மோடி ஆட்சியில் பறிபோகும் உரிமைகள்
“நாடாளுமன்ற ஜனநாயகத்தை தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக் கட்டினர் பாசிஸ்டுகள்” என்றார் ஜெர்மானிய சிந்தனையாளர் ஹன்னா அரெண்ட். உலகம் முழுவதும்உள்ளபாசிஸ்டுகள்ஆட்சிஅதிகாரம் என்ற வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம் ஜனநாயகத்தை ஒழிப்பதில் முனைப்பாகஉள்ளனர்என்பதற்குதற்போதைய இந்திய அரசாங்கம் மற்றுமொரு சாட்சி. ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களில் மக்களை மயக்கி, கார்பரேட்களின் உதவியுடன் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி இந்திய ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கி வருகிறது. கார்பரேட்களுக்கான தங்குதடையற்ற உதவிகள், மக்கள் விரோத கொள்கைகள், அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், வளர்ந்து வரும் வகுப்புவாதம் , அறிவிப்புடன் நின்றுவிடும் திட்டங்கள், அதிகரிக்கும் உள்நாட்டு குழப்பங்கள் என முதல் இரண்டு வருட ஆட்சியில் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இவர்களின் மூன்றாவது ஆண்டு ஆட்சியில் அதிகரித்தன. அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வும் ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா வேகமாக மாறி வருவதை தெளிவாக உணர்த்துகின்றன.
நவம்பர் 8 இரவில், ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் ஒற்றை அறிவிப்பு எமர்ஜென்சிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அறிவுக்கு ஒவ்வாத, முட்டாள் தனமான இந்த அறிவிப்பால் பொதுமக்களின் பெரும்பான்மையினர் தவித்துக் கொண்டிருக்க, இவை அனைத்தும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கம் என்று வாய்கூசாமல் பேசினர் பிரதமரும் அவரின் சகாக்களும். அரசாங்கத்தின் இந்த விவேகமற்ற முடிவு குறித்து மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்க அதை குறித்த எந்த கவலையும் கொள்ளாமல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துவருகின்றனர். நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது வாய்ப்பில்லை என்று முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கூறிய போதும் தங்களின் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் மும்முரமாக உள்ளனர் சங் பரிவார்கள். மாநில சட்டமன்ற தேர்தலையே ஆறு கட்டமாக நடத்திக் கொண்டிருக்கும் தற் போதைய சூழலில், நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால், வருடம் முழுவதும் தேர்தலை நடத்தி னாலும் நடத்துவார்கள்.
மக்களுக்கான உரிமைகளை சட்டப்பூர்வமாக இல்லாமல் ஆக்கும் முயற்சியில் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் இறங்கியுள்ளது என்பதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் திருத்தங்கள் நல்லதொரு சான்று. சுதந்திர இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமையாக தகவல் அறியும் உரிமை சட்டம் பார்க்கப்படுகிறது. ஆனால் அதையும் ஒன்றும் இல்லாமல் செய்யும் வகையில் மத்திய அரசாங்கம் மாற்றங்களை கொண்டுவர உள்ளது.
தகவல்களை கோரும் நபர் இறந்துவிட்டால், அவர் கோரிய தகவலை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இவர்கள் கொண்டு வர துடிக்கும் திருத்தங்களில் ஒன்று. இந்த திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டால், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துபவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரிக்கும் என்பதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டுமக்களின் நலன்களில் அக்கறைகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நலத்திட்டங்களையும் வழங்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்த ஆதார் திட்டத்தை எதிர்கட்சியாக இருக்கும் போது தீவிரமாக எதிர்த்த பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்திற்கும் ஆதார் என்று கூறி வருகிறது. குறிப்பிட்ட சில திட்டங்களை தவிர்த்து ஏனைய அரசாங்க திட்டங்களுக்கோ அரசாங்க உதவிகளை பெறுவதற்கோ ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிய போதும் அதை காதில் வாங்காமல் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்கும் ஆதார் அவசியம் என்று கூறி தனது கீழ்த்தரமான போக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த விபரீத முடிவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்க, மற்றொரு புறம் ஆதார் தகவல்கள் திருடப்படும் செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன.
