இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது.

சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது.

அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில் பிரிவினையைத் தூண்டுவதாகவும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை குறிப்பதாகவும் இருந்ததுதான் குற்றமாக சுமத்தப்பட்டது. இந்த நிகழ்வை பொருத்த வரையில் சில மாணவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் உண்மையில் தேசத் துரோகக் குற்றம் புரிந்தவர்கள் தானா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் உண்மையில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி என்னவெனில், சுய நிர்ணய உரிமை கோரிக்கை எப்படிக் குற்றமாகும் தேசம் என்பதும் தேசியம் என்பதும் எதைக் குறிக்கின்றன என்பதுதான். 

 

இந்த கோட்பாட்டிற்கு ஒரு கருத்தியலாகவடிவம் கொடுத்ததன் பின்னணியில் லெனின், ஸ்டாலின் மற்றும் உட்ரோவில் சன் ஆகியோர் பெரும்பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அளித்த விளக்கங்கள் உடனடியாக சட்டப்பூர்வமான உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அய்க்கியநாடுகள்  பட்டயத்தில் அது சேர்க்கப்பட்டதற்கு பின்னரே அது சட்டப் பூர்வ அங்கீகாரம் பெற்றது. அய். நா. பட்டயத்தின் பிரிவு 1(2), “சம உரிமை மற்றும் மக்களின் சுய  நிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் உலக அமைதிக்கான பிற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும்”

– தனது முதன்மை நோக்கங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறது. அதை போன்றே பட்டயத்தின் பிரிவு 55 “சம உரிமை மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் மீதான மதிப்பின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் நட்பான உறவையும் ஏற்படுத்துவதற்கு தேவையான நிலையான சூழல்களை ஏற்படுத்த” என்று குறிப்பிடுகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலக அளவில் மனித உரிமைகள் குறித்து பரவலான புரிதலை ஏற்படுத்தியது. அந்நிலையில் சுய நிர்ணய உரிமையும் மனித உரிமைகளின் வரை யறைக்குள் கொண்டுவரப்பட்டது.

அய். நா. பட்டயத்திற்கு பிறகு “காலனிய ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் விடுதலை குறித்த அறிவிப்பு” என்ற தலைப்பில் 1960-ஆம் ஆண்டில்அய்.நா.பொதுஅவைநிறைவேற்றியத் தீர்மானமே இது குறித்த அடுத்த பெரும் நகர்வு என்று கூறலாம். அந்தத் தீர்மானம் நாடுகளை அடக்கி ஆளும் “காலனியாதிக்கத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் நிபந்தனையற்ற முடிவுக்குக் கொண்டு வருவதன் தேவை”யைவலியுறுத்தியது.

“ஒரு நாட்டின் ஒற்றுமை மற்றும் எல்லையை பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ குலைக்கும் எந்த ஒரு செயலும் அய். நா. பட்டயத்தின் நோக்கத்துக்கும் கோட்பாடுகளும் எதிரானது” என்று அத்தீர்மானம் கூறியது.

அதைத் தொடர்ந்து, 1970-ஆம் ஆண்டு “நட்புறவு அறிக்கை” என்ற தலைப்பில் அய். நா. பொது அவை நிறைவேற்றியத் தீர்மானம் இது குறித்து விளக்குகிறது. “அய். நா.பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம உரிமைகள் மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை கோட்பாடுகளின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டினை நிர்ணயிக்கவும் தங்கள் பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சியினை மேற்கொள்ளவும் எவ்வித வெளி தலையீடுமற்ற முழுமையான உரிமை உண்டு என்பதோடு இந்த உரிமையை மதிப்பது ஒவ்வொரு அரசின் கடமையும் ஆகும்” -என்று இத்தீர்மானம் வெளிப்படையாகவே பறை சாற்றுகிறது.

