எனக்குப் பெருமை வேண்டாம்
காங்கரஸில் சேருவதற்கு முந்தியும், சேர்ந்த பிறகும், இப்போதும், நாளைக்கும் சரிதான் பொதுவாழ்வினால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமெனக்கில்லை. அப்படி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமிருந்தால் இம்மாதிரி அதாவது நீங்கள் உயர்வாகவும், மிகவும் விசேஷமாகவும், உயிராகவும் கருதியிருப்பவைகளை யெல்லாம் அது தப்பு, சூழ்ச்சி, இது கொடுமை என்றெல்லாம் சொல்வதைப் போன்ற ஒரு எதிர்நீச்சு வேலையிலே இறங்கியிருப்பேனா? என்று யோசித்துப் பாருங்கள். சுலபமாக “தென்னாட்டு மகாத்மா” ஆக, எனக்கு வழி தெரியுமே. “வந்தே மாதரம்! அல்லாஹ¨ அக்பர்!! பாரதத்தாய் அலறுகிறாள்!!! வெள்ளைக்காரன் சுரண்டுகின்றான். சுயராஜ்யம் வேண்டாமா?” என்றெல்லாம் சொன்னால், நான் பெரிய தேசீயவாதியாக ஆகிவிடுவேன். நீங்களும் எனக்கு காணிக்கை கொடுத்து, ஓட் கூட போடுவீர்களே. ஆனால் அந்த மாதிரி தேசீய வேலையில் நாங்கள் பட்டபாடு பார்த்துவிட்டோம். எவ்வளவோ கஷ்ட நஷ்டமடைந்தும் பார்த்தோம். அதில் எனக்கு மாத்திரம் பெருமை ஏற்பட்டு விட்டது. பயன் ஒன்றும் ஏற்படவில்லை. எதிரிகள் ஆதிக்கம் செலுத்த இடமேற்பட்டது. குடி அரசு /...