காஷ்மீரில் உருவாக்கிய சிக்கல்
அமைதியாக இருந்த கஷ்மீர் பள்ளத்தாக்கை மீண்டும் 1980களின் நிலைக்கு கொண்டு சென்றதில் பா.ஜ.க அரசாங்கம் முழுமையான வெற்றி கண்டுள்ளது. ஜீலை 8, 2016ல் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வாணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மத்திய அரசாங்கம் தெளிவான முடிவுகளை எடுக்காத காரணத்தால் அங்கு இன்றுவரை பிரச்சனை தொடர்கிறது.
இதுவரை இல்லாத அளவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் கூட வீதிகளில் இறங்கி கற்களை வீசுகின்றனர். “காஷ்மீரில் எங்களின் கடுமையான கொள்கை தொடரும்’’ என்று பாரதிய ஜனதா தலைவர்கள் ஆவேச பேட்டிகளை கொடுத் தாலும் அங்கு நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாகலாந்தில் சுயாட்சி, தனி நாடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடும் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களுடன் உடன்படிக்கை கையெழுத்து போடுவதற்கு கூட தயங்காத மத்திய அரசாங்கம் கஷ்மீர் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்த கள்ள மௌனம் சாதிக்கிறது?
காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் கொலை செய்யப்படுவது இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. சமீபத்தில் காஷ்மீரில் இந்திய இராணுவ வீரன் பயாஸ் கடத்தி கொலை செய்யப்பட்டார். தீவிரவாதிகள் இவரை கடத்தி கொலை செய்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், “காஷ்மீர் பிரச் சனையை மேலும் தீவிரமாக்குவதற்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் சம்பளம்பெறும்துரோகிகள்ஏன்இந்தகாரியத்தை செய்திருக்கக் கூடாது” என்று கேள்வி எழுப்புகிறார் குஜராத் உளவுத்துறையில் பணியாற்றி தற்போது அரசாங்கத்தால் குறிவைக்கப்படும் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட்.
2013ல்இந்தியஇராணுவத்தினர் மீதுதாக்குதல் நடத்தப்பட்ட போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தான் வளையல்களை அனுப்பவுள்ளதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான ஸ்மிர்தி இராணி கூறினார். இப்போது இந்திய இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் தினச் செய்திகளாகி விட்ட நிலையில், இராணி மோடிக்கு வளையல்களை அனுப்பி விட்டாரா, எத்தனை வளையல்களை அனுப்பினார் என்று எதிர்கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி களை எழுப்புகின்றனர். தேசபக்தி வேஷத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் இவர்களின் உண்மையான தேச பக்தியை மக்கள் தற்போது பார்த்து வருகின்றனர். (வளையல்களை அனுப்புவது என்ற போராட்ட வடிவமே பெண்களை இழிவுபடுத்தக் கூடிய போராட்ட வடிவம்). வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதம் கோரும் குழுக்களின் பிரச்சனை, சத்தீஸ்கர், ஒடிஸா, ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களில் தொடரும் மாவோயிஸ்ட்களின் பிரச்சனை, ஹரியானாவிலும் குஜராத்திலும் அவ்வப்போது நடைபெறும் இட ஒதுக்கீடு கோரிக்கை போராட்டங்களில் சேதமாக்கப்படும் பொது சொத்துகள் என பிரச்சனை இல்லாத மாநிலங் களே இல்லை எனும் அளவிற்கு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிவகைகளை காணாமல் அவற்றை வளர்த்து வருகிறது பாரதிய ஜனதா அரசாங்கம். தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களில் இருந்து காப்பாற்றுங்கள், அவர்களின் படகுகளை மீட்டுத் தாருங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதே முதல்வரின் முழு நேர வேலையாக மாறிவிடும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