1966-ஆம் ஆண்டு அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது, அப்போது நிறைவேற்றப்பட்ட“குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” மற்றும் “பொருளாதார, சமூக மற்றம் பண்பாட்டு உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” ஆகியவற்றிலும் சுயநிர்ணய உரிமை இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்ட பின் சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது ஓர் உரிமை என்ற வடிவத்தை முழுமையாக பெற்றது. இந்த இரு உடன்படிக்கைகளிலும் பிரிவு1 இவ்வாறு குறிப்பிடுகிறது.“அனைத்துமக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உள்ளது. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டினை சுதந்திரமாக நிர்ணயிக்கவும் தங்கள் பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சியினை சுதந்திரமாக மேற்கொள்ளவும் முடியும்.” எனவே உலக அளவில் சுய நிர்ணய உரிமையைப் புரிந்து கொள்வதற்கு இந்த இரண்டு உடன்படிக்கைகளும் அடிப்படைகளும் அய். நா. பட்டயம் உள்ளிட்ட பிற ஆவணங்களும் அடிப்படையானவை.

இந்தியாவை பொருத்த வரையில், இந்திய அரசியல் சட்டமோ அல்லது வேறு எந்த இந்திய சட்டமோ சுய நிர்ணய உரிமை குறித்து வெளிப்படையாக எதுவும் விளக்கவோ அல்லது அது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கவோ இல்லை. எனவே இது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ள பல்வேறு பன்னாட்டு நிகழ்வுகளில் இந்தியா வெளிப்படுத்திய கருத்துக்களே ஆதாரங்களாக உள்ளன.

சுயநிர்ணய உரிமை குறித்து இந்தியா வெளிப் படுத்திய கருத்துக்களில் மிகவும் அதிகாரப் பூர்வமானதாக கருதப்படுவது 1979-ஆம் ஆண்டு இரண்டு மனித உரிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது இந்தியா வெளியிட்ட குறிப்புதான். அந்த குறிப்பில்,

இந்திய குடியரசு “சுய நிர்ணயஉரிமை’’ என்ற சொற்களில் பொதிந்து உள்ள பொருள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்தும், இறையாண்மையுள்ள சுதந்திர நாட்டின் மக்களுக்குப் பொருந்தாது, அதுவே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையாக அமையும் என்றும்” குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய சட்ட வரையறைகள் என்பவை ஒப்புதலின் அடிப்படையிலேயே இருப்பதால் இந்த மனித உரிமை ஆவணங்களை இந்தியா ஒப்புக்கொண்டதை மேற்சொன்ன குறிப்புடன் இணைத்தே பார்க்க வேண்டும். இதன் மூலம் சுய நிர்ணய உரிமையை குறிப்பிட்ட வரையறைகளுக்குட்பட்டே இந்தியா ஆதரிக்கிறது. மாறும் ஆட்சிகளுக்கு அப்பாற்பட்டு இதுவே இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்தாக கொள்ளப்பட வேண்டும். எனவே இந்தியாவை பொருத்த வரையில் சுய நிர்ணய உரிமை என்பது காலனியாதிக்கம் போன்ற அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற சூழல்களுக்குப் பொருந்தாது. எனவே சுய நிர்ணய உரிமை என்பது இந்தியாவிற்குள் எவருக்கும் பொருந்தாது. ஏனெனில் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட பின் இங்கு அந்நியர் ஆதிக்கம் என்ற நிலை இல்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டினையே வங்காள தேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளும் எடுத்தன. ஆனால் பிரான்சு,ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த நிலைப்பாட்டினை ஏற்கமறுத்தன. எனவே சுய நிர்ணய உரிமை என்பது உலக சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் அது பொருந்தும் சூழல்கள் குறித்து பல்வேறு நாடுகளுக்கிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சுயநிர்ணய உரிமை கோட்பாடு என்பது காலனியாதிக்கத்தின் கீழ் தங்கள் உரிமைகளை இழந்த மக்களின் பொருட்டே எழுந்தது என்ற போதிலும் அந்த கோட்பாட்டின் உட்கூறு எத்தகைய வெளி சக்திகளிடமிருந்தும் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை காத்துக் கொள்ளும் ஒட்டுமொத்த உரிமையைக் குறிப்பதாகவே உள்ளது. எனவே சுய நிர்ணய உரிமையின் அடிப்படை என்பது காலனியாதிக்கம் மட்டுமே அல்ல. மாறாக எந்த வகையான ஆதிக்கத்தையும் அது குறிக்கும்.

