மனித வாழ்வு இலட்சியமற்றது!

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பலவகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன.

எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏது£வது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்களின் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இது முக்கியமானதாகும். இதுவே அவசியமும் பொருத்தமும் ஆனதுமன்றி மனித வாழ்க்கை என்பதன் தகுதியான இலட்சியம் இது என்று கூறலாம்.

விடுதலை 21.03.1956

நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

You may also like...