ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.)

1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின் உந்துதலில் உருவாகி வெளியாகியிருந்த ‘பராசக்தி” திரையிடப்பட்டிருந்த அசோக் திரையரங்கில் அரங்கேறிய காட்சிகளை விவரித்திருந்தது: ‘மனிதர்கள் மிருகங்களைப் போல் ஒரு குறுகிய வாசல்படியில் தங்களை நுழைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர். இவ்வளவும் போலீஸ் அடிதடியில்தான். பகீரதர் பூமிக்குக் கங்கையைக் கொண்டு வரக்கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்” ‘திரைப் படங்களுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் குறித்த வெறுப்பு இக்கடிதத்தில் வெளிப்படையாக இருந்தாலும், பராசக்தி திரைப்படம் வெகு மக்களிடையே உருவாக்கியிருந்த ஈர்ப்புக்குத் ‘தமிழனின்” விவரணை சாட்சியமானது. அந்த நாள்களில் ஆசியக்கண்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் என்று பெருமை பெற்ற மதுரைத் தங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் நூறு நாள்களுக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம்ஓடியது.இழையோடும்அரசியல் அங்கதமும், உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட அத்திரைப்படத்தின் வசனங்கள், அடித்தள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. சென்னையின் மூர்மார்க்கெட் பகுதியில் தெருவோரக் கலைஞர்கள் அத்திரைப்படத்தின் வசனத்தை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தனர். பதிலுக்கு வழிப்போக்கர்கள் அவர்களுக்குப் பணம் கொடுத்தனர். மேடைப்பேச்சுக்கான புதுமையான வசனங்களைப் பராசக்தி வழங்கியது. அரசியல் முனைவோர் அவற்றை மனனம் செய்து தங்களை எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டனர்.

 

மேட்டுக்குடியினர் மீதும் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. பிரபலமான ஆங்கிலப் பேராசிரியராக அறியப்பட்ட டி.ஜி. வைத்தியநாதன், பராசக்தி போன்ற திரைப்படங்களை ரசிப்பவரோ சகிப்பவரோ இல்லை. ஆனாலும் அவர், ‘இளம்பருவத்தில் இன்று என் மனைவியாக இருக்கும் பெண்ணுடன் பெரம்பூர் சரஸ்வதி திரையரங்கில் பார்த்த இந்தத் (பராசக்தி) திரைப்படம் குறித்துக் கடுமையாகவோ, ஒட்டுதலின்றியோ என்னால் பேச இயலாது. புஜீரபலமான ‘கா ! கா! கா ! என்ற பாடலை அவன் (சிவாஜிகணேசன்) பாடுவதைக் கேட்டோருக்கு, நான் வேறொன்றும் பெரிதாகச் சொல்லத் தேவையில்லை. இதைப் பார்க்காதவர்களுக்கு, கிறுக்கண்ணாவும் தங்கையைக் காக்க அவன் நிகழ்த்தும் புயல்வேக நீதிமன்றப் பேச்சும் எளிதில் மறந்துவிடக் கூடயவையல்ல என்று சொல்லுவேன்” என்கிறார். தங்களின் பல்முனை பிரச்சார யுக்திகளில் ஒன்றாகத் திரைப்படங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள் தி.மு.கவினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசியலுக்கும் திரைப்படத்திற்கும் நெருக்கமான சூழல் நிலவிய ஆரம்பகால தி.மு.க.பின்புலத்தில், இக்கட்டுரை இதுவரை ஆய்வுக்குட்படுத்தப்படாத தமிழ் அரசியல் வரலாற்றின் ஒரு கூறாகப் பராசக்தி திரைப்படத்தின் பயணத்தை மறுபதிவு செய்கின்றது. மேலும் இக்கட்டுரை பராசக்தி திரைப்படத்தின் ஊடாகத் திராவிட இயக்கத்தின் கருத்தியல் மாற்றங்களையும் ஆய்வுக்கு உள்ளாக்குகின்றது.

 

கதை

 

திராவிடர் கழகத்தைச் சார்ந்த பாவலர் பாலசுந்தரத்தின் பிரபலமான நாடகத்தைக் தழுவி, கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘பராசக்தி” பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலுடன் தொடங்குகிறது”, தொடக்ககாலத் தி.மு.கவின் திராவிட நாடு கோரிக்கைக்கு இணங்க, இப்பாடல் திராவிட நாட்டின் மேன்மைகளைக் கொண்டாடுகின்றது. ‘அகிலும், தேக்கும் அழியாக் குன்றம்”‘முத்துகுவியும் கடல்கள்”‘ஆற்றல்மறவர்” ‘பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு” என்று திராவிடத்தை அப்பாடல் பாராட்டுகின்றது.