உலக அளவில் சுய நிர்ணய உரிமை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு இவ்வாறு உள்ள நிலையில் இந்திய சட்டங்கள் இது குறித்து என்ன சொல்கின்றன? சுய நிர்ணய உரிமை குறித்து இந்திய அரசியல் சட்டமும் பிற சட்டங்களும் நேரடியாக எதுவும் கூறாத போதும், சுய நிர்ணய உரிமையை கோருவதையும் அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான சாத்தியங்களையும் இந்தியச் சட்டங்கள் தடுக்கவும் இல்லை. அரசியல் சட்டத்திலும் பிற சட்டங்களிலும் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லைஎன்பதால்அந்த உரிமையை கோர முடியாது என்று வாதிட முடியாது. மாறாக, சுய நிர்ணய உரிமையைக் கோருவதற்கான தெளிவான சாத்தியம் உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும் இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரிப்பதற்கு ஆதரவாகவும் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளது.

சுய நிர்ணய உரிமையின் முக்கியமான கூறு என்பது அதன் பிரிந்து செல்லும் உரிமையே ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து ஒரு பகுதி பிரிந்து ஒரு புது கட்டமைப்பாக உருவாகலாம் அல்லது வேறு கட்டமைப்புடன் இணையலாம், இதற்கு வழிவகுக்கும் கோட்பாடு புற சுய நிர்ணய உரிமை.

பிரிவினைக்கு இட்டுச் செல்லும் இந்த சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று கோருவதே தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப் படையில் குற்றமாகுமா?இதைநிர்ணயிப்பதற்கு முன் தற்போதுள்ள அரசியல் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் சீர் தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.

இந்தியாவின் நிலப் பரப்பு, எல்லை குறித்து இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளப் பிரிவுகள் இதற்கு விளக்கம் தருகின்றன. அரசியல் சட்டத்தின் பிரிவு இந்தியாவின் நிலப்பரப்பு குறித்து இவ்வாறு வரையறுக்கிறது. 1. மாநிலங்களின் நிலப்பரப்பு. 2.முதல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள யூனியன்பிரதேசங்களின்நிலப்பரப்பு 3. பிற்பாடு இணைக்கப்படும் பகுதிகளின் நிலப்பரப்பு. ஆக, இந்தியாவின் நிலப்பரப்பு என்பது தற்போதுள்ள நிலப்பரப்பை மட்டும் குறிக்கவில்லை. பிற் காலத்தில் இணைக்கப்படும் நிலப்பரப்பையும் குறிக்கிறது. அதாவது பிற நாட்டின் பகுதியாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது முழுமையாக வேறொரு நாடு அல்லது நாடுகள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைப்பதையும் அது குறிக்கிறது. பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையைக் கோருவதற்கான அத்தனைநியாயங்களையும்புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் இந்த ஒரு பிரிவே போதுமானது.

இந்தியாவிலிருந்து ஒரு பகுதி பிரிந்து போவதை குறித்து இந்திய அரசியல் சட்டம் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் அப்படிபிரிந்துபோவது தடை செய்யப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே போன்றதொரு கேள்வி உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்தது.

சுய நிர்ணய உரிமை குறித்து இந்திய அரசியல் சட்டமும் பிற சட்டங்களும் நேரடியாக எதுவும் கூறாத போதும், சுய நிர்ணய உரிமையை கோருவதையும் அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான சாத்தியங்களையும் இந்தியச் சட்டங்கள் தடுக்கவும் இல்லை.

