ஜக்கி அவர்களே… பதில் சொல்லுங்கள்!
ஜக்கிவாசுதேவ் -தொலைக்காட்சிகளுக்கு பேட்டிஅளித்துவருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.
‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா?
ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் -கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்?
எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன் மேய்ச்சல் பகுதியில்தானே இந்த மய்யம் கட்டப்பட்டிருக்கிறது. இதை அவரே ஒப்புக் கொள்கிறாரா?
ஈஷா நிறுவன அதிகாரிகள் முறையான அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி வருவதால் நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை அதிகாரி வேலைகளை நிறுத்துமாறு 2.11.2012இல் தாக்கீது அனுப்பியதோடு, 24.12.2012 அன்று, அந்த இடத்தை மூடி சீலிடு வதற்கு தாக்கீது அனுப்பப்பட்டதையும், இது நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த மனுவில் இடம் பெற்றிருப்பதையும் அவரால் மறுக்க முடியுமா?
இந்த மய்யத்துக்கு யார் வேண்டுமானா லும் வரலாம்; அனைவருக்கும் கதவு திறந்தே இருக்கிறது என்பதை உணர்த்தவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியை அழைத்தோம், என்கிறார் ஜக்கி. அனைவருக்கும் பொதுவானது தான்அந்தமய்யம் என்றால் முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் சேர்ப்பீர்களா? அங்கே தரப்படும் யோகா, ஆன்மீகப் பயிற்சிகளுக்கு கட்டணம் வாங்குவது கிடையாதா?
5 இலட்சம், 7 இலட்சம் கட்டணமாக செலுத்தி, மய்யத்தில் சேர்த்த தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அங்கே வெளி நாட்டுக் காரர்களுக்கு சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று காவல்நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் புகார்களும், வழக்குகளும் வந்திருக்கின்றனவே, இதற்கு அவரது பதில் என்ன?
திருமணம் செய்து கொள்ளாமல் ‘பிரம்மச்சரிய’ வாழ்க்கையை போதிக்கும் மய்யத்தின் குரு தானும் திருமணம் செய்து கொண்டு தனது மகளுக்கும் ஆடம்பராக திருமணம் நடத்தியது ஏன்?
15,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவர், ஆதியோகி. அவர் 112 யோக கட்டளைகளை கூறியிருக்கிறார் என்கிறார் ஜக்கி. 15,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் இருக்கிறதா? அதற்கு சான்றுகள் உண்டா?
ஆதியோகிக்கு மதம் கிடையாது என்கிறார் ஜக்கி. அப்படியானால் இந்துமதப் பண்டிகை நாளான ‘மகா சிவராத்திரி’ நாளை அந்த சிலை திறப்புக்கு தேர்வு செய்தது ஏன்? மோடி ‘மகாசிவராத்திரி’ பெருமையைத் தானே அந்த விழாவிலும் பேசினார். ஈஷா மய்யம் மதம் கடந்தது என்றால், சிவராத்திரி முழுதும் கண் விழித்தால், ‘சிவலோக பதவி’ அடையலாம் என்ற இந்து மதக் கொள்கையை ஏற்று, இரவு முழுதும் கண் விழித்து, ஆண்டுதோறும் கூடி கும்மாளம் போட்டு, வன விலங்குகளை மிரட்டும் ‘சிவராத்திரி’ கொண்டாட் டங்களை நடத்துவது ஏன்?
- ‘இந்து’ என்பது மதமல்ல; அது இந்த தேசம். இந்த தேசத்தில் உள்ள மண்புழுகூட ‘இந்து’ மண்புழுதான் என்கிறார், ஜக்கி. இது ஆர்.எஸ்.எஸ் பேசும் இந்துராஷ்டிர கொள்கை அல்லவா? சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைப் பரப்புவதற்கான புதிய தந்திரங்களே இந்த மய்யத்தின் நோக்கம் என்று கூறினால், அதை அவரால் மறுக்க முடியுமா? ‘இந்து’ என்பது ‘தேசம்’என்றால், தேசத்துக்கு இந்த பெயரை சூட்டியது யார்? இந்த தேசம் ‘உருவாகும்’ போதே பெயரையும் சேர்த்துக் கொண்டு உருவாகியதா?
