துருக்கியில் கெமால் செய்த புரட்சி – மே.கா.கிட்டு

[துருக்கியில் கெமால்பாட்சா இஸ்லாமியராக இருந்தும் மதம் விதித்த பல கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை மதப்பிடியிலிருந்து விடுவித்தார் அரபு மொழியில் இருந்த இஸ்லாமிய நூல்களை சொந்த நாட்டு மொழியான துருக்கியில் மாற்றினார். துருக்கியின் முதல் குடியரசுத்தலைவராக 1923 முதல் 1938 வரை இருந்தவர் இஸ்லாமியராக பிறந்தாலும் ‘இறைமறுப்பே’ தனது மதம் என்று அறிவித்தவர் இராணுவ படைத்தளபதியாக இருந்தவர். பெரியார் கெமால் பாட்சா சீர்திருந்ங்களை வரவேற்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார் கெமால் பாட்சா செய்த நன்மைகள் என்ற தலைப்பில் 30.11.1938 இல் சென்னை கடற்கரையில் பேசியதும் துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் தலையங்கமும் முறையே 30.11.1938, 11.12.1938 குடிஅரசு இதழ்களில் வெளிவந்தது]

இசுலாமிய மதத்தில் பற்றில்லாத கெமால் உலக இசுலாமியக் கூட்டமைப்புக் கொள்கையை முற்றிலும் வெறுத்தார். மதம் விளைவிக்கும் கொடுமைகளுக்கே அவர் முற்றுப் புள்ளி வைக்க விரும்பினார். துருக்கி மக்களை மத மயக்கத் திலிருந்து நீக்கி மெய்யான தேசியப்பற்றை அவர்களிடம் உருவாக்குவதில் நாட்டம் கொண்டார்.

கெமாலுடைய முதல் அடிப்படைச் சீர் திருத்தம் துருக்கி மக்களுடைய உள்ளங்களைப் பற்றிக்கொண்டிருந்த மத உணர்வுகளை அகற்றி நாட்டுப் பற்றுறுதியை நிலைக்கச் செய்ததாகும். தம்முடைய நேரடிப் பார்வையில் தெர்ந்தெடுக் கப்பட்ட தேசிய உணர்வூட்டும் நூல்களைத் துருக்கியின் அனைத்துப் பள்ளிகளிலும் பாடங்களாக வைத்தார். அதனை முறையாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அமர்த்தினார். அரசாங்க வெளியீடுகள், செய்தித்தாள்கள், மற்ற தொடர்புகள் அனைத்தும் மதஉணர்வுக்கு எதிராக துருக்கித் தேசிய உணர்வு பொங்கும் வகையில் மாற்றியமைக்கப் பட்டன.

இசுலாம் மத போதனை தரும் கல்விக்கூடங்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்கு மாறாக எவ்வகை மதச்சார்புமற்ற தேசியக் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. துருக்கியிலிருந்த வெளிநாட்டுக் கல்விச் சாலைகளிலும் கூட மதபோதனை அனுமதிக்கப்படவில்லை.

உலக முஸ்லீம்களுக்கெல்லாம் சமயத் தலைமை அமைப்பாகத் திகழ்ந்த கலீபா பதவியையும் பன்னெடுங்காலமாக இயங்கி வந்த சுல்தான் பதவியையும் ஒழித்துவிட்டார். ஒரு முஸ்லீம் நாடு இசுலாம் மதமரபுகளை முற்றிலும் மாற்றியமைத்த வரலாறு, கெமாலின் தலைமையில் துருக்கியில் மட்டுமே நிகழ்ந்தது. அதுமட்டுமன்று மத எதிர்ப்புக் கொள்கைக்கும் முழு ஆதரவு தந்து, அக்கொள்கை எழுச்சி பெறக் கெமால் பலதிட்டங்களை நடைமுறைப் படுத்தினார். கெமாலையே, கலீபாவாக ஆக்க வேண்டுமென இந்திய முஸ்லிம்களும் எகிப்து மக்களும் வலியுறுத்தினார்கள். அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார். மதத்துடன் இணைந்த எந்த ஒரு தொடர்பையும், இந்தியாவுடனோ, அரசு நாடுகளுடனோ கெமால் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இசுலாமிய மடங்களையும், மத இல்லங்களையும் அழித்தொழித்ததுடன் அதுவரை மதத்தின் பெயரால் வாழ்ந்து வந்த சமயத் தலைவர்களையும் துறவிகளையும் கட்டாயமாக உழைக்க வைத்து உண்ணச் செய்தார். அந்த அமைப்புகளுடைய அனைத்துச் சொத்துக்களும் மதத் தலைவர்களின் உடைமைகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இஸ்லாமிய மதவாதிகள் அணிந்து வந்த உடைகள் தடை செய்யப்பட்டன.