இந்தியாவின் கிழக்கு எல்லையில் இந்தியா விற்கும் பாகிஸ்தானுக்கும் (தற்போதைய வங்காளதேசம்) இடையில் நிலப் பரப்பைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான சிக்கல் உச்ச நீதிமன்றத்தின் முன் வந்தது. 1958-ஆம் ஆண்டு “நேரு-நூன் ஒப்பந்தம்” என்ற பெயரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி இந்தியாவின் கிழக்கில் உள்ள பேருபாரி பகுதியில் பாதியை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பது என்றும் மீதியுள்ள பகுதி இந்தியாவுடனேயே இருப்பது என்றும் முடிவானது. மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிக்கியுள்ள சில பகுதிகளையும் கை மாற்றிக் கொள்வது பற்றியும் அந்த ஒப்பந்தம் குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, அப்போது (1951) மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த பி.சி.ராய், பிரதமர் நேருவிடம் முறையிட்டார். இதில் உள்ள சட்டச் சிக்கல்கள் காரணமாக பிரிவு 143(1)-இன் கீழ் மூன்று கேள்விகளை இந்திய குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பி அதன் கருத்தைக் கேட்டார்.

1.பேருபாரி யூனியன் தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் தேவையா?

2.தேவையெனில், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 3 உடன் தொடர்புடைய நாடாளுமன்றச் சட்டம் போதுமானதா அல்லது அரசியல் சட்டத்தின் பிரிவு 368-இன் கீழ் சட்டத் திருத்தம் கொண்டு வருவதுஅவசியமா?அந்தத்திருத்தம், இருக்கும் சட்டத்துடன் கூடுதலாகவா அல்லது அதற்கு மாற்றாகவா?

3.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடை யிலான பகுதிகளை கைமாற்றிக்கொள்ள இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 3 உடன் தொடர்புடைய நாடாளுமன்றச் சட்டம் போது மானதா அல்லது அரசியல் சட்டத்தின் பிரிவு 368-இன் கீழ் சட்டத் திருத்தம் கொண்டு வருவது அவசியமா? அந்தத் திருத்தம் ஏற்கனவே இருக்கும் சட்டத்துடன் கூடுதலாகவா அல்லது அதற்கு மாற்றாகவா?

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் அங்கமாக இருக்கக் கூடிய ஒரு பகுதியை பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பானது என்பதால் பிரிவு 1 -க்கும் அரசியல் சட்டத்தின் முதல் பட்டியலுக்கும் இடையே ஊசலாடுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. எனவே இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்த பிரிவு 368-இன் படி நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, சுய நிர்ணய உரிமையின் படி இந்தியாவிலிருந்து பிரிந்து போவது குறித்து உச்ச நீதிமன்றம் சில முக்கியமான செய்திகளை முன் வைத்தது. இந்த வழக்கில்வாதாடும்போது“இந்தியாவைச்சேர்ந்த ஒரு பகுதியை வேறொரு நாட்டிற்கு சாதகமாக பிரிக்க ஒரு சட்டம் இயற்றுவதன் மூலமோ, ஏன் அரசியல் சட்டத்தையே திருத்துவதன் மூலமோ கூட செயற்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை” என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 1(3)(சி) புதிதாக பகுதிகளை இணைக்கும் அதிகாரத்தைத் தருகிறதே ஒழிய இருக்கும் பகுதிகளை பிரிக்க அதிகாரம் வழங்கவில்லை என்றும் வாதாடப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது : “பிரிவு 1(3)(சி) புதிதாக பகுதிகளை இணைக்க அதிகாரம் எதுவும் தரவில்லை. பன்னாட்டுச் சட்டங்களின்கீழ் இறையாண்மை என்பதற்கு இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவதாக வேற்று நாட்டின் பகுதியை இணைப்பதற்கான அதிகாரம். அடுத்ததாக தன் நாட்டின் பகுதியை பிற நாட்டிற்கு சாதகமாக பிரித்துக் கொடுப்பதற்கான அதிகாரம். எனவே பிரிவு 1(3)(சி) என்பது இந்தியாவிற்கு இருக்கும் அடிப்படை உரிமையான பிறநாட்டின் பகுதியை தன்னுடன் இணைப்பதை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.”