 

தங்களின் பல்முனை பிரச்சார யுக்திகளில் ஒன்றாகத் திரைப்படங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள் தி.மு.கவினர். அரசியலுக்கும் திரைப்படத்திற்கும் நெருக்கமான சூழல் நிலவிய ஆரம்பகால தி.மு.. பின்புலத்தில், இக்கட்டுரை இதுவரை ஆய்வுக்குட்படுத்தப்படாத தமிழ் அரசியல் வரலாற்றின் ஒரு கூறாகப் பராசக்தி திரைப்படத்தின் பயணத்தை மறுபதிவு செய்கின்றது.

பண்டைச் சிறப்புகளின் கனவுலக சஞ் சாரத்தில் இருக்கும் பார்வையாளர்களைத் தட்டி எழுப்புவது போல் இப்பாடலைத் தொடர்ந்து இன்றைய திராவிட நாட்டின் பரிதாபமான  நிலையை இத்திரைப்படம் விவரிக்கிறது. ‘இத்தகையஎழில்மிக்கநாட்டின்குழந்தைகள்இந்த மண்மாதாவின் மடியிலே தவழாமல் வேறு நாடு சென்று விடுகின்றனர். இதை நினைக்கும்போது நமதுஅறிஞர்சொன்னதுஞாபகத்திற்குவருகிறது. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? . . . சொந்த நாட்டிலே பிழைக்க வழியில்லாமல் அயல்நாடு சென்ற தமிழர்கள் அழுது அழுது வடித்த கண்ணீர்தான் காரணம் என்று கூறினார்.” இவ்வாறாக பார்வையாளர்களுக்குத் தன்னுடைய அரசியலை வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தொடங்குகின்றது பராசக்தி திரைப்படம்.

ஒரு நடுத்தரவர்க்கத் தமிழ்க் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளைச் சுற்றி நகர்கிறது பராசக்தியின் கதை.மாணிக்கம்பிள்ளை (துரைசாமி) தன் மகள் கல்யாணியுடன் (ஸ்ரீரஞ்சனி) மதுரையில் வசித்து வருகின்றார். அவருடைய மூன்று மகன்கள் குணசேகரன் (சிவாஜி கணேசன்), சந்திரசேகரன் (எஸ்.வி.சகஸ்ரநாமம்), ஞானசேகரன் (எஸ்;. எஸ்.ராஜேந்திரன்) ஆகியோர் பிழைப்புத்தேடி ரங்கூனுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். சந்திரசேகரன் பாரிஸ்டர் ஆகி வசதியாக வாழ்கின்றார் : அவரது மனைவி சரஸ்வதியும் (சுசீலா), அவரின் மற்ற இரு சகோதரர்களும் அவருடன் வாழ்கின்றனர். இதனிடையே மாணிக்கம்பிள்ளை, கல்யாணியைத் தங்கப்பன் (வெங்கட்ராமன்) என்ற தி.மு.க. கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளருக்குத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்திற்குத் தேவையான பணத்திற்காகத் தன் வீட்டை அடமானம் வைக்கின்றார்.

மூன்று சகோதரர்களும் சரஸ்வதியும், கல்யாணியின் திருமணத்திற்கு வர முடிவு செய்கின்றனர். இரண்டாம் உலகப்போர் மூண்டுவிட்ட காரணத்தால், கப்பல் கம்பெனி ஒருவரை மட்டுமே கப்பலில் ஏற்றிக்கொள்ள முடிவு செய்கின்றது. இரு சகோதரர்களையும் அண்ணியையும் ரங்கூனில் விட்டுவிட்டு, குணசேகரன் மட்டும் சென்னைக்குப் புறப்படுகின்றான்.போர்ஆபத்துசூழ்ந்திருக்கும் நிலையில், கப்பல் குறிப்பிட்ட காலத்தில் சென்னையை அடைய முடியவில்லை. கல்யாணியின் திருமணம், பார்ப்பனர்களின் சமஸ்கிருத வேதம் முழங்க, சகோதரர்கள் யாருமின்றி நடைபெறுகின்றது.

