பசுப் பாதுகாவலர்களே, பதில் சொல்லுங்கள்!
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி -உலகம் முழுவதும் மக்களின் உணவுப் பழக்கமாகியிருக்கிறது; இஸ்லாமிய மதம் -பன்றி இறைச்சியை மறுக்கிறது; ஆனாலும் – துபாய், அபுதாபி உள்ளிட்ட இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி நடக்கும் அமீரகத்தில் அதன் விற்பனைக்கு தடையில்லை; பாஜக அதிகாரத்துக்கு வந்த மாநிலங்களிலோ, மாட்டிறைச்சி உண்பதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்து, கண்காணிப்பு குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்; மாட்டை வளர்த்தவரே கொலை செய்யப்படுகிறார்; பசுப் பாதுகாப்புப் படை சட்டத்தை தனது கரங்களில் எடுத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் அனுமதிக்கிறார்கள் புரதச் சத்துள்ள மாட்டிறைச்சி குறைந்த செலவில் உழைக்கும் மக்களுக்கான உணவாக இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டுக்கறி மக்களின் உணவுக் கலாச்சாரமாகும்
இந்து மதம் ஒரு மதம் அல்ல என்றும் அது ஓர் வாழ்க்கை நெறி என்றும் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்காரர்களும் பேசிவருகிறார்கள் -அந்த வாழ்க்கை நெறி உழைக்கும் மக்களுக்கானதா ? அல்லது வேத பார்பனர்களின் வாழ்க்கை நெறியா என்பதே இப்போது கேள்வி.
உழைக்கும் மக்கள் (இந்துத்துவாவின் பார்வையில் இந்துக்கள்) உணவுக் கலச்சாரத்தை தடை செய்து பார்ப்பன உயர் ஜாதிப் பிரி-வினரின் சைவ உணவுக் கலாச்சாரத்தையே வெகுமக்களும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்து வாழ்க்கை நெறியா? இந்து மதம் பார்ப்பனர்களின் ஆணையை ஏற்று, உணவு, உடை பண்பாடுகளில் அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?
வேத காலங்களிலும், ராமாயண காலங்களிலும் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் தான் யாகங்களில் கால்நடைகள் பார்ப்பனர்களால் எரிக்கப்பட்டதால், அதை எதிர்த்து புத்தர் இயக்கம் மக்களை அணி திரட்டிய போது மக்கள் செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்துக்காகவே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர். மாட்டின் பாலையும் மாட்டின் சிறுநீரையும் (கோமியம்) பார்ப்பனர்கள் தங்கள் உணவாகவும் புனித தீர்த்தமாகவும் இன்றுவரைப் பின்பற்றி வருவதே மாட்டிறைச்சி உணவுமுறையை கைவிட்ட பிறகும், அதன் நினைவாகவே தக்க வைத்திருக்கும் பழக்கம்தான் என்பதை டாக்டர் அம்பேத்கர் ஆய்வு செய்து கூறுகிறார்.
தங்களை தலித் மக்களின் காவலர்களாக பேசத் தொடங்கியிருக்கும் “இந்துத்துவா” காவலர்கள், தலித் மக்களின் உணவுமுறைக்கு ஏன் தடை போடுகிறார்கள்?
பசுவை தாய் என்பவர்கள் அந்த மாடு செத்துப் போனபிறகு அதை எடுத்துப் போய் அடக்கம் செய்ய முன் வராதது ஏன்?
ஆடு, கோழி, மீன் சாப்பிடுவதற்கும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கும் என்ன வேறுபாடு என்று சொல்ல முடியுமா?
பால் வற்றிப்போய் பயன்தராத மாடுகளை எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்? யார்தான் காப்பாற்றுவார்கள்? இந்த மாடுகளை வெட்டாவிட்டால் தெருநாய்கள் போல, மாடுகள் வீதிக்கு வீதி அலைந்து, சுற்றுசூழலைப் பாதிக்கச் செய்யாதா? ‘கோமாதாவுக்கு’ இப்படி ஒரு அவலம் வரவேண்டும்? பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களின் பசு பாதுகாப்பு மய்யங்களில் போதிய பராமரிப்பு இன்றி மாடுகள் செத்து மடியும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பராமரிக்க முடியாத மாடுகளை பாஜக வினர் வீட்டு வாசலில் கொண்டுபோய் கட்டுங்கள் என்று கூறியிருக்கிறார் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்! இதற்கு சங் பரிவாரங்கள் என்ன எதிர் வினையாற்றப் போகின்றன?
நிமிர்வோம் மே 2017 இதழ்