எனவே அந்தப் பிரிவு என்பது வேற்று நாட்டின் பகுதிகளை இணைப்பதற்கு குறிப்பான அதிகாரத்தை வழங்குகிறது என்று புரிந்து கொள்வது தவறு என்று சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

‘‘இறையாண்மையின் முக்கிய கூறான வேற்று நாட்டின் பகுதிகளை இணைப்பது குறித்த அதிகாரம் அரசியல் சட்டத்தில் வெளிப் படை யாக வழங்கப்படாத போது அதே போன்று இறை யாண்மையின் மற்றொரு முக்கிய கூறான பிற நாட்டிற்கு சாதகமாக ஒரு பகுதியைப் பிரித்துத் தருவது என்பது மட்டும் அரசியல் சட்டத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க நியாயமில்லை.”

எனவே புதிதாக பகுதிகளை இணைப்பதோ இருப்பவற்றை பிரிப்பதோ அரசியல் சட்டத்தின் வரையறைக்குள் வராது என்றும் அது ஓர் அரசின் இறையாண்மையின் கீழ் வரக்கூடியது என்றும் உச்ச நீதிமன்றம் முன் வைத்த கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கருத்து சுய நிர்ணய உரிமை கோரிக்கைகளுக்கும் பிரிவினை கோரிக்கைகளுக்கும் தொடர்புடையதாக உள்ளது.

அதாவது, ஒரு பகுதியைப் பிரிப்பது என்பது அரசியல் சட்டத்தின் வரையறைக்கு வெளியே இருக்கிறது. அதனால், அந்த இறையாண்மை உரிமையை இந்திய அரசு செயற்படுத்தவேண்டும் என்று சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பது என்பது சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. சுய நிர்ணய உரிமை என்பது மிகவும் குறுகிய நோக்கில் மட்டுமே இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதும், அதன் விரிவான பயன்பாட்டை கோருவது என்பது சட்டப்படி தடைசெய்யப்பட முடியாதது. ஏனெனில் இப்படியானவை நடைமுறையில் அரசியல் ரீதியாக மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டியவை.

 

 

எனவே இந்திய அரசு ஒரு பகுதியைப் பிரிப்பதற்கு எவ்வித சட்டப்பூர்வத் தடையும் இல்லாத நிலையில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிவினை கோரிக்கை என்பது சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒன்றே.

இந்தச் சிக்கலில் மற்றொரு முக்கியமான கோணம் என்பது இவ்வாறு சுய நிர்ணய உரிமையையும் பிரிவினையையும் கோருவது சட்டப்படிக் குற்றமா அல்லது குற்றமாக கருதப்பட வேண்டிய ஒன்றா? உலக அளவில் சுய நிர்ணய உரிமை குறித்த இந்தியாவின் நிலைப் பாடு மற்றும் ஒரு பகுதியைப் பிரிப்பதை ஓர் இறையாண்மை உரிமையாக அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் இதனை நோக்கும் போது பிரிவினையை நோக்கிய சுய நிர்ணய உரிமையைக் கோருவதை சட்டப்படி குற்றமாகக் கருத முடியாது என்று வாதிடலாம். இந்தியாவின் ஒரு பகுதியை பிரிப்பது இறையாண்மை உரிமை எனும் போது ஒரு குறிப்பிட்டப் பகுதியை இந்தியாவில் வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் பிரித்து தருமாறு கோருவதை குற்றமாக கருத முடியாது. அந்த கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசுதான். இந்த முடிவு என்பது அரசியல் நகர்வுகள் மற்றும் கோரிக்கைகளின் வலுவைப் பொருத்ததாக அமைகிறது.