காலவோட்டத்தில் கல்யாணி கருவுருகின்றாள். அவளும், அவளுடைய கணவன் தங்கப்பனும், ஆண் குழந்தை பிறந்தால் பன்னீர்செல்வம் என்றும், பெண் குழந்தை என்றால் நாகம்மை என்றும் பெயர் சூட்டுவதாகத் தீர்மானிக்கின்றனர். (குறிப்பு: ஏ.டி.பன்னீர்செல்வம், நீதிக்கட்சியின் பிரபலமான தலைவர். பெரியாரின் துணைவியாரான நாகம்மையார், சுயமரியாதை, இயக்கத்தின் முன்னணிச் செயல்வீரர்) துயரம் என்னவென்றால், கல்யாணிக்கு மகன் பிறந்த அதே நாளில், தங்கப்பன் சாலை விபத்தில் மரணமடைகின்றார். ஆதிர்ச்சிக்குள்ளான மாணிக்கம் பிள்ளையும் மரணமடைகின்றார். ஆவர்களுடைய வீடு, கடனை அடைப்பதற்காக ஏலம் விடப்படுகின்றது. அனாதை விதவையான கல்யாணி, பக்கத்து வீட்டுப் பார்வதியின் (ஏ.எஸ். ஜெயா) ஆலோசனைப்படி வாழ்க்கையை நடத்த இட்லிக் கடை ஒன்றைத் திறக்கின்றாள். ‘தமிழ்நாட்டிலே தாலி அறுத்தவர்களுக்கெல்லாம் அதுதானே (இட்லி கடை நடத்துவது) தாசில் உத்தியோகம்”, என அரசியல் உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பார்வதி கூறுகிறாள்.

 

கடலில் ஏற்பட்ட நீண்ட தாமதத்திற்குப் பின் குணசேகரன் சென்னை வந்தடைகின்றான். தமிழ்நாட்டில் காலடி வைத்தவுடன் அவனை ஏராளமானபிச்சைக்காரர்கள் பிச்சைக்கேட்டுச் சூழ்ந்து கொள்கின்றனர். ‘ சரிதான், போ தமிழ்நாட்டின் முதல் குரலே ரொம்ப நல்லா இருக்கு!” என நக்கலாகக் கூறுகின்றான் குணசேகரன். வங்கியில் குணசேகரன் பெரும்பணம் மாற்றுவதைக் காணும் ஜாலி (கண்ணம்மா), அவனைப் பின்தொடர்கின்றாள். அவன் சினிமாவுக்குப் போவதைத் தடுத்து? ‘அதை (சினிமாவை) குளோஸ் பண்ணுவதற்கு ஒரு சங்கம் ஏற்பட்டால், அதற்கு நான்தான் தலைவியாக இருப்பேன். நம்ம நாட்டுக்கு ஏற்றது பரதநாட்டியம்… அங்கே போவோம்”, என்கின்றாள். (குறிப்பு: அக்காலகட்டத்தில் சினிமா தி.மு.க. வோடும் அதன் ஆதரவாளர்களான அடித்தள மக்களோடும்அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மேட்டுக்குடி கலையாகக் கருதப்பட்ட பரதநாட்டியம், பார்ப்பனர்களோடு அடையாளப்படுத்தப்பட்டது. அந்நாளைய தி.மு.க. தீவிர பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தது.) ஜாலியும், அவளுடன் தயங்கியபடி சென்ற குணசேகரனும் நடனநிகழ்ச்சி காணச்சென்ற தாசி வீட்டில், அவனுக்குப் போதையூட்டும் பானம் வழங்கப்படுகின்றது: அவனுடைய பணம் களவாடப்பட்டு, பிளாட்பாரத்தில் வீசப்படுகின்றான். பிச்சை எடுக்கும்நிலைக்குத் தள்ளப்படும் குணசேகரன், ஒரு காலத்தில் சீரும்சிறப்புமாக இருந்த தமிழ்த் தேசத்தின் இன்றைய அவலநிலையைக் கூறிக் கதறுகின்றான் : ‘சிங்கத்திருநாடே ! நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே! நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக? வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என் அருமைப் பொன்னாடே! நீ வீதிகளில் விபசாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்? வானத்தை முட்டும் மாளிகைகள் ! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள்? இதுதானே உன் பெருமை, தகுதி, யோக்யதை.” இரக்கமற்ற உலகத்தை எதிர்கொள்ளும் அவன், பிளாட்பாரத்தில் தூங்கியதற்காக போலீஸ்காரனால் உதைத்து விரட்டப்படுகிறான். பசியைப் போக்க வாழைப்பழங்களை எடுத்ததற்காக, அவனை வசைபாடுகிறாள்‘பழவியாபாரி”பெண்ஒருத்தி.

 

சென்னை மாநகராட்சியின் வறண்ட குழாய்கள், அவனது தாகத்தைதத் தீர்க்க மறுக்கின்றன. அவனுடைய விலையுயர்ந்த கால் சட்டையை அடமானம் வைக்க முயல, அதற்கு வடஇந்திய வட்டிக் கடைக்காரன், வெறும் எட்டணா மட்டுமே தருகின்றான்.