நாட்டில் இத்தனை உள்நாட்டு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க நமது நாட்டிற்கு தற்போது முழு நேர பாதுகாப்பு அமைச்சர் கூட கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கோவா முதல்வராக இருந்த மனோகர் பரிக்கரை (இவர் ஒரு சித்பவன் பார்ப்பனர்) பாதுகாப்பு அமைச்சராக கொண்டு வந்தார்கள். தற்போது அவர் மீண்டும் கோவாவுக்கு முதல்வராக சென்றுள்ள நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (இவரும் ஒரு பார்ப்பனர்)கூடுதலாக அந்த பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி..இது மோடி உதிர்த்த தாரக மந்திரங்களில் ஒன்று. ஆனால் தங்களின் கட்சிக்கு எவ்விதத்திலும் உதவி செய்யமாட்டார்கள் என்பதற்காக தமிழகத்தை இவர்கள் எவ்வாறு வஞ்சித்து வருகின்றனர் என்பதையும் நாம் பார்த்துதான் வருகிறோம். காவிரி பிரச்சனையில் தொடங்கி ஜல்லிக்கட்டு பிரச்சனைவரை எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு நிலையில்தான் நாம் உள்ளோம். மக்களுக்கு கேடுவிளைவிக்கும் திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு வேகமாக அனுப்புபவர்கள் தமிழக மக்களின் நலனிற்காக எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவருவதில்லை, இருக்கும் திட்டங்களையும் ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் உயர்கல்விக் கூடம் எனப்படும் எய்மஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று முந்தைய பட்ஜெட்டில் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகஅரசு முழுமையான ஆய்வுகளை நடத்தி, அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சிறந்த இடமாக அறிவித்தது. இத்தனையும் செய்த பிறகும், தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒரு இடம் கூட சரியாக இல்லை என்று பா.ஜ.க. அரசாங்கம் கூறியது.
1970ல் தொடங்கப்பட்ட சேலம் இரும்பு உருக்காலை, 2000 தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும் 3000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. தனிச்சிறப்புகளை கொண்ட இந்த உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அதன்பெரும்பான்மைபங்குகளைதனியாருக்கு விற்பனை செய்யவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்கள் அவையில் அறிவிக்கப் பட்டது. பிரதமர் அலுவலகமும் இதற்கு விரைந்து அனுமதி வழங்கியது. போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்ட தமிழர்கள் இந்த உருக் காலையை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதற்கு வலுவான எதிர்ப்புகள் கிளம்பவே, அவ்வாறு எந்த திட்டமும் தங்களிடம் இல்லை என்று மறுத்தார் மத்திய அமைச்சர் அனந்தகுமார். ஆனால் இதுவும் எப்பொழுதும் மாற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே தமிழக மக்கள் உள்ளனர்.ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் தமிழக விவசாய நிலங்களை சீரழிக்கும் மத்திய அரசாங்கம், டெல்லியில் போராடிய விவசாயிகளை கண்டு கொள்ளாமல் இருந்தது தமிழகம் மீதான அவர்களின் விரோதத்தை தெளிவாக காட்டியது. தினமும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திய விவசாயிகளை பிரதமரும் அமைச்சர்களும் கண்டு கொள்ளாத நிலையில், அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினர் தமிழக பா.ஜ.க. தலைவர்கள்.
கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலுமாக சிதைக்கும் வகையிலும் மாநிலங்களின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கும் விதத்திலும் பா.ஜ.க.ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் இவர்கள் சொல்படி ஆடவில்லை என்பதற்காக அதிமுக கட்சியின் சின்னத்தை முடக்கி, கட்சியை இரண்டு பிரிவுகளாக்கி, ஒரு பிரிவின் தலைவர்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்துவருகின்றனர். ஊழலிலேயேதிளைத்த பா.ஜ.க.வினர் பரிசுத்தவான்கள் வேஷம் போடுவதை காணும் போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக கட்சியை உடைத்ததை போன்று ஒடிஸாவில் தங்கள் கட்சியையும் உடைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக பிஜு ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.