எனவே அடிப்படையான செய்தி என்ன வெனில், சுய நிர்ணய உரிமையை கோருவதற்கு மக்களை அணி திரட்டி ஓர் அரசியல் கோரிக்கையை முன் வைப்பது சட்ட விரோத மானது அல்ல. எனினும், அந்த கோரிக்கையை முன் வைப்பவர்களின் செயல்கள் வன்முறையாக இருப்பின், இருக்கின்ற சட்டங் களுக்கு எதிராக இருப்பின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெறுமனே சுய நிர்ணய உரிமையைக் கோருவதும் அதற்காக அரசியல் ரீதியாக அணி திரட்டுவதுமே குற்றமாக ஆகி விடாது.

எனவே, இந்தியாவின் ஒரு பகுதியை பிரிப்பதற்கான கோரிக்கைகளையே குற்றமாக ஆக்கும் இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை, இந்தியாவின் அரசியல் சட்டம் மற்றும் இறை யாண்மை நிலைப்பாடு ஆகியவற்றுடன் இணைந்தே பார்க்க வேண்டும். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்று இந்த கோரிக்கைகளை குற்றமாக்கும் சட்டங்கள் உச்ச நீதிமன்றம் கூறிய இந்தியாவின் இறையாண்மை உரிமையை கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதனை புரிந்து கொள்ள ஆர். எஸ். எஸ்.சின் அகண்ட பாரதம் கொள்கையை எடுத்துக் காட்டாக கொள்ளலாம். இந்த அகண்ட பாரதம் என்ற சிந்தனை என்பது தற்போது உள்ள இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் இந்தியாவை கற்பனை செய்வது.

அதாவது அரசியல் சட்டம் வரையறுத்த இந்தியாவின் வரைபடமாக அல்லாத ஒன்றை உருவாக்குவது பற்றிய கற்பனை. இந்த சிந்தனை அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்படலாமே ஒழிய தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட முடியாது. அகண்ட பாரதம் எவ்வாறு தற்போது இந்தியாவின் பகுதிகளாக இல்லாத ஒன்றை இந்திய அரசு ஒரு பகுதியைப் பிரிப்பதற்கு எவ்வித சட்டப்பூர்வத் தடையும் இல்லாத நிலையில் சுய நிர்ணய உரிமையின் அடிப் படையில் பிரிவினை கோரிக்கை என்பது சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒன்றே.

இணைத்து கற்பனை செய்கிறதோ அவ்வாறே தற்போது இந்தியாவின் அங்கமாக உள்ளப் பகுதிகளை இல்லாமல் கற்பனை செய்வதும் சட்டப் பூர்வமானதே. அதுவும் அரசியல் ரீதியாக முன்னெடுக்கத் தகுந்ததே. அதனை சட்டத்திற்கு எதிரான குற்றமாக கருதக் கூடாது. அந்த முன்னெடுப்பை ஏற்றுக் கொள்வதும் சாத்தியப்படுத்துவதும்முற்றிலும்அதன்அரசியல் வலுவைச் சார்ந்தது மட்டுமே.

எனவே தனது நிலப் பகுதியை பிரிக்கும் இறையாண்மை உரிமை ஓர் அரசுக்கு உள்ள வரை, பிரிவினையை நோக்கிய சுய நிர்ணய உரிமை தடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. எனவே அவ்வாறு பிரிவினையை நோக்கிய சுய நிர்ணய உரிமையைக் கோருவது குற்றம் அல்ல. இத்தகைய கோரிக்கைகளின் வெற்றியும் தோல்வியும் அதன் அரசியல் முன்னெடுப்பின் வலுவைச் சார்ந்தே உள்ளது.

(‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் ஸ்ரீனிவாஸ் புர்ஷா எழுதிய கட்டுரை )

தமிழில் பூங்குழலி

நிமிர்வோம் மே 2017 இதழ்

You may also like...