ஒரு பைத்தியக்காரனின் சேட்டைகள் போலீஸ்காரன் உள்ளிட்ட எல்லோராலும் சகித்துக்கொள்ளப்படுவதைக் காணும் குணசேகரன், தானும் பைத்தியம்போல் நடித்து, பல ஏமாற்று வேலைகளைச் செய்து பிழைக் கின்றான். கடைசியில் மதுரை வந்தடையும் குணசேகரன், பார்வதி மூலம் தந்தை இறந்ததையும், தங்கை விதவையாகி இட்லிக் கடை நடத்துவதையும் அறிந்து கொள்கின்றான். சுயமாய் உருவாக்கிக்கொண்ட பைத்தியக்காரன் வேடத்தில் (ஓரளவுக்கான சுதந்திரமும், உண்மையோடும் நெருங்கிய சாத்தியமுள்ள ஒரு விளிம்புநிலைப் பாத்திரம்) குணசேகரன் நீண்ட வசனங்களில் மழை வரவேண்டி வருணபகவானைக் கும்பிடுவதையும், கஷ்டங்கள் தீரக் கோவிலுக்குச் செல்வதையும் கிண்டல் செய்கின்றான்: வெறும் கல்லைத் தெய்வமெனத் தொழும், பக்தர்களைக் கேலி செய்கின்றான் (குறிப்பு: அந்நாளில் சென்னை மாகாணத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. குறுகிய காலம் அதன் பிரதமராய் இருந்த ராஜகோபாலாச்சாரி, மக்களை மழைவேண்டி வருண பகவானைக் கும்பிடும்படி கேட்டுக்கொண்டார்).

 

காலநகர்வில், கல்யாணியின் துயரங்கள் கூடுகின்றன. ஒருவட இந்திய வட்டிக்கடைக்காரன், பழைய கடனைக் கேட்டுக் கல்யாணியைத் துன்புறுத்தும்போது, வேணு என்னும் உள்ளூர் கயவாளி அவளுக்கு உதவுகிறான். கல்யாணி, வேணுவை அண்ணனைப்போல நினைக்கின்றாள். ஆனால், வேணுவின் திட்டம் வேறாக இருக்கின்றது. அவன் கல்யாணியைக் “கற்பழிக்க” முயலுகின்றான். இந்தக் கட்டத்தில் வந்து சேரும் குணசேகரன், அவளைக் காப்பாற்றுகின்றான். பரிதவிப்பில் கல்யாணி மதுரையைவிட்டுத் திருச்சிக்குச் செல்கின்றாள்.

திருச்சியில் நாராயணபிள்ளை (வி.கே. ராமசாமி) என்னும், நெற்றியில் பளிச்சென்று விபூதிப்பட்டை துலங்க இருக்கும் ஒரு கருமித்தனமான கள்ள மார்க்கெட் வியாபாரி வீட்டில் வீட்டுவேலை செய்கின்றாள்.. அவர் உள்ளூர் ‘சன்மார்க்க சங்கத்தின்” தலைவராகவும் இருக்கிறார். தன் மனைவி காந்தாவைக் (முத்துலட்சுமி) ‘கிருஷ்ணலீலா” சினிமா பார்க்க அனுப்பிவிட்டு, வீட்டிற்குள்ளே கல்யாணியைத் தன் ஆசைக்குப் பணியவைக்க முயற்சிக்கின்றான் நாராயணபிள்ளை, அவளிடம், ‘பெரிய மனிதர்களின் அந்தப் புரத்திலே தொழிலாளி, முதலாளி என்ற பிரச்சனைக்கே இடமில்லை” என்கின்றான். சரியான நேரத்தில் திரும்பும் காந்தாவால், கல்யாணி நாராயணபிள்ளையிடமிருந்து காப்பாற்றப்படுகின்றாள். ‘நாராயணலீலை”யில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டும் காந்தா, பதிலுக்குத் தானும் ஒரு ஆணைக் கற்பழிக்கப்போவதாகக் கூறுகின்றாள். கல்யாணி வேலையை விட்டு விலகுகின்றாள்.

திருச்சி வந்தடையும் குணசேகரன், அங்கு தி.மு.க. சார்பான கருத்துக்களையுடைய விமலா (பண்டரிபாய்) என்னும் பெண்ணைச் சந்திக்கின்றான். அவளுடைய சகோதரனும் ஒரு அரசியல் செயற்பாட்டாளனாக இருக்கின்றார். குணசேகரன் தன் தங்கையின் துயரங்கள் குறித்துச் சொல்ல, தங்கயைப் பற்றி மட்டும் கவலைப்படும் அவனை, விமலா சுயநலவாதி எனக் குற்றம்சாட்டி, உலகம் இதுபோன்ற பெண்களால் நிரம்பி இருக்கின்றது என்கின்றாள். ஜாலியைக் குற்றமற்றவள் எனக்கூறும் விமலா, அவனுடைய உடைமைகளைத் திருடி, உலகத்தின் துயரங்களை அவன் கண்களுக்குக் காட்டிய ஜாலியைப் பாராட்டுகின்றாள். ‘ஆம் ! உன் கண்ணைத் திறந்தவள் அவள்தான், நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால், ஏழை உலகை நினைத்துக்கூட இருக்க மாட்டாய், அப்படியரு உலகம் இருப்பதாகவே உனக்குத் தெரிந்திருக்காது,” என்கின்றாள். குணசேகரனிடம், ‘தான் இதையெல்லாம் என் அண்ணாவிடமிருந்து தெரிந்துகொண்டேன்” என்கின்றாள் (குறிப்பு: சி.என். அண்ணாதுரை அவர்களின் பெயர் சுருக்கமும் ‘அண்ணா” தானே). விமலாவிடம் சொல்லிக்கொள்ளாமல் கல்யாணியைத் தேடி வெளியேறுக்கின்றான் குணசேகரன்.