அருணாசல பிரதேசத்தில் ஒருவரை தவிர ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டுவெளியே வருகின்றனர்.டெல்லிமுதல்வர் கெஜ்ரிவாலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மாநில அரசாங்கத்திடம் எவ்வித அறிவிப்பும் செய்யாமல் இராணுவத்தினரை நிறுத்தியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
வளர்ச்சி, முன்னேற்றம் முகமூடிகளை தங்களால் அதிக நாட்கள் அணிந்திருக்க முடியாது என்பதை நன்கறிந்த சங்பரிவார்கள் தங்கள் வழக்கமான பார்முலாவிற்கு திரும்பிவிட்டனர். வகுப்புவாத வன்முறையும் வெறுப்பு பேச்சுகளும் உச்சபட்ச அளவில் பிரயோகிக்கப்படுகின்றன.’ ‘‘இந்த அளவிற்கு வகுப்புவாத பிரிவினைகள் நாட்டில் இருந்ததா என்பது சந்தேகம்தான்’ என்றுதங்கள் அச்சத்தை தேசநலனில் அக்கறை கொண்டவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்று கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் பக்குவம் சிறிதும் இல்லாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பின் தலைவர்கள் அனைத்தையும் ‘தேச துரோகி’ என்ற சொற்களில் அடைக்க பார்க்கின்றனர்.
இந்தியா என்ற ஒட்டுமொத்த தேசத்திற்கும் தான் பிரதமர் என்ற எண்ணம் மோடிக்கு சிறிது கூட இருப்பதாக தெரியவில்லை. இந்து ராஷ்டிரத்தின் பிதாமகனாகவே தன்னை அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தனது முஸ்லீம் விரோதபோக்கைவெளிப்படுத்தஅவர்என்றும் தயங்கியது இல்லை. பிரதமர் என்ற பதவி அவருக்கு என்றும் தடையாக இருந்ததில்லை. சட்டங்கள் தொடங்கி மேடை பேச்சுகள் வரை அனைத்திலும் தனது முஸ்லிம் விரோத போக்கை வெளிப்படுத்தியே வருகிறார். சில மாதங்களுக்கு முன்கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்ட மசோதா இதற்கு ஒரு சிறு சான்று. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த இந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் ஆகியோர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு எந்ததடையும் இல்லை என்று சட்டம் சொல்கிறது. அதே சமயம் பர்மாவில் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்கள் குறித்து இந்த மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலுமாக சிதைக்கும் வகையிலும் மாநிலங்களின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கும் விதத்திலும் பா.ஜ.க.ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.
சக மனிதர்களுடன் பரஸ்பரம் பழகத் தெரியாதவர்களுக்கு மாட்டு அரசியல் நன்றாகவே கைகொடுக்கிறது. மாட்டை வைத்திருந்தாலும் குற்றம், சாப்பிட்டாலும் குற்றம் என வித்தியாசமான சட்டங்களை அரசாங்கம் அமல்படுத்திக் கொண்டிருக்க , சங்பரிவார அடிவருடிகளோ தங்கள் அத்துமீறல்களை வீதிகளில் நடத்தி வருகின்றனர். சங்பரிவார்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைப்பதை விட பெரிய முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. சங்பரிவார்கள், கார்பரேட்டுகள் இந்த இரண்டு பிரிவினரையும் தவிர்த்து ஏனைய அனைத்து தரப்பினரும் பா.ஜ.க.ஆட்சியில் பாதிக்கப்படுபவர்களே. இவர்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது இந்த அனைத்து தரப்பினரின் கடமையாகும். மதச்சார்பின்மை சோசியலிசம், இந்துத்துவ எதிர்ப்பு, தொழிலாளர் நலன் என்ற சித்தாந்தங்களை வெறும் வாயளவில் பேசிக் கொண்டிராமல் செயலில் காட்ட வேண்டிய தருணம் இது. அரசாங்கம் எத்தனை மோசமான திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அடிமை மனநிலையில் இருந்து பொதுமக்களும் மாற வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை அப்படியே ஏற்றுக் கொண்டு பா.ஜ.க. ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று நம்பும் மக்களை என்னவென்று சொல்வது! பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை பொதுமக்கள் உறுதியாக எதிர்கொள்ளவில்லையென்றால், ஹன்னா அரெண்ட் கூறியதை போல் பாசிசவாதிகள் ஜனநாயகத்தை எளிதாக ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.
புதிய விடியல்
நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்