- கடவுள் நம்பிக்கையில் மூழ்கி, கடவுளிடம் வேண்டுதல்களை வைக்கும்போது அவை நிறைவேறாத நிலையில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருவதால், இளைய தலைமுறையிடம் ‘வேண்டுதல்களை’தவிர்த்து, தன்னைத் தானே உளத்தூய்மைப்படுத்திக் கொள்வதே ஆதியோகி சிவனின்’ சிலை நிறுவியதன் நோக்கம் என்கிறார் ஜக்கி. ஆக, இளைய தலை முறையிடம் கடவுள் மத நம்பிக்கைகள் குறைந்து வருவதால், அதை உயிர்ப்பிக்க கடவுள், மதங்களுக்கான புதிய கருத்துகளை கட்டமைக்கும் முயற்சியில் ஜக்கி இறங்கியிருக்கிறாரா?
- மனிதன் தனக்குத்தானே சுயத்தைத் தேட வேண்டும் என்பதுதான். இவரின் தத்துவம் என்றால், இதைப் பரப்புவதற்கு ஒரு நிறுவனம் தேவையா? ஒரு குரு தேவையா? ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துக் கொண்டு அதற்கு இலட்சக்கணக்கில் நிதி தந்து ஒரு குருவின் வழி காட்டலில்தான் ஒரு மனிதன் தனக்குள் தனது ‘சுயத்தை’ தேட முடியுமா?
- உடல் உழைப்பையும் ஏதோ ஒரு வேலை வாய்ப்பில் கிடைக்கும் ஊதியத்தை யும் சார்ந்து வாழும் கோடானுகோடி மக்கள் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினை களுக்கே போராடுகிறார்கள். கோடி கோடியாக பணத்தை செலவிட்டு ஆடம்பர வாழ்க்கையில் புரளுகிறது, ஒரு கூட்டம். இந்த இரண்டு பிரிவினரையும் அப்படியே தக்க வைத்துக் கொண்டு அவர்களின் வாழ்நிலையை மாற்றாமல் தங்களுக்குள் ‘சுயத்தை’க் கண்டறிந்தாலே வாழ்க்கை முழுமையாகிவிடும் என்று ஜக்கி கூறுகிறாரா? ஜக்கியின் ‘உபதேசம்’ செல்வந்தர்களுக்கா? ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கா? அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் ஆன்மிகத்துக்குள் அடங்கியிருக்கிறது என்று ஜக்கி கூறுகிறாரா?
- யோக நிலை என்ற உச்சத்தை அடைந்துவிட்டதாகக் கூறும் ‘யோக குரு’ கோபப்படலாமா? தன்னை எதிர்த்து, கேள்விகள் வரும்போது சீறுவதும் சினத்தைக் காட்டுவதும், தன்னை ‘ஜத்குரு’ என்று அழைக்காமல் பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தன்னகந்தையில் மூழ்கிக் கிடப்பதும், தன்னை எதிர்ப்பவர்கள் மூளை இல்லாதவர்கள் என்று ஆத்திரத்தின் உச்சிக்குப் போய் வார்த்தைகளைக் கொட்டுவதும்தான், யோக நிலையின் அடையாளங்களா? அல்லது சராசரி மனிதர்களின் உணர்வுகளா? ‘ஜக்கி’ பதில் சொல்வாரா?
- ‘இது நான் பணம் கொடுத்து வாங்கிய ஜமீன் (நிலம்). இங்கே எந்த சட்ட மீறலும் இல்லை’ என்று பேசும் ஜக்கி அவர்களே! உங்களுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? 112 யோகக் கலைகளின் வழியாக நீங்களே தவமிருந்து யோக நிலையை எட்டியதால் பணம் தங்கள் காலடியில் தானாக வந்து வீழ்ந்ததா? அல்லது பெரும் செல்வத்தைத் திரட்டிய பிறகு அதை முதலீடாக்கி யோக நிலைக்கு வந்து சேர்ந்தீர்களா? பதில் சொல்லுங்கள்!
நிமிர் மார்ச் 2017 இதழ்