கல்யாணியின் மற்ற இரு அண்ணன்களான சந்திரசேகரனும், ஞானசேகரனும் போரின் காரணமாகப் பர்மாவை விட்டு வெளியேறு கின்றனர். சுந்திரசேகரன் தன் மனைவி சரஸ்வதியுடன் திருச்சிக்கு வந்து, எஸ்.சி.சேகரன் என்ற புதிய பெயருடன் நீதிபதியாகின்றார். பர்மாவிலிருந்து நடந்தே திரும்பும் ஞானசேகரன், ஜப்பானிய குண்டுத் தாக்குதலில் ஒரு காலை இழக்கின்றான். அகதிகள் முகாமில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் வடஇந்தியர்களை அனுமதிக்கும் வடஇந்திய அதிகாரிகள், ஞானசேகரனுக்கும் மற்ற தமிழர்களுக்கும் அனுமதி மறுக்கின்றனர். ஞானசேகரனும் மற்ற தமிழர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கடைசியில் அவர்கள் ஒரு பிச்சைக்கார மாநாடு நடத்தத் தயாராகின்றனர்.

 

கல்யாணி பிச்சைகேட்டு, விருந்து நடக்கும் சந்திரசேகரனின் வீட்டிற்கு வருகின்றாள். கல்யாணி யாரென்று அடையாளம் தெரியாத சந்திரசேகரன், அவளைத் தனது மாளிகையை விட்டு விரட்டுகிறார், பசியால் பரிதவிக்கும் கல்யாணி, உள்ளூர்ப் பராசக்தி கோவிலுக்குச் சென்று உதவிகேட்டு மன்றாடுகின்றாள். தந்திரமாகக் கோவிலின் கர்ப்பகிருஹத்திற்குக் கல்யாணியை வரும்படி செய்து, அவளைக் கோவில் பூசாரி கற்பழிக்க முயலுகின்றான். பூசாரியின் உதவியாளன் குப்பன் (எம். எஸ்.கிருஷ்ணன்), கோயில் மணியை அடித்துவிட, அதில் எழும் குழப்பத்தில் கல்யாணி தப்பிவிடுகின்றாள். பசியால் துடிக்கும் குழந்தைக்கு உணவூட்ட வழியின்றிக் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்து, கல்யாணி கைதாகின்றாள். வறுமையினால் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்ற நல்லதங்காள் கதையுடனும், சிவபெருமானை மகிழ்விக்கத் தன் மகளையே சமைத்த சிறுத்தொண்டர் கதையுடனும் ஒப்பிட்டுக் கல்யாணி தன் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றாள். தன் மகனொன்றும் பார்வதியே பாலூட்டுவதற்குத் ‘திருஞானசம்பந்தர்” இல்லை என இடித்துரைக்கின்றாள். கல்யாணி தன் தங்கை என அறிந்து, நீதிபதி மயங்கி வீழ்கின்றார்.

