்தை அப்படியே நீட்சியாக்கித் தீண்டாமை எனும் சமூக ஊனம். பூர்வ ஜென்மப் பயன் என்று பேசினாலும் வியப்பதற்கு இல்லை.
எந்த முதலீடும் இல்லாமல் விரக்தி, குழப்பம் மற்றும் மூடநம்பிக்கைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆன்மீக வணிகம் பல கோடிகளில் புரள்கிறது. ஆன்மீகம் என்ற பெயரில் இப்போது நடக்கும் பேச்சுக் கச்சேரிகள் மக்களின் சிந்தனைகளைக் குழப்புவதோடு அவர்கள் அறிவியல் பாதை நோக்கித் திரும்பவிடாமல் தடுப்பதற்கும் பயன்பட்டு வருகின்றன.
ஆன்மீகம் தனிநபர் சார்ந்தது. அது சமூகம் சார்ந்தது அல்ல. வெறுப்பு மற்றும் தன் முனைப்புகளிலிருந்து விடுவித்து சமூகத்தில் ஒற்றுமையையும், சமத்துவ உணர்வையும் வளர்ப்பதற்கு இந்த ஆன்மீகப் பேச்சுக்கள் பயன்படுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை. எந்த ஆன்மீகவாதியாவது ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமைச் சிந்தனைகளை எதிர்த்துப் பேசியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஆன்மீகத்தை நமது உள்ளத்தில் தான் தேட வேண்டும். அது புற உலகில் இருந்து வருவதில்லை என்றுதான் எல்லா ஆன்மீகவாதிகளும் பேசுகிறார்கள். ஆனால் ஆன்மீக குருஜீக்கள் புற உலக வாழ்க்கையைத் தேடி ஓடுகிறார்கள். சொத்து, குடும்பங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு துறவியாகி ஆன்மீகம் பேசுவது என்ற நிலை மாறி இப்போது சொகுசு வாழ்க்கை, கார்ப்பரேட் வணிகம், உல்லாச பங்களா, விமானப் பயணம் என்பதே இப்போது வாழ்க்கையாகிவிட்டது.
மறுபிறவி, ஆன்மா என்ற கற்பனைகளை எதிர்த்துப் பெரியார் இயக்கம் மட்டும்தான் தமிழ்நாட்டில் பேசியது. மக்களிடம் எதிர்நீச்சல் போட்டுப் பரப்புரை செய்தது. “ஆத்மா, மோட்சம், நரகம் இவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்” என்ற வாசகங்களை அட்டையில் அச்சிட்டு மக்களிடையே பரப்பச்சொன்னவர் பெரியார். அப்போது பெரியாருக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் ‘இந்துமத விரோதி’ என்ற முத்திரைக் குத்தப்பட்டது. எதிர்ப்புகள் எழுந்தன. இப்போது மகாவிஷ்ணு என்ற பிரச்சாரகர் மறுஜென்மம், ஆத்மா பற்றி பேசியதை மூடநம்பிக்கைப் பிரச்சாரம் என்று ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கூறுகின்றனர். அறிவியல் சமூக வளர்ச்சிப்போக்கில் கொண்டுவந்த மாற்றங்களே இதற்கு அடிப்படையான காரணம். மாற்றம் இப்படித்தான் நிகழும்.
திருக்குறள் தமிழர்களுக்கான நூல் என்று அடையாளப்படுத்தி “திருக்குறள்” மாநாட்டை நடத்தியவர் பெரியார். குறைந்த விலையில் திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினார். அதே நேரத்தில் திருக்குறளில் உள்ள பெண்ணடிமை, ஊழ்வினைக் கருத்துக்களை ஏற்க முடியாது என்றும் கூறினார். உடனே பெரியார்; தமிழுக்கு எதிரி என்றார்கள். இப்போது மகா விஷ்ணு திருக்குறளில் ஊழ்வினை அதிகாரத்தைத்தான் எடுத்துக்காட்டிப் பேசினேன் என்று கூறுகிறார். தான் பேசிய முன்ஜென்மக் கருத்துக்கள்தான் ஊழ்வினை அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறார். ஊழ்வினை அதிகாரத்தைதான் பேச வேண்டுமா? காமத்துப்பாலை மாணவர்களிடையே பேச முடியுமா? என்ற எதிர் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆக திருக்குறளில் ஏற்கவியலாத கருத்துக்களும் உண்டு என்ற முடிவுக்குத்தான் வந்து சேர வேண்டி இருக்கிறது. இதைத்தான் பெரியார் அப்போதே சுட்டிக்காட்டினார்.