பெஸ் (FEZ) என்ற குல்லாய் துருக்கி முஸ்லீம் களின் இன்றியமையாத மதச் சின்னமாகும், இராணுவத்தினர்கூடமதமரபாகஅக்குல்லாயை அணிந்து வந்தனர். அது ஓர் மதச் சின்னம் என்பதற்காக, அதனைத் தடை செய்தார், மீறி அணிந்தவர்கள் தண்டனைக்கு ஆளானார்கள்.

பொதுவாக கெமால் மதச் சார்பற்ற ஒரு சமுதாயத்தைப் படைக்கத் தேவையான நடவடிக் கைகளை மேற்கொண்டார். அடுத்து சமுதாயத் துறையில் மிக ஆழமான திருத்தங்களைச் செயற்படுத்தினார். துருக்கியர்கள் குர்ஆன் போதனைகளிள் அடிப்படையில் உருவான சரியத் சட்டத்தின்படி தம் வாழ்க்கை முறைகளை மேற்கொண்டியங்கி வந்தனர். உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் மதச் சட்டமே பின்பற்றப்பட்டு வந்தது. இதனை கெமால்முற்றிலும்மாற்றியமைத்தார்.திருமணம்,

 

சொத்துரிமை, நடைமுறை வாழ்க்கை போன்ற துறைகளில் இஸ்லாமிய மதம் ஊடுருவ முடியாமல் தடை செய்து விட்டார். சுவிட்சர்லாந்தின் உரிமையியல் சட்டமும் இத்தாலி நாட்டுக் குற்றவியல் சட்டமும். செர்மன் நாட்டு வணிகச் சட்டமும் இஸ்லாம் மதச்சட்டங்களுங்கு மாற்றாக நடைமுறைக்கு வந்தன. பல மனை வியர்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டது.

பெண்ணடிமை முறை ஒழிக்கப்பட்டது. துருக்கியப் பெண்கள் முழுவிடுதலை பெற்றனர். மகளிர் உரிமைகளைக் காப்பதற்காக அதிகாரம் பெற்ற தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. பெண்கள், அனைத்துத் தொழில்களிலும் அரசுத் துறைகளிலும் ஈடுபட வழிவகைகள் செய்யப்பட்டன. கல்விக் கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பெண்கள் பெரும் பங்கேற் பதற்காகத் தனித்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. காவல் துறையில் பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப் பெற்றனர். பல நூற்றாண்டுகளாகக் கோஷாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்த துருக்கிப் பெண்கள் பத்தே ஆண்டுகளில் அரசுத் துறைகளிலும் கல்விக் கூடங்களிலும் மற்ற தனித்துறைகளிலும் ஆண்களை விஞ்சிப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்கள். துருக்கி மொழியில் ஊடுருவிய மற்ற மொழிகளின் ஆதிக்கத்தை நீக்க வேண்டுமென்று கெமால் கருதினார் காரணம், வேற்று மொழிகள் மற்ற நாட்டவர்களுக்குச் சொந்தமானவை. அம்மொழிச் சொற்கள் துருக்கி மொழியில் ஊடுருவிக் கோலோச்சினால் வேற்று நாட்டவர் களின் மத சடங்குகள், ஆதிக்கம் துருக்கி மொழி யில் ஏற்பட்டு விடும். அதன் வழி துருக்கி தேசிய இனம் தன்னைத் தாழ்த்தி, ஒரு வகையான அடிமை மனப்பான்மையை ஏற்றுக் கொள்ள ஏதுவாகி விடும். இந்த உட்கருத்தை மையமாகக் கொண்டது கெமாலின் மொழிச் சீர்திருத்தம்.

 

துருக்கி மொழி, வளமற்ற ஒரு கரடு முரடான மொழி. ஆனால் அம்மொழியில் 46% சொற்களும், சொற்றொடர்களும் அரபி மற்றும் பெர்சிய மொழிச் சொற்கள். அவை துருக்கி மொழியை மென்மையானதாகவும் வளம் கொண்டதாகவும் ஆக்கியிருந்தன.