விமலாவின் அண்ணன், ஒரு அரசியல் கூட்டத்தில், தாய்மார்கள் எவ்வாறு குழந்தைகளைக் கீரைக்கட்டுகள் போல, ‘எட்டணாவுக்குக் குழ்நதையாம் ! பெரிய குழந்தை ஐந்து ரூபாய் ! பிஞ்சுக்குழந்தை மூன்று ரூபாய் ! எனக் சுறி விற்கின்றனர்” என்று கல்யாணியின் கதையைத் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைக்கான ஓர் எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றான். பேச்சைக் கேட்ட குணசேகரன், கல்யாணி எங்கிருக்கின்றாள் என்பதை அறிகின்றான்; ; அதேபோல, குப்பனிடமிருந்து பூசாரியின் கற்பழிப்பு முயற்சி பற்றியும் அறிகின்றான் ; கோபங்கொள்ளும் குணசேகரன், கோயிலுக்குள் நுழைந்து பராசக்தி சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, பூசாரியுடன் பேசுகின்றான். குணசேகரன் பேசுவதைப் பராசக்தி பேசுவதாக பூசாரி புரிந்துகொள்கின்றான். அவனுடைய தவறைத் திருத்தும் குணசேகரன், ‘முட்டாளே ! எப்போதடா பராசக்தி பேசினாள்? அது பேசாது, கல் பேசுதாயிருந்தால் என் தங்கையின் கற்பை நீ சூறையாடத் துணிந்தபோதே ‘அட பூசாரி ! அறிவு கெட்ட அற்பனே ! நில்” என்று தடுத்திருக்காதா?” என்கின்றான். (குறிப்பு: ‘கல்’ என்னும் வார்த்தை தணிக்கையாளர்களால் வசன ஓட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால் திரையில் சிவாஜிகணேசனின் தெளிவான உதட்டசைவில் பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொண்டனர். திரைப்படம் குறித்த சிறப்புச் செய்திகளில் இந்த நீக்கப்பட்ட‘கல்”லும் ஒன்று) கோயிலில் குழுமியுள்ள பக்தர்களிடம் அபச்சாரம் குறித்துக் கத்துகின்றான் பூசாரி. பூசாரியின் கையிலிருக்கும் அரிவாளைப் பிடுங்கி, அவனைக் குணசேகரன் வெட்டுகின்றான்.

 

குணசேகரன் வழக்குக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகின்றான்: நீண்டவசனத்தில் அவன் தன் கதையைச் சொல்லுகின்றான்:

‘பிறக்க ஒரு நாடு; பிழைக்க ஒரு நாடு; தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நானென்ன விதி விலக்கா?.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழனுக்கு வாழவழியில்லை. தமிழ்நாட்டில் பிறந்த பெண்ணுக்கு வாழ்வதற்குத் தக்க பாது காப்பில்லை; ஆனால், என் தங்கை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப் பள்ளியறையிலே ஒருநாள் ; மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒருநாள் ; இப்படி ஒட்டியிருக்கலாம்; நாள்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்பகின்றது? பகட்டு என் தங்கையை மிரட்டியது ; பயந்து ஓடினாள் ; பணம் என் தங்கையைத் துரத்தியது ; மீண்டும் ஓடினாள் ; பக்தி என் தங்கையைப் பயமுறுத்தியது. ஓடினாள் ; ஓடினாள்! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் ; அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்; வாட்டத்தைப் போக்கியருக்க வேண்டும் ; இந்தச் சட்டத்தைத் தீட்டுவோர், செய்தார்களா? வாழ விட்டார்களா என் கல்யாணியை?”

அவனே மேலும் தொடர்கின்றான்; கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் ; கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில்; கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல பகல் வேஷக் காரன் என்பதற்காக” வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, இறந்து போனதாகக் கருதப்பட்ட குழந்தையுடன் விமலா நீதிமன்றத்தில் நுழைகின்றாள். குழந்தை, விமலாவால் காப்பாற்றப்பட்டிருந்தது. கல்யாணியும், குணசேகரனும் விடுதலை செய்ப்பட்டுச் சந்திரசேகரன் குடும்பத்துடன் இணைகின்றார்கள். மற்றொரு சகோதரனான ஞானசேகரன், பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்காக நிதிவசூல் செய்யச் சந்திரசேகரன் வீட்டிற்கு வருகின்றான். குணசேகரனும் விமலாவும் ‘தாலியின்றி, சடங்குகள் இன்றித் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுவதுடனும் ஓர் அனாதை இல்லத் திறப்பு விழாவுடனும் திரைப்படம் முடிவடைகின்றது.

 

இந்தச் சிறிய கதைச்சுருக்கம் பராசக்தி பற்றி நமக்கு என்ன சொல்கின்றது? அமங்கல மானதாகக் கருதப்படும் கல்யாணியின் பாதுகாப்பற்ற விதவைநிலையை முன்னிறுத்தி, அவளது கற்புக்கு ஏற்படும் சோதனைகளைத் திராவிட நாட்டின் அன்றைய அவலநிலையாகப் பராசக்தி முன்வைக்கின்றது. குறிப்பாகக் கல்யாணி என்ற பெயரைக் கதாசிரியர் தேர்வு செய்தது, அவளுடைய மங்கலமான பெயருக்கும் அமங்கலமான நிலைக்குமிடையேயான முரணை அடிக்கோடிடவே இது. படத்தின் தொடக்கத்தில் மொழியப்பட்ட திராவிட நாட்டின் முரண்களை, இங்கே நினைவு கூறவேண்டும். குணசேகரன்,  நீதிமன்றத்தில் பரிதவிக்கின்றான் ; ‘தங்கையின் பெயரோ கல்யாணி ! மங்களகரமான பெயர், ஆனால் கழுத்திலோ மாங்கல்யமில்லை” என்று.