ஆத்மா, மோட்சம் என்ற கருத்துக்களுக்கான மறுப்பு தமிழ் இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. தமிழ் அறிஞர்கள் இதற்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார்கள். சமண இலக்கியமான மணிமேகலை காப்பியத்தில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டக் காதை என்ற பகுதி ஊதவாகம் என்ற கருத்தை முன்வைக்கிறது. இது நாத்திக வாதமாகவே இருக்கிறது. மனித உடல்களைக் கடந்த ஆன்மா மற்றும் உயிர் என்பவை ஏதும் இல்லை. உடலில் உள்ள உறுப்புகளின் சேர்க்கை வழியாக வருவதுதான் உயிர் மற்றும் உணர்வு என்ற பூதவாதம் வாதிடுகிறது. பொருள்களே சிந்தனை உணர்வுகளுக்கு அடித்தளம் என்ற பொருள்முதல்வாதக் கருத்தையே பூதவாதம் பேசுகிறது. மற்றொரு தத்துவ சமண இலக்கியமான நீலகேசி வேதம், மோட்சம், ஆன்மாவைக் கேள்வி கேட்கிறது. அதில் பூதவாதி வருவார். விளக்கில் எரியும் நெருப்பை உதாரணமாகக் காட்டுகிறார். விளக்கு எண்ணெய் திரி என்ற மூன்றும் சேர்ந்தால்தான் நெருப்பு என்ற தீ வரும். இவற்றில் ஏதேனும் ஒன்று இயங்காவிட்டால் தீ இல்லை. எனவே ‘தீ’க்கு தெய்வீக முலாம் பூசக்கூடாது, அது பொருள்களின் சேர்க்கை என்று வாதிட்டார். அப்போது வைதீகம் தனது மறுப்பாக இந்தச் சடப்பொருள்களை சேர்த்து வைப்பதற்கு இந்தக் கடவுள்தான் தேவைப்படுகிறார் என்று கூறியபோது பூதவாதி அதையும் மறுத்தார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்திலும் இதே போன்றுதான் சடப்பொருள்களோடு நெருப்பு எரியும் எனவே இவை நிலையானது. அதே போல் இந்தப் பிரபஞ்சம் நிலையானது. அதற்கு தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை இதை இயக்க கடவுள் சக்தி என்ற ஒன்று வெளியே இருந்து வரத்தேவையே இல்லை என்று பதிலளித்தார். “சென்ற காலத்துக்கும் / செல்கின்ற காலத்துக்கும் / நின்ற காலத்திலும் இந்நிகழ்ச்சியே என்று இவ்வுலகு இத்தன்மைத்தே இது அன்று அது என்று உறைப்பார் அயர்ப்பார்களே” என்று நீலகேசி கூறுகிறார். இப்போதும் கம்ப்யூட்டர் உயிர்த்துடிப்புடன் நம் ஆணையை ஏற்று இயங்குகிறது. அதை விரித்துப்பார்த்தால் உள்ளே கம்பிகளும் வயர்களுமாகத்தான் இருக்கும். உயிர் என்ற பொருள் ஏதும் இருக்காது. உள்ளம், உணர்வு, உயிர் என்பவைகளுக்கு அடித்தளம் பொருள்களே என்று அறிவியல் நிறுவிய பிறகும் பார்ப்பனியம் தனது சமூக ஆதிக்கப் பிடியில் மக்களைப் பிடித்து வைப்பதற்கு ஆன்மீகம் என்ற புதிய மோசடியைக் கையில் எடுத்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து தடுமாற்றத்தில் செயல்பட்டு வருவதை நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு பல்வேறுச் சான்றுகளைக் கூறமுடியும். அமெரிக்காவிலிருந்து இதற்கு தமிழ்நாடு முதல்வர் உடனடியாக எதிர்வினையாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. இனியாவது பள்ளிக்கல்லூரிகளில் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதோடு அதற்கு தடையாக நிற்கும் மூடநம்பிக்கை – ஆன்மீகம் என்ற பெயரில் பரப்பப்படும் பழமைவாதக் கருத்துக்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்