துருக்கி மொழி அரபுலிபியால் (எழுத்து வடிவம்) எழுதப் பட்டு வந்தது. அதனால் துருக்கி மொழியின் எழுத்து வடிவத்தை மாற்றினார், இலத்தீன் லிபி நடைமுறைக்கு வந்துவிட்டது. நாளிதழ்கள் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் அரபு லிபி மாறி இலந்தீன் லிபியில் எழதப்பட்ட துருக்கி மொழியைக் கொண்டவையாக மாறிவிட்டன. இதற்காக 14 முதல் 40 வயதுள்ளவர்கள் வரை கல்விக் கூடங்களுக்குச் சென்றாக வேண்டிய கட்டாய நெருக்கடியை உண்டாக்கினார் துருக்கி மொழியை இலத்தீன் லிபியில் எழுதத் தெரியாத அலுவலர்கள் வேலையிலிருந்து நீக்கப் பட்டனர்.

ஆனால், துருக்கி மொழியில் ஊடுருவியிருந்த அரபி மற்றும் பெர்சீயச் சொற்களை இலத்தீன் லிபியில் எளிதாக எழுத இயலவில்லை. மேலும் தேசிய காரணங்களுக்காகவும் அரபு, பெர்சிய சொற்கள் நீக்கப்பட வேண்டிய கட்டாயமிருந்தது. எனவே துருக்கி மொழியில் இருந்த அரபு மற்றும் பெர்சீயச் சொற்களை நீக்கி, தனித்துருக்கி மொழியில் எழுத வேண்டுமென்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அரேபியா, பெர்சிய நாடுகளின் ஆதிக்கத் திலிருந்து மொழி உட்பட அனைத்துத் துறைகளிலும் துருக்கி முற்றிலும் விடுபட வேண்டுமென்பதும் கெமாலின் கருத்து. அரபி மற்றும் பெர்சீயச் சொற்றொடர்கள் கைவிடப்பட்டு, புதிய துருக்கி மொழிக் களஞ்சியம் உருவாக்கப்பட்டது துருக்கி மொழியின் சிறந்த சொற்றொடர்கள் சிற்றூர்களில் பேசப்பட்டு வந்தன. அச் சொற்களைத் திரட்டிச் சேர்ப்பதற்காகக் கற்றறிந்த பேராசிரியர்கள் சிற்றூர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

துருக்கி மொழியே ஆட்சி மொழியாக்கப்பட்டது அரசுத்துறைகளிலும் கல்வி, நீதிமன்றம் போன்ற அனைத்துப் புலங்களிலும் துருக்கி மொழி கோலோச்சியது.

அடுத்து அரபி, பெர்சியா போன்ற மற்ற மொழிகளிலிருந்த துருக்கிப் பெயர்களை நீக்க கட்டளையிட்டார். மக்களுடைய பெயர்கள், நகரங்கள், அறிவிப்புப் பலகைகள் ஆகிய அனைத்தும் தனித்துருக்கிய மொழியில் மாற்றியமைக்கப்பட்டன.

பண்டைய புகழ் பெற்ற கான்ஸ்டன்டி நோபிளின் பெயர் இஸ்தான்புல் எனவும், அங்கோரா என்ற தலைநகரின் பெயர் அங்காரா என்றும் சுமிர்னாவின் பெயர் சுமிர் என்றும் மாற்றப்பட்டன. இவ்வகையில் அனைத்துப் பெயர்களும் துருக்கி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டன. முஸ்தபாகமால் என்பதே அரபுப் பெயர்தான் அதனை மாற்றி அத்தாதுர்க் என்ற துருக்கி மொழிப் பெயரால் கெமால் அழைக்கப்பட்டார்.

புனித அரபியக் குர்ஆன் கெமாலின் துருக்கியின் நடைமுறையிலிருந்து அகற்றப்பட்டது. துருக்கி மொழியில் வழிபாடு செய்தாலும் இறைவன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்டாயச் சூழலைக் கெமால் ஏற்படுத்தி விட்டார். மதத்தின் மூலமாகப் பொதுமக்களை நாட்டுக்கு எதிராகத் தூண்டுவது குற்றமாக்கப்பட்டது. பேச்சாலும் எழுத்தாலும் மத உணர்வினைத் தூண்டக் கூடாது அது நாட்டுத் துரோகக் குற்றம் என்று கருதப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது இச்சட்டத்தின் மூலமாக மசூதிகளிலும் கூட மதப்பிரச் சாரப் போர்வையில் நாட்டுக் கெதிரான பிரச்சாரம் செய்வது தடைசெய்யப்பட்டது.

1928 ஆம் ஆண்டில் அரசமைப்பின் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, துருக்கி இசுலாமிய மதத்தை மட்டும் தழுவியிராத ஓர் மதச் சார்பற்ற நாடு என ஆக்கப்பட்டு விட்டது.

-கட்டுரையாளர், பெரியாரிஸ்ட்

 

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...