கல்என்னும் வார்த்தை தணிக்கையாளர்களால் வசன ஓட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால் திரையில் சிவாஜி கணேசனின் தெளிவான உதட்டசைவில் பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொண்டனர்.

கல்யாணியின் துர்பாக்கிய நிலையை வலி யுறுத்தத் திரைப்படம், பல காட்சிப் படிமங்களை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, வேணுவின் பாலியல் வன்முறையிலிருந்து தப்பி மதுரையிலிருந்து கல்யாணி வரும்போது, கையில் குழந்தையுடன் பட்டமரம், கள்ளிச் செடிகளின் பின்புலத்தில் மிகச்சிறிய உருவமாகக் காட்டப்படுகின்றளர். கேமராவின் நிலைப்பு நீள்கிறது. பட்டமரம், கள்ளிச்செடிகள் மற்றும் வெறுமையான தனிமைச் சூழல் ஆகியன அவளது பரிதாபமானநிலையைப்பார்வையாளர்களுக்கு அழுத்தாமகவும் தீர்க்கமாகவும் காட்சிப் படுத்து கின்றன. அதேபோல் நாராயண பிள்ளையின் வீட்டைவிட்டு வெளியேறி, குழந்தையுடன் தனியாக சோர்வுடன் நடக்கும் கல்யாணி, வாழ்வு முடிவுக்கு வந்திவிட்டதான உணர்வைத் தோற்றுவிக்கும் வண்ணம் சருகுகள் அடர்ந்த பாதையில் செல்கின்றாள். கல்யாணியின் கற்பும், அதன் மீதான தொடர்த்தாக்குதல்களும் திரும்பத் திரும்ப இத்திரைப்படத்தில் வலியுறுத்தப் படுகின்றன. கல்யாணியின் கற்புக்கு நேரும் ஆபத்து திராவிட நாட்டின் அன்றைய நிலைக்குச் சாட்சியமானதால், அவளுக்குக் குணசேகரன் அளிக்கும் பாதுகாப்பு தி.மு.க.வின் ‘பொற்கால” திராவிடநாடு குறித்த உறுதிமொழிக்கான குறியீடாக முன்வைக்கப் படுகின்றது.

 

மாற்றுத்தளத்தில், கல்யாணியின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் காட்சிப்படுத்துவதன் ஊடாக, பராசத்தி மதத்தின் பெயரால்நடக்கும் மோசடியை, மதத்தின் பயனின்மையை வெளிப் படுத்துகின்றது. அதேபோல், இத்திரைப்படம் வட இந்தியர்களை, தமிழர்களைச் சுரண்டு பவர்களாகச் சித்தரிக்கின்றது. மேலும், சென்னை மாகாணத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீதானகடுமையான விமர்சனங்களைஇப்படம் கொண்டிருந்தது.

அடித்தள மக்களின் ஈர்ப்பு

வெற்றித் திரைப்படமான பராசக்தி, அடித்தட்டு மக்களின் ஆர்வத்தை ஈர்த்ததற்கான காரணங்கள் என்ன? ராஜகோபாலாச்சாரிக்கு எழுதிய தமிழனின் பதினாறு பக்கக் கடிதம், திரைப்படம் பற்றிய விளக்கமான விவரணைகளை நமக்குக் கொடுக்கின்றது.”

முதலாவதாக பராசக்தியின் வசனகர்த்தாவான கலைஞர் கருணாநிதி, திரைப்பட எழுத்தாளர் என்பதையும் தாண்டிய ஆற்றல்மிகு எழுத்தாளர் என்ற படிமம், பார்வையாளர்களிடையே திரைப்படத்தைக் காண்பதற்கு முன்பே, ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது என்பதைத் தமிழனின் கடிதம் சுட்டிக் காட்டுகிறது. கருணாநிதியின் முந்தைய எழுத்துக்களுக்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியுடன் நேரிட்ட பிரச்சினைகளை அறிந்திருந்த பார்வையாளர்கள், அத்திரைப்படத்தில் அரசியல் வாதங்களை எதிர்பார்த்திருந்தனர். தமிழன் எழுதுகிறார்.

திரைக்கதை, வசனம் மு. கருணாநிதி என்று காண்பித்தவுடன் தியேட்டரே அதிரும்படி கரகோஷம். நான் பக்கத்தில் உள்ளவரை விசாரித்ததில், ‘இவர்தான் திரையுலகிலேயே சிறந்த வசனகர்த்தா” என்றார்… பார்க்கும்போகும் படத்தைப் பற்றியும் சில விஷயங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். . . அந்த மு(ட்டாள்) கருணாநிதியின் அற்புத சிருஷ்டிகளில் இதுததான் சிறந்தது என்றும், இது முன்பு ‘தூக்குமேடை” என்ற நாடகமாக நடிக்கப்பட்டது என்றும், பிறகு அநியாயமாகச் சர்க்காரால் தடைசெய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிந்துகொண்டேன்”.

 

தமிழன் தனது கடிதத்தில் பார்வை யாளர் களிடம் கரகோஷத்தை எழுப்பிய காட்சிகளைப் கவனமாகப் பட்டியலிடுகிறார்.

பராசக்தியில் அரசைக் கிண்டலடித்த காட்கிகளும், வசனங்களும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தன. துமிழனின் கடிதத்தின் சில பகுதிகளை நாம் இப்போது பார்ப்போம்.

  1. ‘பணத்தைப் பறிகொடுத்த இளைஞன் தாய்நாடான தமிழ்நாட்டையே நிந்திக்கின்றான்.

‘கொச்சி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்:

தமிழர்கள் எல்லோரும் திருடுர்களாம்.” இதற்கு அரங்கில் கரவொலி கரகோஷம்.

  1. ‘தெருவில் ஒரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், கார்ப்பரேஷன் ஒரு தூங்குமூஞ்சி மடம். மேயர் ஒரு உதவாக்கரை. கலெக்டர் ஒரு மடையன்”என்று காண்பிக்கிறார்கள். இதற்கு ஒரு கரவொலி.
  2. ‘இன்னுமோரிடத்தில் சென்னை மாகாணத்தில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களுடைள குழந்தைகளை வளர்க்கமுடியாமல் தாங்களாகவே எடைக்குத் தகுந்தாற்கோல் விற்றவிடுகிறார்கள் என்று காட்டுகிறார்கள்.” இதற்குக் கரகோஷம்.
  3. ‘அப்பெண் மேலும் சொல்லுகிறாள் ‘நான் விபச்சாரியாக மாறியிருந்தால், மந்திரகளும் போலீஜ் அதிகாரிகளும் இப்போது என் மடிமீது இருப்பார்கள். ஆனால் நான் அதற்கு விரும்ப வில்லை. தியேட்டரே அதிரும்படி கரவொலி.”
  4. ‘இந்த எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து அண்ணா அவர்கள் சிருஷ்டிக்கப்போகிறார் என்ற சொன்னதும் கரவொலி கொட்டகையே பிளந்துவிடும் போலிருந்தது.”

பார்வையாளர்களை ஆர்வம்கொள்ளவைத்தப் பராசக்தியின் பிற காட்சிகளும் வசனங்களும், மதவிமர்சனம் தொடர்பானவை. துமிழன் எழுதுகிறார். ‘ஒரு குழந்தையுடன் அனாதையாகக் கதறியழும் ஒரு பெண். இரவில் கோயிலுக்குப் போகிறாள். அம்மன் சந்நிதியிலேயே அந்தக் கிழபூசாரி விபசாரம் செய்யத் துணிகின்றான். இதற்கு ஒரே கரகோஷம்.” பார்வையாளர்களின் இந்த நடவடிக்கை தமிழனை வருத்தமுறச் செய்கின்றது. மேலும் அவர் எழுதுகின்றார்.

அந்தப்பெண் கதறியழும்போது, ஒரு பையன் முதலில் கும்பகர்ணன் போல் காட்டப்பட்டவன், திடீரென விழித்து மணி அடித்து அவளை விடுவிக்கிறான். அப்போது யாரும் கைத் தட்டவில்லை. ஆனால், அந்தப்பெண்ணின் அண்ணன் பிறகு வந்து, ‘இந்தத் தேவி வெறும் கல் ; ஒன்னுக்கும் உதவாத கல் ; தெய்வம் ஒன்று உண்டென்றால் ஏன் அப்போது வந்து அந்தக் கிழ பூசாரியைக் கொல்லவில்லை ; ஆகையால், தெய்வம் இல்லை ; அது ஒரு மூடக்கொள்கை ; எல்லாக் கோவில்களும் தேவடியா மடங்கள் என்று கத்துகின்றான். இதற்குக் கரவொலி ஒருவருக்காவது அந்தப் பையன் மணியடித்துக் காப்பாற்றியது தெய்வச்செயல் என்று படவில்லை.

 

இவ்வாறாக, பராசக்தி தி.மு.க.வின் அரசியல் கொள்கைகளைப் பரப்புவதில் வெற்றி கண்டது. மேலும் அதன் காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மத எதிர்ப்பு நிலைப்பாடுகளும் பார்வையாளர்களால் உற்சாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

 

விமர்சனங்கள்

பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங் கத்திடம் குவிந்தன.

பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவம், தாக்குதலுக்கு இலக்கானது.

நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்

You may also like...